Indian 2 timepass
சினிமா

Indian 2, Jiagarthanda DoubleX, Aranmanai 4 - இரண்டாம் பாகங்களின் லிஸ்ட் !

என்ன ஒண்ணு லாரன்ஸ் ரசிகர்களும் எஸ்.ஜே. சூர்யா ரசிகர்களும் ’என் தலைவர்தான் கலக்கிபுட்டாரு, உன் ஹீரோ சும்மா’ ன்னு ரசிகர்களோட கெத்தை காட்டுறதுக்காக தியேட்டர் சேர்களை சேதப்படுத்தாம இருந்தா சரிதான்.

டைம்பாஸ் அட்மின்

முந்தைய சினிமா எல்லாம் நூத்துக்கு 90 படங்கள் நூறு நாட்கள் இருநூறு நாட்கள்னு ஓடும். அப்டி ஜெயிச்ச படங்களை சின்ன பட்ஜெட்ல கொண்டாடிட்டு அடுத்த படத்துக்கான வேலையைப் பார்க்கப் போயிடுவாங்க. கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி டைட்டிலுக்கு பஞ்சம் வந்தமாதிரி ’காத்தவராயன்’, ’உத்தமபுத்திரன்’, ’நாடோடி மன்னன்’ னு புது படத்துக்கு பழைய டைட்டிலை சுட்டு வெச்சாங்க.

தனுஷ், ரஜினியோட மருமகனா இருந்த வரைக்கும் சூப்பர் ஸ்டாரோட ’பொல்லாதவன்’, ’படிக்காதவன்’, ’மாப்பிள்ளை’னு ஒரு டைட்டில் சாம்ராஜ்யத்தை உருவாக்கி வெச்சிருந்தார். இப்போ கதைக்கு பஞ்சம் வந்த மாதிரி ஒரு படத்தை எடுத்த இயக்குனர் அவரே தோசைய திருப்பிப் போடுற மாதிரி பார்ட் டூ, பார்ட் த்ரினு பல பார்ட்டுகள் எடுத்து ஓட வெக்கிறதுல ஆர்வமா இருக்காங்க. அப்படி சிலதுகள்.

1 . ராகவா லாரன்ஸ் ’முனி’ன்னு ஒரு படத்தை எடுத்தாலும் எடுத்தார். அதுலேர்ந்து பட்டத்துக்கு வால் ஒட்டின மாதிரி காஞ்சனா – 2, காஞ்சனா – 3 ன்னு குறைஞ்சது காஞ்சனா பார்ட் 15 வரைக்கும் எடுப்பாரோ என்னவோ. எத்தனை பார்ட் எடுத்தாலும் ஹீரோ பேய்க்கு பயந்தவன்ங்கிற கான்செப்டுதான். அது ஒண்ணை வெச்சிக்கிட்டு ஆடியன்ஸ் கண்ணுல கத்திய சொருகி, காதுல ரத்தம் வரவைக்கிறாரு.. அதே மாதிரி முதல் பார்ட்டுல நடிச்ச அதே நடிகர், நடிகைகளும் அடுத்த பார்ட்டுக்கான பூஜை போட்டதும் ஓடி வந்து முன்னால நின்னுருவாங்க.

அவங்களைத்தாண்டி பேய், பிசாசு ஓட்டறதுக்கு மட்டும் மாந்திரீகருக்கோ, சாமியாருக்கோ வில்லன் மாதிரி ஏதோ ஒரு ஆர்ட்டிஸ்டை கூட்டிட்டு வந்தா போதும். கதையோட கலரே மாறிடும்ன்னு இன்னைக்கும் நம்பிட்டு இருக்கிறவர் லாரன்ஸ்தான். அப்றம் வழக்கம்போல காதல், குத்துப்பாட்டு, கொடுரமான ஃபைட்டுகள், காது கிழியிற அளவு சவுண்டு எபெக்ட்டுல உடுக்கை, பம்பை, உருமிய அலறவிட்டு, படம் முடிஞ்சி வெளிய வரும்போது நம்ம கண்ணும், காதும் அடைக்க வெச்சி அனுப்பிடுவாரு.

