'பருவமே… புதிய பாடல் பாடல்' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 9

இளையராஜா இரண்டு பேரை தங்கள் தொடைகளில் தட்டச் சொல்லி ரிகார்ட் செய்து வெளிவ்நத அந்தப் பாடல் சூப்பர் ஹிட் பாடலாக அமைந்தது.
நெஞ்சத்தை கிள்ளாதே
நெஞ்சத்தை கிள்ளாதேடைம்பாஸ்

பருவமே… புதிய பாடல் பாடு: இளமையின் அதிகாலை சங்கீதம்

       சென்னை. விடியற்காலை. பழைய கணவர்கள் காபி குடித்துக்கொண்டிருக்க... புதிய கணவர்கள் காபி போட்டுக்கொண்டிருக்கிறார்கள். சின்னவீட்டிலேயே தூங்கிவிட்டு காரில் பறந்து பெரிய வீட்டுக்கு வரும் கணவர்கள் உலகின் சிறந்த பொய்களை தயாரித்துக்கொண்டிருக்கிறார்கள். முந்தைய நாள் நள்ளிரவு வரைக் குடித்துவிட்டு தூங்கி எழுந்தவர்கள் கடும் தலைவலியுடன், “இனிமேல் குடிக்கவே கூடாது…” என்று ஆயிரமாவது முறையாக நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் நான் நல்லபிள்ளையாக எழுந்து வாக்கிங் கிளம்பினேன்.

     சிறுவயதில் நான் வளர்ந்த அரியலூரில் வாக்கிங் உடலுக்கு நல்லது என்று தெரியாமலே தினசரி வாழ்க்கை நடைமுறையாக தினமும் பல கிலோமீட்டர்கள் நடந்திருக்கிறேன். காலை எழுந்தவுடனேயே பால் வாங்க பால் பண்ணைக்கு நடந்து செல்வேன். பால் வாங்கிவிட்டு அப்படியே இன்னும் கொஞ்சம் நடந்தால், எம்.எம். மிளகாய் மண்டிக்கு அருகில் ஒரு பெரிய சுவரில் ஏராளமான சினிமா போஸ்டர்கள் ஒட்டியிருப்பார்கள். போஸ்டர்களில் ‘காலைக் காட்சி’ சீமாக்களையும், ஜெயபாரதிகளையும்(ஜெயபாரதி நடித்த எல்லாப் படங்களுக்கும் அவர் வெற்று முதுகைக் காட்டிக்கொண்டு நிற்கும் ஒரே போஸ்டரைத்தான் ஒட்டியிருப்பார்கள்) ‘மாலைக்காட்சி’ அம்பிகா, ராதாக்களையும் மூச்சுகூட விடாமல் பார்த்து மூச்சுப்பயிற்சியும் செய்துவிட்டு திரும்பும் போது மனசெல்லாம் நிறைந்துவிடும். ஆனால் இன்று நடந்து செல்ல வேண்டிய இடங்களுக்கெல்லாம் பைக்கிலும், காரிலும் சென்றுவிட்டு நடப்பதற்கென்று காலைத் தனியாக எழுந்து நடக்கிறார்கள்.

அவ்வாறு வாக்கிங் செல்பவர்கள் தங்கள் உரையாடல்களில், தாங்கள் வாக்கிங் செல்வதை நடிகை பூஜா ஹெக்டேயுடன் வாக்கிங் சென்றதைப் போல் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள். அரசியல், சினிமா, இலக்கியம் என்று எதைப் பற்றி பேசினாலும் நைஸாக நடுவில் எப்படியாவது ‘வாக்கிங்’ என்ற வார்த்தையை நுழைத்துவிடுகிறார்கள்.

