''எலேய்... என்னைய லெக்கு தெரியலையா?... நாந்தான்யா உஞ்சின்ன அப்பத்தா!'' - வெண்கலக்குரலில் அந்த வயதான பாட்டி சாயல்குடி பஸ்ஸ்டாண்டில் என்னை அடையாளம் கண்டு கொண்டபோது எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. இப்படித்தான் கல்யாணம் காட்சிகளுக்குப் போனால் அசிங்கப்பட்டு நிற்பேன். அப்பா திட்டுவார்.
நான் மீடியாவுக்குள் ஆர்வமாக நுழைந்த புதிது அது. என் அத்தை வாழ்க்கைப்பட்டு போன ஊரில் அந்த அப்பத்தாவை பார்த்திருக்கிறேன். என் என் சொந்த அப்பத்தாவின் சின்னம்மா மகள்.. அதாவது தங்கை. எனக்குத்தான் அடையாளம் தெரியவில்லை.
''அப்பத்தா...நான் பத்திரிகைல வேலை பார்க்குறேன். இங்கன ஒரு ஊருக்கு செய்தி சேகரிக்க வந்திருக்கேன்!'' என்று நான் சாயல்குடி பஸ்ஸ்டாண்டில் போட்டோகிராபர் சகிதம் நின்றதற்கான தன்னிலை விளக்கம் கொடுத்தேன். அப்பத்தாவும் வாஞ்சையாக ,'எந்தூருப்பே?'' என்றது. ஊர்ப்பெயரை சொன்னேன். சின்னதாய் 'ஜெர்க்' கொடுத்து, ''அந்தூரா...? பார்த்துப்பே!'' என்று சொல்லி 'வர்ட்டா?' என்று கிளம்பியது.
ஒரு ஊரில் இருக்கும் எல்லா பேருக்கும் ஒரே பெயர். அதுதான் அந்த ஊரின் சிறப்பே. ஆண்-பெண் குலசாமிக்களின் பெயரை வைத்து கெஜட்டில் தங்கள் பட்டப்பெயரோடு அந்த குலசாமிப் பெயரையும் வைத்துக் கொள்ளும் அளவுக்கு சிறப்போடு விளங்கியதால் அந்த அசைன்மெண்ட்டை கேட்டு வாங்கி நான் கிளம்பியிருந்தேன்.
இனி ஓவர் டூ தட் கிராமம். ராமநாதபுரம் மாவட்டத்தின் தென்கோடியில் கடலாடிக்குப் பக்கத்தில் இருக்கிறது அந்த கிராமம். ஒரே சாதியில் பிறந்து நூற்றைம்பது தலைக்கட்டுக்களோடு வாழும் கிராமம். வானம் பார்த்த பூமி என்றாலும், கொஞ்சம் ஐப்பசி மாச பச்சையம் பூத்து, பார்க்க ரம்மியமாகக் கிடந்தது அந்தக் கிராமம். பேருந்தை விட்டு இறங்கியதும் ஊர் தலையாரியைக் கண்டுபிடித்து, வந்த விவரத்தை சொன்னோம். பாவம் ஏனோ இவரும் என் அப்பத்தாவைப்போல ஜெர்க் ஆனார்.
''ஊருக்குள்ள கொல்லைப்பேரு காய்ச்சல்ல கெடக்காங்க. நீங்க போட்டோல்லாம் புடிப்பீங்கள்ல...அதான் ரோசனையா இருக்கு. போயிட்டு அடுத்த மாசம் வந்தீங்கன்னா சிறப்பா ஒத்துழைப்பு கொடுத்துப்புடலாம்!'' என்றார். ஏற்கனவே அலுவலகத்தில் 'ஹியூமன் ஸ்டோரீஸ்... ஹியூமன் ஸ்டோரீஸ்' என ஏகத்துக்கும் பிராண்டியதால் தான் இந்த கிராமம் பற்றிக் கேள்விப்பட்டு ஆர்வத்தோடு வந்தேன்.
என்னுடைய வேகமே சோகமாய்ப் போகும் என்று நினைக்கவில்லை. அதனால் பிடிவாதமாக, ''சார், தீபாவளி ஸ்பெஷல்ல வரும்...பெருசா எழுதலாம்!'' என்றதும் வேறு வழியில்லாமல், ''சூப்பரு தம்பி. இதோ ரெடி பண்றேன்..!'' என்று என்னையும் போட்டோகிராபரையும் மரத்தடியில் உட்காரவைத்து விட்டு ஊர் பெரிய மனிதர்களிடம் பேசக் கிளம்பினார். அரை மணிநேரம் அந்த ஆலமரத்தின் விழுதுகளைப் பிடித்தபடி உட்கார்ந்திருந்தோம்.
