தற்போது நமது தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களில் வரும் புதிய பாடல்களை தாண்டி, படத்தில் பயன்படுத்தப்படும் Retro பாடல்கள், அதாவது கடந்த காலத்தில் வெளியான பழைய பாடல்களுக்கே Vibe பண்ணும் ரசிகர்களே அதிகம் என்று கூறலாம். என்னதான் புதிய பாடங்களில் பழைய பாடல்களை பயன்படுத்தினாலும், இதற்கு அடித்தளம் அமைத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்றால் மிகையாகாது.
ஏனெனில் மாநகரம் முதல் தற்போது வெளியான லியோ வரை லோகேஷ் அவர் படங்களில் பழைய பாடல்களை பயன்படுத்தாமல் இருந்ததே இல்லை, ஆம்..இவர் இதுவரை இயக்கிய 5 படங்களில் சுமார் 13 பாடல்கள் வரை பழைய பாடல்களை பயன்படுத்தி உள்ளார். இதனால் இவரின் ரசிகர்கள் Loki Playlist என்று தனியாக அவர் படங்களில் பயன்படுத்தும் Retro பாடல்களை வைரலாக்கி வருகின்றனர்.
இதுவரை அவர் பயன்படுத்திய Retro பாடல்களின் முமு தகவல்கள் :
மாநகரம்:-
1. தேவாம்ருதம் - மூன்று முகம்.
1982 ஆம் ஆண்டு ஏ.ஜெகநாதன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த மூன்று முகம் திரைப்படத்தில் வரும் பாடல் தான் தேவாம்ருதம். இப்பாடல் இசையமைப்பாளர் சங்கர்-கணேஷ் இசையில், வைரமுத்து வரிகளில், பின்னணி பாடகர்களான எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மற்றும் வாணி ஜெயராம் குரலில் ஒரு டூயட் பாடலாக வெளிவந்தது.
2. இரவினில் ஆட்டம் - நவராத்திரி.
1964 ஆம் ஆண்டு ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த நவராத்திரி திரைப்படத்தில் வரும் பாடல் தான் இரவினில் ஆட்டம். இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன் இசையில், கவிஞர் கண்ணதாசன் வரிகளில், பின்னணி பாடகர் டி.எம். சௌந்தரராஜன் குரலில், கணவன் தன் மனைவியிடம் தனது வாழ்க்கையை மது மயக்கத்தில் விவரிக்கும் ஒரு சோகப்பாடலாக வெளிவந்தது.
கைதி:-
1. மீரா - புது ரோட்டுலதான்.
1992ஆம் ஆண்டு பி.சி.ஸ்ரீராம் இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த மீரா திரைப்படத்தில் வரும் பாடல் தான் புது ரோட்டுலதான். இப்பாடல் இசையமைப்பாளர் இளையராஜா இசையில், வாலி வரிகளில், பின்னணி பாடகர்களான கே.ஜெ.யேசுதாஸ் மற்றும் கே.எஸ்.சித்ரா குரலில், காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய காதலி தனது வீட்டை நினைத்து சோகத்துடன் இருக்கும் போது, காதலன் பேருந்தில் பயணம் செய்த பயணிகளுடன் சேர்ந்து காதலியை சமாதானம் செய்யும் ஒரு இரவு பயணப் பாடலாக வெளியானது.
2. ஜும்பலக்கா ஜும்பலக்கா - என் சுவாசக் காற்றே.
1999 ஆம் ஆண்டு கே.எஸ்.ரவி இயக்கத்தில், நடிகர் அரவிந்த் சுவாமி நடிப்பில் வெளிவந்த என் சுவாசக் காற்றே திரைப்படத்தில் வரும் பாடல் தான் ஜும்பலக்கா ஜும்பலக்கா. இப்பாடல் இசையமைப்பாளர் எ.ஆர். ரகுமான் இசையில், வைரமுத்து வரிகளில், பின்னணி பாடகர் ரபீ குரலில், படத்தின் கதாநாயகன் தன் கல்லூரி தோழர்களுடன் சேர்ந்து பெண்களிடம் காதலை விவரிக்கும் ஒரு காதல் பாடலாக வெளிவந்தது.
3. ஆசை அதிகம் வச்சு - மறுபடியும்.
1993 ஆம் ஆண்டு பாலு மகேந்திரா இயக்கத்தில், நடிகர் நிழல்கள் ரவி மற்றும் அரவிந்த் சுவாமி நடிப்பில் வெளிவந்த மறுபடியும் திரைப்படத்தில் வரும் பாடல். இப்பாடல் இசையமைப்பாளர் இளையராஜா இசையில், வாலி வரிகளில், பின்னணி பாடகி எஸ். ஜானகி குரலில், காதலி தன் காதலனிடம் தன் காதலை விவரிக்கும் ஒரு காதல் பாடலாக வெளிவந்தது.
