அந்த காலத்துல ஃபிலிம்முக்கு வசனம் எழுதுன ரைட்டர்கள் பேனாவ நெருப்புல காட்டிக் காட்டி எழுதியிருப்பாங்களோ என்னவோ..? டயலாக்குல அனல் பறக்கும், அதோட, கங்கு நெஞ்சுல பாய்ஞ்சு கண்ணுல தெரிக்கும். அவ்ளோ கருத்தாவும், ஆழமாவும் இருக்கும். கணீர் குரல்ல பேசுற கண்ணாம்பா, வீராப்பா பேசுற பி.எஸ்.வீரப்பா வசனங்களை திரும்பத் திரும்பக் கேட்டுக்கிட்டே இருக்கலாம்.
பக்கம் பக்கமா இருந்தலும், பார்க்காம பேசுறதுல சிவாஜிய விட்டா ஜில்லாவுல ஆளே இல்லை. அதுலயும் ஜெமினிகணேசன் ’தம்’ கட்டி பேசும்போது ஐயோ பாவம்னு சோட உடைச்சிக் கைல கொடுக்கணும்போல நமக்குத்தோணும். அந்த அளவுக்கு அப்போ வந்த வசனங்களால ஸ்கிரீன் துணியே கிழிஞ்சு தொங்கியிருக்கு.
1. ஃபாதர் - சன்னுக்குள்ள நடக்கிற சண்டைதான் ’மனோகரா’படம். மன்னரான சிவாஜியோட அப்பா, இல்லீகலா ஒரு பொண்ணோட உறவுல இருப்பார், அரண்மனையில ஆசை நாயகியா வெச்சிருப்பாரு. மனைவி கண்ணாம்பாவையும், மகன் சிவாஜியையும் அம்போன்னு விட்டுட்டு, அந்த பெண்ணோட குடும்பம் நடத்துறதை பொறுத்துக்க முடியாத நடிகர் திலகம், ஃபேமலி சம்பந்தமா அரசர் அப்பாகிட்ட ’நீ செஞ்சது சரியா..?’ னு கொஸ்டீன் கேட்க போனப்பதான் பிரச்சனை பெருசாயிடுது.
மனோகரனான சிவாஜி வாய்க்கு வந்தபடி அசிங்கம அப்பாவைத் திட்டுறாரு. தனியா ரூம்ல கூப்ட்டு திட்டிருந்தாக் கூட பெத்த புள்ளதான ஏசுதுன்னு இருந்திருப்பாரு, நாலு ஜனம் கூடும் சபையில, அந்தப் பொண்ணு முன்னாடி திட்டினதால அரசர் பொங்கி எழுந்து மகனை ’வேசி மகனே’ன்னு திட்டினதும் சிவாஜிக்கு நெஞ்சு கொதிக்குது, கண்ணு துடிக்குது, கை பரபரங்குது.
அப்போ சிவாஜி கேப்விடாம பேசுற டயாலாக்குதான் இது. “புருஷோத்தமரே.. புரட்டுக்காரியின் உருட்டும் விழியிலே உலகத்தைக் காண்பரே.. மயிலுக்கும் மந்திக்கும் வித்தியாசம் தெரியாத மதிவாளரே.. குளிர்நிலவை கொள்ளிக்கட்டையெனும் குடுடரே’. னு மனுசன் பட்டாசு மாதிரி பொறிஞ்சு தள்ளுவாரு. கலைஞர் வசனமில்லையா அப்டிதான் இருக்கும்.
2. நாட்டுல போர் வந்து பத்து வருஷமா மக்கள் பசி பஞ்சம்னு சாப்பாட்டுகே வழியில்லாம இருக்காங்க. அப்போ திடீர்னு போர் நிறுத்தம் அறிவிப்பு வந்ததும். மக்களை விட போர் வீரர்கள் முகத்துல புன்னகை ஊஞ்சலாடுது, சந்தோஷம் சாமரம் வீசுது. ’அப்பாடா இனிமே சண்டையில செத்துப்போகாம பொண்டாட்டி புள்ளைங்கள போய் பார்க்கலாம்’னு ஆசைல துள்ளிக் குதிக்கிறாங்க.. அப்டி மக்கள் மகிழ்ச்சியா இருக்கிறதை காட்டிட்டு, கூடவே நம்பியாரையும் காட்டும்போதுதான் சிக்கல் நக்கல் பண்ண ஆரம்பிக்கப் போகுதுன்னு நமக்குத் தெரியவருது.
