
டாக்டர் ஜி... பாலிவுட்டின் சென்சேஷனல் நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் அக்டோபர் 14-ம் தேதி வெளியாகப்போகும் புத்தம்புதிய பாலிவுட் திரைப்படம். படத்தை பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் தங்கை அனுபூதி காஷ்யப் இயக்கி இருக்கிறார். படத்தின் ட்ரைலர் செம காமெடியாகவும் வித்தியாசமான கதைக்களமாகவும் இருக்கிறது என ட்ரெண்டிங்கில் இடம்பிடித்திருக்கிறது.
'அனுராக்கா... அவர் பயங்கரமான ஆளாச்சே!... அப்போ ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு சினிமாவா?' என குழம்பினால் நிர்வாகம் பொறுப்பல்ல. அண்ணன் ரூட்டை ஃபாலோ செய்யாமல் காமெடி ட்ராக்கில் கொஞ்சம் மெஸேஜ் கோட்டிங் கொடுத்து செம கதையோடு களமிறங்கி இருக்கிறார் அனுபூதி காஷ்யப். செப்டம்பர் 20-ம் தேதி ரிலீஸான படத்தின் டிரைலரே செம காமெடியாக இருக்கிறது.
Doctor G என்றால் gynaecologist-ஐக் குறிக்கும். ஆமாம் பாஸ். மகப்பேறு மருத்துவரே தான். இந்தப் படத்தில் ஆயுஷ்மான் குரானா, டாக்டர் உதய் குப்தா என்ற பாத்திரத்தில் ஒரு மருத்துவக்கல்லூரி மாணவராக வருகிறார். அவரது கனவு எலும்பு மூட்டு மருத்துவராக ஆகவேண்டும் என்பது.
அம்மாவின் ஆசைப்படி மகப்பேறு மருத்துவ மேற்படிப்பு படிக்க வேண்டாவெறுப்பாக ஒப்புக் கொள்கிறார். எப்படி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்க பெண்கள் அதிகம் வருவதில்லையோ அதுபோல மகப்பேறு மருத்துவராக ஆண்கள் பெரும்பாலும் வருவதில்லை.
ஒட்டுமொத்த பேட்ஜிலும் பெண்களோடு இவர் மட்டும் ஆண் மருத்துவ மாணவனாக வகுப்பில் உட்கார்ந்திருக்கிறார். சீனியர் மகப்பேறு மருத்துவரான செஃபாலி ஷாவும், சக மாணவியாக இருக்கும் ஹீரோயின் ரகுல் ப்ரீத் சிங்கும் எப்படி அவரது கூச்சத்தைப் போக்கி தேர்ந்த மகப்பேறு மருத்துவராக மாற்றுகிறார்கள் என்பதே கதை.
'பெண்ணுடல் பற்றி இவ்ளோ டீப்பா எனக்கு தெரிஞ்சுக்க விருப்பமில்லை!', 'நான் ஆணாக இல்லாவிட்டால் தான் கூச்சம் இல்லாமல் பெண்களுக்கான மருத்துவராக முடியும்!' என்று அவர் கதறுமிடம் ஹியூமராக இருக்கிறது.
வடக்கில் மகப்பேறு மருத்துவராக இருப்பவர்களை அங்கிருக்கும் சிலர் எப்படி முரட்டுத்தனமாக நடத்துகிறார்கள் என்று காட்டுமிடம் அதிர்ச்சியாக இருக்கிறது. ஆனாலும், படத்தை சீரியஸ் டோனில் எடுக்காமல் ஜாலி ட்ரீட்மெண்ட்டில் கொடுத்திருக்கிறார் அனுபூதி.
குழந்தை இல்லாத தம்பதி இவரிடம் ஆலோசனைக்கு வரும்போது, ''தாம்பத்யம்லாம் சரியாதானே நடக்குது?'' என்று ஆயுஷ்மான் கேட்பார். ''ஆங்...வருஷத்துக்கு 116 வாட்டி!'' என்று கணவன் சொல்ல... ''அதையெல்லாமா எண்ணிட்டு இருப்பே?'' என கணவனிடம் ஒரு ரியாக்ஷன் காட்டுவார்.
கடைசியில் அந்த ஆளின் மனைவி ஒரு துண்டுச்சீட்டில் எழுதி கணவருக்கே தெரியாமல் டாக்டரிடம் கொடுப்பார்...அதை ஆயுஷ்மானோடு சேர்ந்து நாமும் வாசிக்கும்போது...
ஆங்...அது ஒரு சென்சார் மேட்டர் பாஸ்!
Trailer link: https://www.youtube.com/watch?v=XJrRrMCEmp8Q