2 . ராகவா லாரன்ஸ் பேய்களைக் கூட்டிட்டு வந்து அலற விட்டார்னா நம்ம சுந்தர்.சி மோகினிகள் இல்லன்னா ரத்தக் காட்டேறிகளை விட்டு மிரட்டுவார். ஆரம்பத்துல ‘அரண்மனை’னு ஒரு படத்தை எடுத்தார். அதுக்கப்புறம் பர்ஸ்ட் ஃபுளோர், செகண்ட் ஃபுளோர்னு ஒவ்வொரு மாடியா ஏத்திக்கிட்டுப் போற மாதிரி அரண்மனை – 2, அரண்மனை – 3 ன்னு பாகம் பாகமா எடுத்துட்டு இருக்கார். அடுத்தடுத்த பார்ட்டுகளுக்கு நல்ல கதை கிடைக்கிறதைப் பற்றிக் கவலைப்படாத இயக்குனர்னா அவர் சுந்தர் சி தான். அரண்மனை மாதிரி நல்ல லொகேஷன் கிடைச்சாப் போதும் கேமராவை தூக்கிட்டு போயி ஆக்‌ஷன் கட் சொல்ல ஆரம்பிச்சிருவார்.

அந்த காலத்துலேர்ந்து நடிச்சிக்கிட்டு இருக்கிற பழம்பெரும் ஃபீலிங்கை கொடுக்கிற மாதிரி ’அரண்மனை’ முதல் பாகத்துலேர்ந்து பார்த்துப் பார்த்துப் பழகின கம்பெனி ஆர்ட்டிஸ்டுக்களை கார்ல ஏத்திக்கிட்டுப்போயி, 15 நாள்ல படத்தை முடிச்சிட்டு வந்துடுவார். அதுக்கும் தனி திறமை வேணும்ங்கிறது உண்மைதான். ஆனாலும்.. மனசாட்சியே இல்லாம இப்போ நாலாவது பார்ட்டை முடிச்சிருக்கார். கதையெல்லாம் அதேதான். பிசாசுகளோட பெயர்கள்ல மட்டும் சேஞ்ச் பண்ணி வித்தியாசமான கோணத்துல படம் காட்டுவார். அதுவும் ஓரளவுக்கு ஓடும்.

3 . ராகவா லாரன்ஸ், சுந்தர் சி படங்களோட பாகங்களாவது ஆறு மாசம் ஒரு வருசத்துல வெள்ளித் திரைக்கு வந்து கணிசமா கல்லா கட்டும். ஆனா, செங்கல்பட்டுலேர்ந்து சேலம் வரைக்கும் ரோட்டுல கலர் பெயிண்டை ஊத்திவிட்டு, ஒத்த ஸாங்குக்காக உயிரைக்கொடுத்து உழைக்கிற நம்ம பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் சாரோட இந்தியன் – 2 மட்டும் இன்னும் இழுவைலயே இருக்கு. குழந்தை பிறந்தப்போ ஆரம்பிச்ச அந்தப் படம் குழந்தை வளர்ந்து ஸ்கூலுக்கு போயி அஞ்சாம் வாய்ப்பாட்டை அழகா மனப்பாடம் பண்ணி சொல்ற அளவுக்கு வளர்ந்துடுச்சி. ஆனா.. படம் மட்டும் இன்னும் ரிலீஸ் ஆகலை.

படம் எப்போ வரும்..? நாலு வெடிய கிடிய போட்டு, ஆண்டவரோட மனச மகிழ்விக்கலாம்னு கட்சித் தொண்டர்கள் அண்டு ரசிகர்கள் சட்டையில பேட்ஜ் குத்திக்கிட்டு காத்திருக்காங்க. இந்த வருஷ பொங்கலுக்காவது இந்தியன் - 2 பொங்குமான்னு தெரியலை. ஏகப்பட்ட பஞ்சாயித்துகள், விபத்துகள், குற்றச்சாட்டுகளைத் தாண்டி படம் வெளியாகிறதால பல நூறு தடைகளைத் தாண்டி, முட்டிமோதி படம் வெளியாகிறதுன்னு போஸ்டர்ல மென்ஷன் பண்ற அளவுக்கு பிரச்சனைக்கு மேல பிரச்சனை.

