ஜெயிலர் படத்தில் நடந்து வந்தே மாஸ் காட்டிய கன்னட நடிகர் சிவராஜ்குமார் யார் என்று கேட்பவர்களுக்காக அவரைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்:
* சாண்டல்வுட் என்றழைக்கப்படும் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் டாக்டர் ராஜ்குமாரின் மூத்த மகன் தான் இந்த சிவராஜ்குமார். இவருடைய இயற்பெயர் நாகராஜு சிவ புட்டசுவாமி. இவருக்கு இரண்டு தம்பிகள் ராகவேந்திர ராஜ்குமார் மற்றும் புனீத் ராஜ்குமார்.
புனீத் ராஜ்குமார் பாப்புலரான ஹீரோவாக இருந்தவர். 2021-ல் மாரடைப்பில் மறைந்து விட்டார். ராஜ்குமார் குடும்பத்தின் கலை வாரிசாக இன்று சிவராஜ்குமார் மட்டுமே திரையில் ஜொலிக்கிறார். 'சிவாண்ணா' என்று செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் அவருக்கு 61 வயதாகிறது!
* சென்னையில் பிறந்து வளர்ந்தவர் சிவராஜ்குமார். நியூ காலேஜ் முன்னாள் மாணவர். எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் நடிப்புக் கலையில் பட்டயம் பெற்றவர். ரஜினிகாந்த் மீது அளவுகடந்த அன்பு கொண்டவர்.
* சிவராஜ்குமார் குழந்தை நட்சத்திரமாக கன்னட சினிமாவில் அறிமுகமாகியிருந்தாலும் 1986-ல் 'ஆனந்த' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அந்தப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஒரேநாளில் பிரபலமானார். அதே வருடம், 'ரத சப்தமி' என்ற மியூசிக்கல் ஹிட் படத்தில் நடித்து இன்னும் நல்ல பெயரை குடும்பங்கள் மத்தியில் சம்பாதித்தார். இதனால் அடுத்த வருடம் ரிலீஸான 'மனமெச்சிடா ஹீடூகி' என்ற ரொமாண்டிக் படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உருவானது. அந்த படமும் சூப்பர் ஹிட்டாக ஹாட்ரிக் வெற்றியில் தந்தை பெயரைக் காப்பாற்றினார்.
* இவர் 1996-ல் நடித்த 'நம்மூர மந்தார ஹுவே' என்ற படம் இன்று வரை கன்னட சினிமாவின் ஆல்டைம் ரொமாண்டிக் கிளாசிக் படங்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கிறது. இந்தப் படத்தில் இவர் அணிந்து வந்த 'மந்தாரா' என்ற தொப்பி அந்தக்காலத்தில் இளைஞர் மத்தியில் ஸ்டைல் அடையாளமாகவே மாறிப்போனது. அவர் உதிர்த்த பஞ்ச் டயலாக்குகள் இப்போது வரை பிரபலம்.
* 61 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடி அப்பாவின் ரெக்கார்டை தக்க வைத்த படம் 2005-ல் ரிலீஸான 'ஜோகி'. இதைத்தான் தனுஷ் 'பரட்டை என்கிற அழகுசுந்தரம்' என்ற பெயரில் ரீமேக் செய்து சூடு போட்டக்கொண்டார். ஒரிஜினல் ஜோகியில் இவர் ஸ்டைலும், கலோக்கியல் கன்னட மொழியும் அந்நாளில் இளைஞர்கள் மத்தியில் ரொம்பவே பாப்புலர்!
* நம்ம ஊர் புதுப்பேட்டைக்கெல்லாம் முன்னோடி 'ஓம்' என்ற 1995-ல் ரிலீஸான கேங்ஸ்டர் படம். கன்னட நடிகர் உபேந்திரா இயக்கிய இந்தப் படத்தில் சத்யா என்ற கேங்ஸ்டராக நடித்திருந்தார். பெங்களூருவின் அன்டர்கிரவுண்ட் கேங்ஸ்டர்களோடு உபேந்திராவும் சிவராஜ்குமாரும் பழகி கதையை உருவாக்கியிருந்தார்கள்.
'பெக்கின்ன கண்ணு ராஜேந்திரா, தன்வீர், குரங்கு கிருஷ்ணா, ஜெதரல்லி கிருஷ்ணப்பா போன்ற நிஜ கேங்ஸ்டர்களும் படத்தில் நடித்திருந்ததால் படம் அதிகம் கவனம் பெற்றது. இப்போது வரை பல தியேட்டர்களில் அதிகபட்சமாக ரீ-ரிலீஸான படம் (550 முறை) என்ற வித்தியாசமான ரெக்கார்டையும் இந்தப் படம் பெற்றிருக்கிறது.
*1999-ல் ரிலீஸான 'ஏ.கே. 47' என்ற படம் தான் சிவராஜ்குமாரின் 50-வது படம். மிகப்பெரிய ஓப்பனிங்கோடு கோடிகளில் கலெக்ஷனை வாரிக்குவித்ததால் சூப்பர் ஸ்டார் ஆஃப் கர்நாடகா என்று அழைக்கப்பட்டார் சிவராஜ்குமார்!