4. மெட்ரோ சேனல் - இந்து.
1994 ஆம் ஆண்டு பவித்ரன் இயக்கத்தில், நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த இந்து திரைப்படத்தில் வரும் பாடல் தான் மெட்ரோ சேனல், இப்பாடல் இசையமைப்பாளர் தேவா இசையில், வாலி வரிகளில், பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் குரலில், ஆரம்பத்தில் கதாநாயகன் தன் தோழர்களுடன் நீச்சல் குளத்தில் தொடங்கி தனது காதலியிடம் நடனத்துடன் தன் காதலை விவரிக்கும் ஒரு டூயட் பாடலாக வெளிவந்தது.
மாஸ்டர்:-
1. வெத்தல போட்ட சோக்குல - அமரன்.
1992 ஆம் ஆண்டு கே.இராஜேசுவரின் இயக்கத்தில், நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த அமரன் திரைப்படத்தில் வரும் பாடல். இப்பாடல் இசையமைப்பாளர் ஆதித்யன் இசையில், வைரமுத்து வரிகளில், நடிகர் கார்த்திக் குரலில், படத்தின் கதாநாயன் கேங்ஸ்டராக பொதுமக்கள் கூட்டத்திற்கு இடையில் நண்பர்கள் மற்றும் சில்க் சுமித்தாவுடன் சேர்த்து ஆடும் ஒரு குத்தாட்டப் பாடலாக வெளிவந்தது.
2. கருத்த மச்சான் - நெல்லு புது நத்து.
1991 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில், நடிகர் நெப்போலியன் நடிப்பில் வெளிவந்த புது நெல்லு புது நத்து திரைப்படத்தில் வரும் பாடல். இப்பாடல் இசையமைப்பாளர் இளையராஜா இசையில், இளையராஜா வரிகளில், பின்னணி பாடகி எஸ். ஜானகி குரலில் வரும் ஒரு காதல் பாடலாக வெளிவந்தது.
விக்ரம் :-
1. சக்கு சக்கு வத்திக்குச்சி - அசுரன்.
1995 ஆம் ஆண்டு ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில், நடிகர் அருண் பாண்டியன் மற்றும் நெப்போலியன் நடிப்பில் வெளிவந்த அசுரன் திரைப்படத்தில் வரும் பாடல். இப்பாடல் இசையமைப்பாளர் ஆதித்தன் இசையில், பிறைசூடன் வரிகளில், பாடகர்களான சுஜாதா மோகன், ஆதித்யன் குரலில் வரும் ஒரு குத்து பாடலாக வெளிவந்தது.
2. கல்வியா செல்வமா வீரமா - சரஸ்வதி சபதம்.
1966 ஆம் ஆண்டு ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த சரஸ்வதி சபதம் திரைப்படத்தில் வரும் பாடல். இப்பாடல் கே.வி.மகாதேவன் இசையில், கவிஞர் கண்ணதாசன் வரிகளில், டி.எம். சௌந்தரராஜன் குரலில், நாரத முனிவர் வேட்டத்தில் நடித்த சிவாஜி கணேசன் ஒரு சராசரி மனிதனுக்கு தேவைப்படும் திறமையை பூலோகம் முழுவதும் நடந்து கொண்டே விவரிக்கும் ஒரு பாடலாக வெளிவந்தது.
லியோ :-
1. கரு கரு கருப்பாயி - ஏழையின் சிரிப்பு.
2000 ஆம் ஆண்டு கே. சுபாஷ் இயக்கத்தில், நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த ஏழையின் சிரிப்பு திரைப்படத்தில் வரும் பாடல். இப்பாடல் இசையமைப்பாளர் தேவா இசையில், கே.சுபாஷ் வரிகளில், உன்னி மேனன் மற்றும் அனுராதா ஸ்ரீராம் குரலில் வரும் ஒரு டூயட் பாடலாக வெளிவந்தது.
2. தாமரை பூவுக்கும் - பசும்பொன்.
1995 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில், நடிகர் பிரபு நடிப்பில் வெளிவந்த பசும்பொன் திரைப்படத்தில் வரும் பாடல். வித்யாசாகர் இசையில், வைரமுத்து வரிகளில், சுஜாதா மோகன் மற்றும் கிருஷ்ணச்சந்திரன் குரலில் வரும் ஒரு காதல் பாடலாக வெளிவந்தது.
3. நான் பொல்லாதவன் - பொல்லாதவன்.
1980 ஆம் ஆண்டு முக்தா சீனிவாசன் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பொல்லாதவன் திரைப்படத்தில் வரும் பாடல். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், கவிஞர் கண்ணதாசன் வரிகளில், எஸ்.பி. பாலசுப்பிரமணியம் குரலில் வரும் பாடல்.
- மு.குபேரன்.