எதுக்கெடுத்தாலும் பொண்ணுங்களையே மாஞ்சி மாஞ்சி குறை சொல்றதையே வேலையா வெச்சிருக்கிற பசங்களே... உங்ககிட்ட கேட்க ஓராயிரம் கேள்விகளை வெச்சிருக்கோம். பதிலைச் சொல்லுங்க பார்ப்போம்.
பொண்ணுங்களாவது காலேஜுக்குப் போறப்ப பேக் மாட்டிட்டுப் போறோம். ஆனா நீங்க... திருப்பாச்சி அருவாளை முதுகுல சொருகிட்டுப் போற மாதிரியே நோட்டை எடுத்து காலருக்குப் பின்னாடி சொருகிட்டு சீன் போடுறீங்களே... ஏன்?
ஃபேஸ்புக்ல உங்க ஃப்ரெண்டோட ஃப்ரெண்டோட ஃப்ரெண்டா இருந்தாலும் அந்தப் பொண்ணைத் தேடிக் கண்டுபிடிச்சு ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்து பல்பு வாங்குறீங்களே... ஏன் பாஸ்?
வீட்ல எவ்ளோதான் இடம் இருந்தாலும் பாடி பில்டப் பண்றேனு எதிர்வீட்டுப் பொண்ணு மாடியில துணி காயப்போடுற நேரமா பார்த்து மொட்டை மாடிக்கு வந்து கர்லா கட்டையை வெச்சு கண்ணை அங்கிட்டு ஓரங்கட்டி ரூட் விடுறதையெல்லாம் யார் பாஸ் தட்டிக் கேட்கிறது?
உங்க கையில் இருக்கிற போன்லேயே கிரிக்கெட் பார்க்கிற வசதி வந்த பிறகும் வசந்த் அண்ட் கோவுல சேல்ஸுக்கு வெச்சிருக்கிற டி.வியைப் பார்த்து, அடைச்சிக்கிட்டு ரோடு வரைக்கும் வந்து டிராஃபிக் ஜாம் பண்ணி அட்ராசிட்டி பண்றீங்களே... நீங்கெல்லாம் ஒரு நாளாவது ரேஷன் கடையில நின்னு வீட்டுக்கு கெரசின் வாங்கித் தந்திருப்பீங்களா?
இந்த பஸ் ஸ்டாப்ல பஸ் நிற்கும்போது எப்போவாவது அதில் ஏறுற பழக்கம் உங்களுக்கு இருக்கா? பேன்ட் கிழிஞ்சாலும் பரவாயில்லைனு ஒடுற பஸ்ல ஏறி நீங்க இன்னும் என்னத்தைதான் கிழிக்கப்போறீங்க பாய்ஸ்?
நட்டநடு ராத்திரியில கூட கூலிங் கிளாஸ் போட்டுட்டு செல்ஃபி எடுத்து அதுக்குக் கண்ணை கூசுற மாதிரி கான்ட்ராஸ்ட் ஏத்தி மரண பயத்தைக் காட்டுற உங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்னு சொல்லுங்க?