“ராகுல் காந்தியோட பாதயாத்திரை…” என்று ஆரம்பித்தால், “காலைல பார்க்ல வாக்கிங் போறப்ப கூட இதப் பத்தி பேசிகிட்டிருந்தோம்…” என்கிறார்கள். நான், “சென்னைல எந்தக் கடைலயுமே டீ நல்லால்ல…” என்று சொன்னால், “நான் காலைல வாக்கிங் போறப்ப ஒரு கடைல டீ குடிச்சேன். சூப்பரா இருந்துச்சு.” என்கிறார்கள். “பிரின்ஸ் படம் பாத்துட்டியா?” என்று கேட்டாலும், “நேத்து நைட்டு போலாம்ன்னு நினைச்சேன். அப்புறம் காலைல வாக்கிங் போறதுக்கு சீக்கிரம் எந்திரிக்கமுடியாது” என்று எதைப் பற்றி பேசினாலும் அதில் வாக்கிங்கைச் சேர்த்துக்கொள்கிறார்கள். இவ்வளவு ஏன்? ஆண்டிப்பட்டியிலிருக்கும் என் நண்பன் ஒருவனுக்கு ஃபோன் செய்தால் அவனும், “இப்ப வாக்கிங் போயிகிட்டிருக்கேன். வாக்கிங் போறப்ப பேசக்கூடாதுன்னு சொல்றாங்க…” என்று போனை கட் செய்துவிட்டான். 

வாக்கிங் இப்படி ஆண்டிப்பட்டி வரை பரவிவிட்டதை அறிந்து எனக்கு திகிலாகிவிட்டது. வயதானவர்கள்தான் என்றில்லை. ஆரோக்கியமாக இருக்கும் இளைஞர்களும் வாக்கிங் செல்கிறார்கள். அதுவும் அதிகாலையில் கடற்கரையிலோ, பார்க்கிலோ நடந்தால் ஹன்ட்ரட் இயர்ஸ் கேரன்டி என்கிறார்கள். இவ்வளவு பேர் தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு வாக்கிங் செல்கிறார்கள் என்றால், இதில் ஏதோ நல்ல விஷயம் இருப்பதாக எனக்கு மிகவும் தாமதமாக உறைத்து நேற்றுதான் வாக்கிங்கை ஆரம்பித்தேன்.  

அலாரம் வைத்து ஆறரை மணிக்கு எழுந்து நடந்து மெயின் ரோடுக்கு வந்தவுடனேயே கவனித்தேன்.  கல்லூரி பேருந்துக்காக காத்திருந்த ஒரு எஞ்சினியரிங் காலேஜ் மாணவன், சக மாணவியிடம் அவ்வளவு காலையில் ஃப்ரெஷ்ஷாக கடலைப் போட்டுக்கொண்டிருந்தான். ஆஹா... என்ன ஒரு வாழ்க்கை. இன்றைய மாணவர்களின் காலை இளம் பெண்களுடன்தான் துவங்குகிறது.

அந்தப் பையனும், பெண்ணும் சிரித்தபடி பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் உரையாடலை நான் மனத்திற்குள் கற்பனை செய்தபடி அவர்களை நெருங்கினேன்.

நெஞ்சத்தை கிள்ளாதே
'இது குழந்தை பாடும் தாலாட்டு' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 5

“ஏய்... நேத்து ராத்திரி பதினொரு மணிக்கு என்னை நினைச்சுகிட்டியா?” என்கிறாள் அவள்.

“ஏன் கேட்குற?”

“எனக்கு பொரைக்கேறிச்சு. அதான் கேட்டேன்”

“நான் நினைக்கறப்பல்லாம் உனக்கு பொரைக்கேறிச்சுன்னா, இருபத்திநாலு மணி நேரமும் உனக்கு பொரைக்கேறிகிட்டே இருக்கும்”

“சீ... நீ ரொம்ப மோசம்டா...”

     இப்படிக் கற்பனை செய்தபடியே அவர்களை நெருங்க... அந்தப் பையன், “கேம்பஸ்க்கு டிசிஎஸ்லருந்து என்னைக்கு வர்றாங்க?” என்றான்.

