
இன்றைய குழந்தைகள் அழகழகான யூனிஃபார்ம்கள், ஸ்மார்ட் போர்டுகள், சி.டியில் ரைம்ஸ் எனப் பலவற்றை அனுபவித்தாலும் நம் காலத்துப் பள்ளி வாழ்க்கையின் சுகமான அனுபவங்களை தவறவிடுவார்கள். அதிலும் 90களுக்கு முன்னால் பிறந்தவங்களுக்குப் பள்ளிக்கூடம்தான் எல்லாமே. வாங்க கொஞ்சமா கொசுவத்தி சுத்தலாம்..!
ஒரு வாத்தியாராச்சும் காபி, டீ, வெற்றிலை, பாக்கு போன்ற லாகிரி வஸ்துக்களுக்கு அடிமையாகி இருப்பார். அவரோட போதைக்கு நாம ஊறுகாயா ஆகி இருப்போம். பள்ளி நேரத்தில் வெளியே சென்று அவருக்கு அதை வாங்கிக் கொடுக்கிறதில் என்னா போட்டி. அப்போதானே அவரோட பிரம்படியில் இருந்து தப்பிக்க முடியும்.
காதைப் பிடிச்சுத் திருகுறது அல்லது காதை பஞ்ச் பண்றது, விரலைப் பின்னுக்கு மடக்குறது, டவுசர் அழுக்கை பிரம்பால் தட்டிவிடுறது, மண்டையில் நங்கென்று கொட்டுறது என வருஷத்துக்கு ஒரு வன்கொடுமை பண்ணும் வாத்தியைப் பார்த்திருப்போம். ஸாரி மாட்டித் தவிச்சிருப்போம்.
பள்ளி நிர்வாகமே ஸ்கூலுக்கு ரெண்டு கேட்தான் வெச்சிருப்பாங்க. நாம யாரு? கட் அடிக்கிறதுக்கு, முறுக்கு, சீடை, சர்பத் சாப்பிடுறதுக்குனு தனித்தனியா ஏழு வழியாச்சும் கண்டுபிடிச்சு ரகசியமா வெச்சிருப்போம்.
கல்விச் சுற்றுலானு மொக்கையா ஒரு இடத்துக்குக் கூட்டிட்டுப் போவாங்க. காய்ஞ்ச கண்மாய் மாதிரி இருக்கிற அதுக்குப் பேரு டேமாம். அதைக்கூட மன்னிச்சிடலாம். ஆனா, அங்கே போய் வந்ததும் கட்டுரை எழுதச் சொல்லி டார்ச்சர் பண்ணுவாங்க பாருங்க. கொடுமை.
அப்போல்லாம் பி.டி வாத்தியாருங்கதான் தொப்பையோட இருப்பாங்க. எப்பவும் மிலிட்ரி ரிட்டர்ன் மாதிரி விறைப்பா நின்னுக்கிட்டு ‘ரீசஸ்’னு கேட்கிற அப்பாவி ஸ்டூடன்ட்ஸ்களை நாலு பிரம்படி கொடுத்து விரட்டிவிடுவாங்க. ஒண்ணுக்குப் போறதுக்குமாய்யா அடிப்பீங்க? அவ்வ்வ்வ்!
‘நீதிபோதனை’, ‘நல்லொழுக்கம்’னு ஒரு பீரியட் எல்லா ஸ்கூல்லயும் அப்போ இருக்கும். பட் நோ யூஸ். கண்ணாடி போட்டிருக்கிற அல்லது கண்ணாடி போடாத அறிவியல் டீச்சரோ, கணக்கு டீச்சரோ இரவல் வாங்கிப் பாடம் எடுத்துப் படுத்துவாங்க.
ஒருவேளை மீறி அந்த வகுப்பு நடந்தா, யாரோ ஒரு வாத்தியார் வந்து வரிசையா மரத்தடியில் நம்மை உட்காரவெச்சு ‘பேசாதீங்கடா, பேசாதீங்கடா ’னு மட்டும் சொல்லி வானத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருப்பார்.
இப்போல்லாம் ஸ்நாக்ஸ் பாக்ஸ்னு கொடுத்து விடுறாங்க. அப்போல்லாம் ரீசஸ் பீரியடில் இலந்தவடை, சூட மிட்டாய், கல்கோனா, கமர்கட்டு, புளிப்பு மிட்டாய், மாங்காய், கொடுக்காப்புளி, நவ்வாப்பழம், கடலை உருண்டை, பர்பி, சோளம், மூக்குசளிப் பழம் (கொழகொழன்னு இருக்கிற இந்தப் பழத்தோட பாட்டனி நேம் என்னப்பா) என ஸ்கூல் வாசலில் பரத்தி விற்கும் பாட்டியிடம் வாங்கித் தின்றிருப்போம். அப்படி வளர்த்த உடம்புதான்யா இது!
அணிலோ, காகமோ கிளாஸ் ரூமுக்கு விசிட்டிங் வந்து டைம்பாஸ் பண்ணிவிட்டுச் செல்லும். சில அணில்கள் எல்லை மீறி அடல்ட்ஸ் ஒன்லியாய் குடும்பமே நடத்தும். ‘அங்கே என்ன பார்க்கிறே கிழவி புருஷா?’ என சாக்பீஸால் குறிபார்த்து நம் நடு மண்டையில் சரியாக எறிவார் நம்ம வாத்தியார். ஹிஹிஹி!