4 . இந்தியன் – 2 மட்டுமில்ல இன்னும் சில ஹீரோக்களோட செகண்ட் பார்ட் படங்களும் தியேட்டர்ல தேதி கேட்டு துண்டு போட்டு காத்திருக்கு. அந்த வரிசைல இந்த தீபாவளிக்கு குடிச்சே ஆகணும்னும்கிற வெறியோட வெயிட் லிஸ்ட்டுல இருக்கிற படம்தான் ’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ அதாவது ஜிகர்தண்டா பார்ட் டூ. ’பெயர் மட்டும்தாங்க பழசு. உள்ள போட்டிருக்கிற அயிண்டங்கள் எல்லாமே புதுசு’ன்னு பேட்டிக்கு கூப்புடுற சேனல்களோட காலர் மைக்குல தவறாம சொல்லிட்டு வர்றார் படத்தோட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

ஆனா, நம்பிக்கை தர்ற விஷயம்னு பார்த்தா ஒரு பக்கம் லாகவா லாரன்ஸ் இருக்கார். இன்னொரு பக்கம் பெர்ஃபாமென்ஸ் சூராவளி எஸ்.ஜே. சூர்யா காம்பினேஷன் கலக்கலா இருக்கிறதால இந்த ஜிகர்தண்டாவை நல்லா கலக்கியிருப்பாங்கன்னு நம்பலாம்.

என்ன ஒண்ணு லாரன்ஸ் ரசிகர்களும் எஸ்.ஜே. சூர்யா ரசிகர்களும் ’என் தலைவர்தான் கலக்கிபுட்டாரு, உன் ஹீரோ சும்மா’ ன்னு ரசிகர்களோட கெத்தை காட்டுறதுக்காக தியேட்டர் சேர்களை சேதப்படுத்தாம இருந்தா சரிதான்.

5 . இவங்க இப்படின்னா.. இன்னொரு பக்கம் ’இதோ நாங்களும் வருவோம்லே’ ங்கிற மாதிரி வெற்றிமாறன் தன்னோட விடுதலை பார்ட் – 2 படத்தை மெருகேத்திட்டு இருக்கார். முதல் பாகத்துல விஜய்சேதுபதிய காட்டிக்கொடுத்த சூரி, ரெண்டாவது விடுதலையில என்ன செய்ய காத்திருக்கார்..?னு பார்க்க.. தமிழ் சினிமா உலகம் டிக்கெட் புக்கிங் கவுன்டர் வாசல்ல காத்துட்டு இருக்கு. சில மொபைல்கார புள்ளிங்கோ ஆன்லைன் புக்கிங்குக்காக ஆர்வமா இருக்காங்க. பெரும்பாலான பார்ட் டூவுக்கு தேவையான சீன்கள் எடிட்டிக் ரூம்லெயே கிடைச்சுடும்ங்கிறதால ரொம்ப சிரமப்பட வேண்டியதில்லை.

’பொன்னியின் செல்வன்’ படமும் அப்டித்தான். வேணும்ங்கிறதை முன்னாடியே எடுத்துட்டு முதல் பாகத்துக்குப் போக, மிச்சம் மீதி இரண்டாம் பாகமா ஓடும். இது ஒரு வகையில பொருளாதார சிக்கன சீக்ரெட்டோட, நேரமும் மிச்சமாகும். நல்ல கதை கிடைக்காத பட்சத்துல எல்லா டைரக்டர்களும் முன்னாடி ஓடுன படங்களோட பார்ட் டூ எடுக்க ஆரம்பிச்சா என்ன ஆகும்..?

எது எப்படியோ.. இந்த இரண்டாம் பாகம் மேட்டரை சரவணா செல்வரத்தினம் ஸ்டோர் ஓனர் ’லெஜெண்ட்’ சரவணா அருள் காதுல விழாம இருக்கணும். இல்லன்னா பணம்தான் இருக்கேன்னு ’தி லெஜெண்ட்’ படத்தோட பார்ட் டூ வை எடுத்து, அவர் பாட்டுக்கு தூக்கிட்டு வந்து தியேட்டர்ல ரிலீஸ் பண்ணப்போறாரு.

- எம்.ஜி.கன்னியப்பன்.