“நெக்ஸ்ட் ஃபரைடே. எனக்கென்னவோ டிசிஎஸ்ஸ விட, ஸிடிஎஸ் பெஸ்ட்டுன்னு தோணுது...” என்று பேசிக்கொண்டிருக்க…. நான் அதிர்ச்சியுடன் அவர்களை விட்டு தள்ளி நடக்க ஆரம்பித்தேன். நமது 2கே இளைஞர்கள் கேம்ப்பஸ் இன்டர்வியூ, பெர் ஆனம் ஸேலரி... லேப்டாப்… என்று மிகவும் சீக்கிரமாகவே தங்கள் இளமைக்காலத்தைத் தொலைத்துவிடுகிறார்கள்.

சரி... எப்படியோ போங்கள் என்று நடந்தால், ஒரு டீசர்ட் பெரியவர் வேகமாக நடந்து வந்து வாக்கிங்கை முடித்துக்கொண்டு, டீக்கடையில் ஒரு சிகரெட் வாங்கிப் பற்ற வைத்து நடையில் கிடைத்த ஆரோக்கியத்தை புகையாக காற்றில் விட்டார். சிலர் தங்களுக்கு கிடைக்கும் ஆரோக்கியம், தங்கள் நாய்களுக்கும் கிடைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் நாய்களுடன் வாக்கிங் வந்து என்னைப் போன்றவர்களுக்கு திகிலை கிளப்பினார்கள். ஒருவர் இரண்டு பெரிய நாய்களோடு நடந்து வர... நான் சாலையோரமாக ஒட்டி நடக்க... ஒரு பங்களா கேட் இடைவெளியில் நான்கு நாய்கள் தங்கள் முகத்தை மட்டும் நீட்டி வெறித்தனமாக குரைக்க... ஈரக்குலையெல்லாம் நடுங்கிவிட்டது.

       இதென்னடா வம்பாப் போச்சு... என்று பார்க்கினுள் வேகமாக நுழைந்த எனக்கு தூக்கி வாரிப்போட்டது. உள்ளே கும்பல், கும்பலாக திருவிழாக் கூட்டம் போல் மக்கள் ஒருவரை ஒருவர் இடிக்காத குறையாக நடந்துகொண்டிருந்தார்கள். சிலர் காதில் ஹெட்ஃபோனில் இளையராஜா அல்லது ரஹ்மான். “ஆஸ்ட்ரேலியா பிட்ச்சுன்னாலே நம்மாளுங்க சொதப்புவானுங்க…” என்று கூறும் கிரிக்கெட் அனலிஸ்ட்கள்… ஓரமாக சில ஸ்கிப்பிங் பெண்கள்,  ஆண்களின் இதயத்தை படபடக்க வைத்துக்கொண்டிருந்தார்கள்.

         இவ்வளவு கும்பலுக்கு நடுவே வாக்கிங் வேண்டாம் என்று வெளியே வந்தேன். பிரதான சாலையிலிருந்து கோபித்துக்கொண்டு தனிக்குடித்தனம் சென்ற ஒரு அவென்யூவில்  நுழைந்தபோது அந்தத் தெருவில் கிட்டத்தட்ட யாரும் இல்லை. சாலையின் இருப்பக்கமும் ஆங்காங்கே பூக்களை உதிர்த்துக்கொண்டிருந்த மரங்களுக்கு இடையே அடர்த்தியான பனிப்புகை அழகாக இறங்கிக்கொண்டிருந்தபோது அந்தக் காட்சியைக் கண்டேன். ஒரு மிக இளம் ஆணும், அதிமிக இளம் பெண்ணும் ஜாகிங் சூட் அணிந்தபடி கான்வாஷ் ஷீவுடன் குறைவான வேகத்தில் ஓடி வந்துக்கொண்டிருந்தார்கள். அந்தப் பெண் அந்த ஆணின் தலையில் ஓங்கி அடிக்க…. அவன் சிரித்தான்.