* ஷாரூக்கான் நடிப்பில் கவனம் ஈர்த்த 'ஸ்வதேஷ்' படத்துக்கு இன்ஸ்பிரேஷனே 'சிகுரிட கனசு' என்ற 2001-ல் ரிலீஸான சிவராஜ்குமாரின் கன்னட சினிமா தான். ஞானபீட விருது வாங்கிய எழுத்தாளர் சிவராமின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம் ஆல் டைம் ஹிட் மூவியாக மாற பாலிவுட்டில் ரீமேக் ரைட்ஸ் வாங்கி நடித்தார் ஷாரூக்!
* சிவராஜ்குமார் நடிப்பில் 2010-ல் ரிலீசான 'சுக்ரீவா' என்ற படம் வெறும் 18 மணி நேரத்தில் 10 டைரக்டர்களால் இயக்கப்பட்டது. ஆனால் கின்னஸில் இடம் பெற முடியாமல் கோலிவுட் சினிமாவான சுயம்வரத்திடம் தோற்றுப் போனது. ஆனாலும் இன்றுவரை அதிகமுறை கன்னட டிவி சேனல்களில் ஒளிபரப்பப்பட்ட சினிமா என்ற சாதனையை தக்க வைத்திருக்கிறது.
* 'பூமி தாயிய சோச்சல மகா' என்ற 1998-ல் ரிலீஸான படத்தில் அவர் லோகேஷ் என்ற என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார். 'Mountain man' என்றழைக்கப்படும் மாஞ்சி என்ற மலையைக் குடைந்து பாதை அமைத்த பீகாரைச் சேர்ந்த விவசாயியின் வாழ்க்கையைத் தழுவி நடித்திருந்தார். இதுதான் நவாஜுதீன் நடிப்பில் 'MANJI-The Mountain Man' என்ற பெயரில் இந்தி சினிமாவாக வெளிவந்தது.
* 2003-ல் ரிலீஸான 'டான்' படம் இவருக்கு நிரந்தர ஆக்ஷன் ஸ்டார் அங்கீகாரத்தைக் கொடுத்தது. 100-வது படமான 'ஜோகய்யா' எந்த கன்னட ஹீரோவுக்கும் கிடைக்காத மிகப்பெரிய கலெக்ஷனைக் கொட்டியது எனலாம். படத்தின் ஆடியோ ரிலீஸுகு விஜய், சிரஞ்சீவி, சூர்யா என தமிழ் ஸ்டார்கள் மேடையை அலங்கரித்து சிவராஜ்குமாரை வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
* 'பஜரங்கி' கர்நாடகாவையும் தாண்டி மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு என தென்னிந்தியா முழுதும் ரிலீஸானது. இப்படத்தில் 51 வயதில் சிக்ஸ்பேக் வைத்து நடித்ததை பல ஹீரோக்களே ஆச்சர்யமாகப் பார்த்தார்கள்.
* 'பஜரங்கி' தந்த ஓப்பனிங்கைவிட அடுத்து ரிலீஸான 'வஜ்ராக்யா' எந்த கன்னட நடிகருக்கும் இல்லாத அளவுக்கு 250 தியேட்டர்களில் மாஸ் ஒப்பனிங்கோடு ரிலீஸானது. சிவகார்த்திகேயன் கேமியோ டான்ஸ் போட்டது இந்தப் படத்தில் தான்!
* பி.வாசு இயக்கத்தில் சிவராஜ்குமார் நடித்த 'சிவலிங்கா' உலக அளவில் 70 கோடியை எட்டிப்பிடித்த சிவராஜ்குமாரின் மாஸ் படம் எனலாம்.
* 2017-ல் ரிலீஸான 'மஃப்டி' என்ற படம் கலெக்ஷனில் சிவராஜ்குமாரின் கேரியரில் 100 கோடியைத் தொட்ட படம் எனலாம். மாஸான கேங்ஸ்டர் பாத்திரத்தில் கலக்கியவர் தன் முந்தைய ரெக்கார்ட்களை பிரேக் செய்து மீண்டும் மாஸ் காட்டியதோடு ஃபிலிம்பேர், மாநில அரசின் விருது உள்ளிட்ட பல விருதுகளை வாரிக்குவித்தார். இந்தப் படத்தில் இவர் செய்த ரோலைத்தான் 'பத்து தல' படத்தில் ரீமேக் செய்திருந்தார் சிம்பு. ஆனாலும், 'எங்க சிவாண்ணா செஞ்சதுல பாதிகூட சிம்பு செய்யலை' என இப்போதும் சொல்கிறார்கள் சிவராஜ்குமார் ரசிகர்கள்.
* 'தகரு' வித்தியாசமான போலீஸ் ஆக்ஷன் படம். 2018-ல் அதிக வசூல் காட்டிய மாஸ் சினிமாவாகவும் வித்தியாசமான நான் லீனியர் திரைக்கதைக்காகவும் கொண்டாடப்படுகிறது. '100 நாட்கள் பெங்களூருவில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிய சிவாண்ணா படம்' என ரசிகர்கள் இப்போதும் சில்லரைகளை சிதறவிடுகிறார்கள்.