நெனைச்ச மாதிரியே மீண்டும் போர் அறிவிப்பை அறிவிக்கிறார் ’சர்வாதிகாரி’ பட வில்லன் நம்பியார்.. சர்வாதிகார வில்லனுக்கு போட்டியா ஒரு வீரமான ஹீரோவை இறக்கி விடுறதுதான உலக வழக்கம். அப்டி வந்து இறங்குறவர்தான் எம்.ஜி.ஆர். ஒரு சீன்ல பேச ஆரம்பிப்பார் பாருங்க… ‘உழைத்து உழைத்து உருக்குலைந்து உயிருக்குப் மன்றாடும் ஏழை மக்கள், அதிகார வர்க்கத்தை நோக்கி அவலத்தை கூறினால் விதி என்கிறார். அங்கே பச்சைத் தண்ணீருக்கு கூட பஞ்சம், இங்கே பன்னீர் கலந்த பழரசம், அங்கே அழுகுரல், இங்கே ஆனந்த கீதம்’னு படத்தோட டயலாக் ரைட்டர் ஏ.வி.பி ஆசைதம்பி ங்கிறவர் எழுதிக்கொடுத்ததை பேசி கைத்தட்டலை அள்ளுவார் பொன்மனச் செம்மல்.
3. வீரபாண்டிய கட்டபொம்மன்’ ங்கிற படத்துல வெள்ளையம்மாவாகிய பத்மினியை மேரேஜ் பண்ணிக்கணும்னா அவங்க கண்ணுக்கு கண்ணா வளர்த்த காளை மாட்டை அடக்கணும்னு சொல்றாங்க. ’காதல் மன்னன்’ ஜெமினி கணேசன் தான் காதலிக்கிற பத்மினிக்காக செவனேன்னு கட்டிவெச்சிருந்த காளையோட கொம்பை பிடிச்சி ஆட்டி, மல்லுக்கட்டி அடக்கின மாதிரி பத்மினிய கல்யாணம் பண்ணிக்குவாரு.
அந்த சமயத்துல எதிரி நாடு, தன் நாட்டு மேல படை எடுக்க வர்றதா துணி ஓலைல ’மெசேஜ்’ வருது. அதைக்கேட்டதும் போருல போட்டுக்கிற கவச காஸ்ட்ட்யூமை மாட்டிக்கிட்டு, ஒஃய்ப் சென்டாப் பண்ணி அனுப்பினா சந்தோஷமா போலாம்னு பத்மினிகிட்ட பர்மிஷன் கேட்க வந்தா.. அந்தம்மா.. ’போகாதே.. போகாதே என் கணவா பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்’ னு பாட்டுலயே ஓ..னு அழுது ஒரே ஒப்பாரி. அங்கதான் பேச ஆரம்பிப்பாரு பாருங்க.. அடேங்கப்பா.. ’ஆண்மையின் அழிவிற்கு கண்ணீர் காரணமாகிவிடக்கூடாது.
பொண்ணின் பெருமையை குழைப்பவளே பேசாமல் போ. ராகு காலம் பார்த்தா இடி இடிக்கும்.. நெருப்பு அணையட்டுமே என்று காற்று காத்திருக்குமா.? அதுபோல் வீரத்துக்கு வேலி என்னடி.. கடமைக்கு முன் கருணை காட்டுவது மடமையல்லவா….? னு மூணு தடவை போர்..போர்..போர் சத்தமா கத்திட்டு கத்திய தூக்கிட்டு ஓட்டமா ஓடுவாரு. இந்த வசனத்தை சக்தி கிருஷ்ணசாமிங்கிறவர் எழுதியிருப்பாரு.