அடர்ந்த பனிப்புகைக்கு நடுவே இந்தக் காட்சியைப் பார்த்தவுடன் சட்டென்று எனக்கு, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே…” படத்தில் இடம் பெற்ற “பருவமே… புதிய பாடல் பாடு…” பாடல்தான் நினைவிற்கு வந்தது. எனது பால்ய காலத்தில் அந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் எங்கள் ஊர் பூக்காரத் தெருவிலும், மாரியம்மன் கோயில் தெருவிலும் சாக்கடை ஓரமாக நானும், என் வகுப்பில் படிக்கும் மாலதியும் ஓடுவது போல் கற்பனை செய்துகொண்ட நாட்கள் நினைவிற்கு வந்தது.

நெஞ்சத்தை கிள்ளாதே
'ஈழப்போராளிகளின் எழுச்சிப் பாடல்' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 4

  நெஞ்சத்தைக் கிள்ளாதே திரைப்படத்தின் கதையும், ‘பருவமே…’ பாடலும் மகேந்திரன் கண்ட இது போன்ற ஒரு காட்சியிலிருந்தே உருவானது.

மகேந்திரனின் ‘முள்ளும் மலரும்’ ‘உதிரிப் பூக்கள்’ போன்ற திரைப்படங்களின் வெற்றியால் தேவி பிலிம்ஸ் நிறுவனத்தினர் இயக்குனர் மகேந்திரனிடம் ஒரு திரைப்படம் இயக்கக் கேட்டுக்கொண்டார்கள். அதற்காக ஒரு கதை சொல்லி அது ஓகே ஆனது. ஓகே என்றால் சாதா ஓகே இல்லை. தேவி ஃபிலிம்ஸ் நிறுவனத்தாரிடம் ஒரு பழக்கம் இருந்தது. அவர்கள் ஒரு கதையை ஓகே சொல்லவேண்டுமென்றால், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் பலரையும் ஒன்றாக உட்கார வைத்து கதை சொல்லவேண்டும். அவர்கள் அனைவருக்கும் அந்தக் கதை பிடித்திருந்தால்தான் ஓகே சொல்வார்கள். பல்வேறு ரசனை உடையவர்களின் ஒருமித்த கருத்தை அறிந்துகொண்டால் நல்லதுதான் என்ற வகையில் மகேந்திரன் இந்த ஏற்பாடுக்கு ஒத்துக்கொண்டார். அவ்வாறே குடும்பத்தினர் அனைவரையும் உட்கார வைத்து மகேந்திரன் ஒரு கதையைச் சொல்ல… அனைவருக்கும் கதை பிடித்துப்போனது. அதையே படமாக எடுக்கலாம் என்று தயாரானார்கள்.

இந்தக் கதையில் பிரபல நடிகர்கள் யாரையும் நடிக்க வைக்கக்கூடாது.  புதுமுகங்களைத்தான் நடிக்க வைக்கவேண்டும் என்பதில் மகேந்திரன் உறுதியாக இருந்தார். அதற்காக சென்னையில் பல புதுமுகங்களை வரவழைத்துப் பார்த்தும் மகேந்திரனுக்கு திருப்தியாகவில்லை. எனவே மும்பைக்குத் சென்று நடிகை தேடலாம் என்று மும்பை சென்றார்கள். அங்கு பல புதுமுகங்களைப் பார்த்தும் திருப்தி ஏற்படவில்லை. எவ்வளவு நாளானாலும் புதுமுகத்தை கண்டுபிடித்துவிட்டேச் செல்லவேண்டும் என்று அவர்கள் மும்பையிலேயே இருந்தார்கள்.

மும்பையில் இயக்குனர் மகேந்திரன் கடற்கரையோரமாக இருந்த ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார். ஒரு நாள் அதிகாலையில் எழுந்த மகேந்திரன் கடற்கரையைப் பார்த்திருந்த தனது அறையின் கண்ணாடிக் கதவைத் திறந்தார். அப்போது இளம்பெண் ஒருத்தி கடல் அலை ஓரமாக தனியாக ஓடிக்கொண்டிருந்தாள். அவ்வளவு அதிகாலையில் தன்னந்தனியே ஓடும் அந்தப் பெண், மகாகலைஞனான மகேந்திரனின் மனதில் பல சிந்தனைகளை எழுப்பினாள்.

