சிரிப்பு வாயு கண்டுபிடிப்பாளரின் நாட்குறிப்புகளில் மறைந்து கிடந்த கவிதைகள். 3500 நபர்கள் கொண்ட குழு நான்கு வருடங்களாக படி எடுக்கப்பட்ட 200 ஆண்டுகள் பழமையான குறிப்புகள்.
சோடியம், பொட்டாசியம், போரான், கால்சியம், அயோடின், லித்தியம் முதலான பல தனிமங்களை கண்டுபிடித்தவர் லண்டன் அறிவியலாளர் ஹம்பிரி டேவி. 1778 முதல் 1829 வரை வாழ்ந்தவர் இவர். இப்போதுள்ள உயர் கல்வியில், கலை மற்றும் அறிவியல் என தனி தனி பிரிவுகள் உள்ளன. ஆனால், ஹம்ஃப்ரியோ அறிவியலில் கலையை புகுத்தி கவிதைகள் படைத்துள்ளார். அதனை அவரது நாட்குறிப்புகளில் ஒளித்து வைத்துள்ளார்.
இவரின் நாட்குறிப்புகளை இங்கிலாந்து நாட்டில் உள்ள லேன்கேஸ்டர் பல்கலைக்கழகத்தின் ஷாரன் ரஸ்டன் என்ற ஆங்கில பேராசிரியர் தலைமையில் 3500 தன்னார்வலர்களோடு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையைப் பற்றி சாரன் கூறுவது, "இலக்கியம் என்பது எங்கும் உள்ளது. ஹம்ஃப்ரியின் குறிப்புகள் காலத்தால் சிதையுற்றாலும் நம்மை வியக்க வைக்கும் கலை மற்றும் அறிவியல் சங்கமத்தைக் கொண்டுள்ளது. வேதியியல் சூத்திரங்கள் மற்றும் ஆய்வு கட்டுரைகளுக்கு இடையில் கவிதைகள் எழுதியுள்ளார். உதாரணமாக, சிரிப்பு வாயுவான நைட்ரஸ் ஆக்சைடு மூலம் செய்யப்படும் மின் உற்பத்தி (galvinism) பற்றி எழுதிய ஆய்வு கட்டுரைகளில் கற்பனைக்கு எட்டாத காதல் கவிதைகளை மறைத்து எழுதியுள்ளார்." என்று கூறியுள்ளார்,
மேலும், "அவர் மேற்கொண்ட சுற்றுப்பயணம் பற்றிய குறிப்புகளிலும் பல பாடல்களை எழுதி வைத்துள்ளார். இப்பாடல்களிலே தான் தனது மாணவனும் மின்காந்தவியலின் தந்தையுமான மைக்கேல் ஃபாரடே பற்றி குறிப்பிட்டுள்ளார். அறிவியல் மற்றும் கலைகளின் சங்கமாக அவர் விளங்கியுள்ளார். மிகத் துல்லியமாக கூற வேண்டுமென்றால் ,மின்சாரம் மூலம் பொட்டாசியம் பிரித்து எடுப்பது பற்றி அவர் எழுதிய குறிப்புகளில் ஒருவரின் முகவரியும் அந்த நபரை பற்றிய செய்திகளும் இடம்பெற்றுள்ளது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆய்வில் மொத்தம் 11,417 பக்கங்கள் உள்ளன.
- செ.சிவரஞ்சனி.