''ஊர் மக்கள் ரெடியாயிருக்காங்க... வாங்கப்பு!'' என்றபடி ஊர் முளைக்கொட்டு திண்ணைக்கு என்னை அழைத்துச் சென்றார் தலையாரி. அங்கு ஆண்களும் பெண்களுமாய் 50 பேர் வரை நின்றார்கள். பேட்டியை ஆரம்பித்தேன். மக்கள் தங்கள் குலசாமிப் பெயர்களை ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏன் வைக்கிறார்கள்?, எத்தனை வருடங்களாக இந்தப்பழக்கம் இருக்கிறது? சாங்கித்தியங்கள் என்ன? என்றெல்லாம் பாலின வித்தியாசமில்லாமல் எல்லோரும் பேச ஆரம்பித்தார்கள். சிலர் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டைகளைக் காட்டி சிலிர்ப்படைய வைத்தார்கள்.
'இந்த நூற்றாண்டிலும் இப்படி ஒரு கிராமமா!" என வியந்து போனேன். பேட்டியை முடித்துக் கொண்டு போட்டோஷூட்டை முடித்து விட்டு, அந்த நேரத்தில் பேருந்து இல்லை என்பதால் ஊரின் எல்லைக்கு நடையைக் கட்டினோம். பக்கத்து ஊரிலிருந்துதான் பேருந்து என்றார்கள். அப்போதுதான் அந்த விஷயத்தைக் கவனித்தேன். கிட்டத்தட்ட ஊரிலிருந்த பாதி வீடுகளில் ஓடுகள் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன. சைக்கிள்களைக் கூட விட்டுவைக்கவில்லை. வரும்போது ஊருக்குள்லேயே பேருந்தில் வந்ததால் இதைக் கவனிக்கவில்லை.
ஒரு கலவர பூமிக்குள் வந்ததைப் போல தோன்றியது. நான் போட்டோகிராபருக்கு கண்ஜாடை காட்ட, அவர் தன் ஃபிலிம் ரோலில் அதை சுட்டுக் கொண்டார். பக்கத்து ஊர் வந்ததும் டவுன் பஸ் பிடித்து நேரே போய் நாம் நின்ற இடம்... கடலாடி காவல் நிலையம்! நம்மை இன்ஸ்பெக்டரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டபோது, அவர் சொன்ன டயலாக் இதுதான்...
''ஓ... அந்த கிராமமா... ஆட்டுக்கறிக்கு அடிச்சிக்கிவாய்ங்கே... கோழிக்கறிக்கு கூடிக்குவாய்ங்கே சார். அங்காளி பங்காளினு ஒண்ணா மண்ணா ஒரே சாதி சனம் தான். பேருகூட ஒண்ணா வெச்சுக்கிட்டு உலகம் பூரா பேமஸு... ஆனா பாருங்க... ஒரே சாதில நான் அந்த வம்சம்...நீ அந்த வம்சம்னு உட்பிரிவு வெச்சு கிளம்பி இன்னிக்கு வெட்டுகுத்துனு நாலுபேரு கட்டுபோட்டு ஜி.ஹெச்ல கிடக்குறாய்ங்கே சார்..!'' என்றார்.
பாசிட்டிவ் ஸ்டோரி எழுதிய ஆர்வத்தில் மண் விழுந்தது. 'ஊரெல்லாம் ஒரே பேரு... ஆனா எல்லோரும் தனித்தனி!' என டைட்டில் வெச்சு சாதிப்பிரிவால் அடித்துக் கொண்ட சாதனைக் கிராமம் என்று போட்டு சாதனையை அடித்து வேதனைக் கிராமம் என்று மாற்றி லே-அவுட்டில் தெறிக்க விட்டிருந்தார்கள்.
தலையாரி மட்டும் லேண்ட் லைனில் போன் போட்டு புலம்பினார். ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துவிட்டார்களாம். இன்னும் எத்தனை பெரியார் வந்தாலும் திருந்த மாட்டிங்கடா டேய்..!
(சம்பவங்கள் Loading..!)