“இந்தப் பெண் இப்போது உடல் ஆரோக்கியத்துக்காக ஓடுகிறாள். ஆனால் அவளுக்கு நாளை திருமணமானதும் எது எதற்கெல்லாம் ஓடவேண்டும்? புருஷனிடம் அடி வாங்கி தாய் வீட்டுக்கு ஓடலாம். விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஒடலாம்…” என்றெல்லாம் நினைக்க… நினைக்க… தொடர்ச்சியாக அவர் மனத்தில் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ கதை உருவானது. உடனே பழைய கதையை விட்டுவிட்டு இந்தக் கதையை இயக்கலாம் என்று புதிய கதையை தயாரிப்பாளிடம் சொல்ல…. அவரும் அந்தக் கதைக்கு ஓகே சொன்னார்.

இவ்வாறு மும்பைக் கடற்கரையில் மகேந்திரன் கண்ட காட்சி ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ திரைப்படத்திற்கான கதையை மட்டும் உருவாக்கவில்லை. அந்தக் காட்சியை சூழ்நிலையாகக் கொண்ட ஒரு பாடலும் இருக்கவேண்டும் என்று மகேந்திரன் நினைத்தார். எனவே அதிகாலையில் மோகனும், சுஹாசினியும் ஓடுவது போன்ற சூழ்நிலையில் ஒரு பாடலை உருவாக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்து இளையராஜாவிடம் சூழ்நிலையைக் கூறினார்.

நெஞ்சத்தை கிள்ளாதே
நினைவே ஒரு சங்கீதம்: 'காதலின் தீபம் ஒன்று' | Episode 3

இளையராஜாவிடம் மகேந்திரன் ஒரு இளம் பெண்ணும், ஆணும் அதிகாலையில் ஓடுவார்கள் என்று சொன்னவுடன், அதிகாலையில் ஓடி வரும் அந்த மூடைக் கொண்டு வருவதற்காக அவர்களுடைய காலடி சத்தத்தையே ரிதமாக பயன்படுத்தவேண்டும் என்று முடிவுக்கு வந்த இளையராஜா அதற்கேற்றாற் போல் மெட்டமைத்தார். ஆனால் 8 மணி நேரம் நடந்த அந்தப் பாடலின் ரிக்கார்டிங்கின் போது, காலடி சத்தத்தை இசையில் கொண்டு வருவது கடினமாக இருந்தது. முதலில் மைக்கிற்கு முன்னால் ஷீவை வைத்துத் தட்டியிருக்கிறார்கள். அது மிகவும் சத்தமாக இருந்தது. எனவே வேறு வேறு வழிகளில் முயற்சித்து பார்த்தும் அந்தக் காலடி சத்தத்தின் ஒரிஜினாலிட்டி கிடைக்கவில்லை.

அப்போது இளையராஜாவிற்கு திடீரென்று ஒரு யோசனை உதிக்க… அவர் தன்னிடம் தபேலா வாசிக்கும் கண்ணையாவிடம் தொடையில் கையால் தட்டி சத்தம் எழுப்பச் சொன்னார். அந்தச் சத்தம் ஒத்து வருவதாக தோன்றியது. மனிதர்கள் இரண்டு கால்களால் ஓடுகிறார்கள் அல்லவா? அதனால் இரண்டு தொடைகளிலும் தட்டச் சொன்னார். அந்தத் தட்டல் சரியாக அமைந்தது. இரண்டு பேர் ஓடுகிறார்கள் அல்லவா? அதற்காக இளையராஜா இரண்டு பேரை தங்கள் தொடைகளில் தட்டச் சொல்லி  ரிகார்ட் செய்து வெளிவ்நத அந்தப் பாடல் சூப்பர் ஹிட் பாடலாக அமைந்தது.