4. ‘அன்பைக் கொன்றுப் புதைத்து அங்கே எழும் ஆலயத்தில் ’அன்பே கடவுள்’ என்று எழுதாதீர்கள். ஐயாயிரம் குடிசைகளை நிர்மூலமாக்கிவிட்டு, அங்கே ஆண்டவன் எழுந்தருள்வான் என்றால் அதற்குப் பெயர் ஆலயம் என்றா கூறுவர் அறிவுடையோர். ஆண்டவனுக்கு அர்ச்சிக்கப்படும் மலர்களிலே அந்த ஏழைகள் சிந்திய ரத்தக் கரையல்லவா படிந்திருக்கும்.
பக்தி கீர்த்தனை கேட்காது பகவான் சந்நிதானத்திலே வாழ்விழந்த மக்களின் அழுகுரல் கேட்கும், புலம்பல் கேட்கும், ஒப்பாரி கேட்கும். வேண்டாம். ஆண்டவன் பெயரால் ஆண்டவனுக்கே கலங்கம் தேடாதீர்கள்’னு அனலடிக்கிற டயலாக்கை கேக்கும் போதே கண்டிப்பா இது கலைஞர் எழுதின வசனம்தான்னு கன்பாஃர்ம் பண்ணத்தோணுதுல்ல..? கரெக்ட்.
’மணி மகுடம்’ படத்துக்காக கலைஞர் எழுதின வசனத்தைதான் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மனப்பாடம் பண்ணி பேசியிருப்பாரு. அப்றம், ஏற்கனவே அந்த நாட்டுல ஆயிரம் கோவில்கள் இருக்கும்போது, மக்கள் சோறு பொங்கித் திண்ணுகிட்டு இருக்கிற குடிசைய இடிச்சி, கடாசி தள்ளிட்டு கோவில் கட்டினா யாருக்கு தாங்க காண்டாகாது…?
5. ’ராஜராஜ சோழன்’ படத்துல ஒரு லேண்ட் பிரச்சனை வருது. அதாவது, ஒரு நாட்டோட இளவரசன் முத்துராமன். இன்னொரு நாட்டுக்கு மன்னர் சிவாஜி. சிவாஜிக்கு மருமகனாகப்போகிற முத்துராமன்கிட்ட, ’எதிரி நாட்டுக்காரன் முதலில் உன் நாட்டை போர்ல ஜெயிச்சிட்டு, அப்புறமா என்கிட்ட சண்டைக்கு வர்றதா காத்து வாக்குல பேச்சு அடிபடுது.
அதனால. ஒரு சேஃப்டிக்காக என் நாட்டு ஜோல்ஜரை உன் நாட்டுல கொஞ்ச நாளைக்கு நிறுத்தலாம்னு இருக்கேன்’ னு சொன்னதோட, என் நாட்டு ராஜதந்திரியான நம்பியாரும் உங்க நாட்டை ’மெயிண்டெய்ன்’ பண்ண கூட அனுப்புறேன்’ னு சொன்னதும். பயங்கர கடுப்பான முத்துராமன்… ’சக்ரவர்த்திகளே… விடுதலைப் பெற்ற வேங்கை நாட்டின் சுதந்திரத்தை பறித்து எங்களை அடிமைப்படுத்த நினைத்தால் அது இந்த விமலாதித்தன் இருக்குவரை மட்டுமல்ல, இறந்த பிறகும் கூட நடக்காது.
உங்கள் ராஜதந்திரி பாலதேவன் உருட்டி விலையாட இந்த விமலாதித்தன் ஒன்றும் சொக்கட்டான் காயல்ல..’ னு தன்னோட வருங்கால மாமனார்ங்கிற ஒரு மட்டு மரியாதை இல்லாம, எடுத்தெறிஞ்சு பேசிட்டு போயிட்டே இருப்பார். இப்டி பல இடத்துல பொறி பறக்கும். இந்தப் படத்துக்கு வசனம் அரு.ராமநாதன் என்கிற பிரபல எழுத்தாளர் எழுதியிருப்பார்.
- எம்.ஜி.கன்னியப்பன்.