பாடல் ஒலிப்பதிவு மட்டுமல்ல. அப்பாடலை ஒளிப்பதிவு செய்ததும் மகேந்திரனுக்கு சவாலான காரியமாக இருந்தது. மோகனும், சுஹாசினியும் அதிகாலையில் பனியில் ஓடுவது போல் எடுக்கவேண்டும். பாடல் முழுவதும் அவர்கள் அடர்த்தியான பனிப்புகைக்கு நடுவே ஓடிக்கொண்டிருக்கவேண்டும். ஆனால் அந்த அதிகாலை பனிப்படலமோ 20 அல்லது 25 நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. அதனால் நள்ளிரவு 3 மணிக்கே எழுந்து தயாராகி, படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு நான்கு மணிக்கெல்லாம் வந்துவிடுவார்கள். கொஞ்சம் வெளிச்சம்… நிறையப் பனிமூட்டம் கொண்ட அரை மணி நேரம் மட்டும் தினமும் படப்பிடிப்பு நடக்கும். மேலும் இந்தப் பாடலின் ஒரு பகுதி அப்போது ‘ஜானி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த ஊட்டியிலும் எடுக்கப்பட்டது.

இளையராஜா, மகேந்திரன் போன்ற மகத்தான கலைஞர்களின் கடின உழைப்பு என்றும் வீண்போனதில்லை. ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படமும், பாடல்களும் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்டது. இப்படம் 1980 ஆம் ஆண்டுக்கான 28ஆவது தேசிய விருதுப்பட்டியலில் சிறந்த தமிழ்ப்படத்திற்கான விருதை வென்றது. மேலும் அப்போது சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதில் சிறந்த வண்ணப்பட ஒளிப்பதிவாளர் மற்றும் சிறந்த கறுப்பு வெள்ளைப் பட ஒளிப்பதிவாளர் என்று இரண்டு ஒளிப்பதிவாளர்களுக்கு விருது வழங்கப்பட்டு வந்தது. சிறந்த வண்ணப்பட ஒளிப்பதிவிற்கான விருது இப்படத்தின் கேமிராமேன் அசோக்குமாருக்கும், சிறந்த ஒலிப்பதிவாளருக்கான விருது எஸ்.பி. ராமநாதனுக்கும் கிடைத்ததற்கு இப்பாடலும் ஒரு காரணமாக  இருந்தது. இவையெல்லாவற்றையும் விட பெரிய விருது, அப்பாடலை நாம் இன்றும் கேட்டுக்கொண்டிருப்பதே.

நெஞ்சத்தை கிள்ளாதே
தொடர்: நினைவே ஒரு சங்கீதம் - 'செந்தூரப்பூவே பதினாறு வயதின் பாடல்'

பருவமே புதிய பாடல் பாடு

பருவமே புதிய பாடல் பாடு

இளமையின் பூந்தென்றல் ராகம்

இளமையின் பூந்தென்றல் ராகம்

பருவமே 

புதிய பாடல் பாடு


பூந்தோட்டத்தில் ஹோய் காதல் கண்ணம்மா
பூந்தோட்டத்தில் ஹோய் காதல் கண்ணம்மா

சிரிக்கிறாய் ஹோ ஹஹோ ரசிக்கிறான் ராஜா
சிவக்கிறாள் ஹோ ஹஹோ துடிக்கிறாள் ராணி

தீபங்கள் போலாடும் பார்வை சேரும்

பருவமே 

புதிய பாடல் பாடு


தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ
தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ

அழைக்கிறான் ஹோ ஹஹோ நடிக்கிறான் தோழன்
அணைக்கிறான் ஹோ ஹஹோ தவிக்கிறாள் தோழி

காலங்கள் பொன்னாக மாறும் நேரம்

பருவமே 

புதிய பாடல் பாடு இளமையின் 

பூந்தென்றல் ராகம்

பருவமே
புதிய பாடல் பாடு

(தொடரும்)

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com