நதியே நதியே டைம்பாஸ்
சினிமா

'நதியே நதியே காதல் நதியே' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 16

வசந்த் கேட்டது போல், நதியைப் பெண்ணுடன் ஒப்பிட்டு எழுதிய வைரமுத்து மனிதகுலத்தின் வாழ்க்கையையும் நீரோடு இணைத்து, “தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம்… தண்ணீர் கரையில் முடிக்கிறோம்…” என்று சொல்லியிருப்பார்.

ஜி.ஆர்.சுரேந்தர்நாத்

நதியே நதியே காதல் நதியே: நதிக்கரை நினைவுகள்

னது ஐம்பதாண்டு கால வாழ்க்கையில் தமிழ்நாட்டிலும்,  கேரளாவிலும், கர்நாடகாவிலும் எத்தனையோ நதிகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் நதி என்றால், முதலில் என் நினைவுக்கு வருவது… தஞ்சாவூர், வடவாறுதான். அதுவும் கீழவாசல் வடவாறுதான். ஏனெனில் நான் முதன்முதலில் குளித்த நதி கீழவாசல் வடவாறுதான்.

நான் அப்போது வசித்து வந்த அரியலூருக்கு அருகில் மருதையாறு இருந்தாலும், அது நான் பார்த்த வரையில் எப்போதும் வெறும் மணல்வெளியாகவே இருக்கும். ஆனால் நான் நீரே பார்த்திராத மருதையாற்றில் 23.11.1956 அன்று வெள்ளம் வந்து, மருதையாற்று ரயில் பாலத்தில் ‘தூத்துக்‌குடி எக்ஸ்பிரஸ்’ கவிழ்ந்து 250 நபர்கள் பலியானதாகவும், அதற்கு தார்மீக பொறுப்பேற்று அப்போது மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி ராஜினாமா செய்தார் என்றும் கேட்கும்போது ஆச்சர்யமாக இருக்கும். மற்றபடி அரியலூர் நகருக்குள் நீரோடு இருந்தவை ஏரிகள்தான். எனவே சில்லென்றிருக்கும் நதி நீரில் தயக்கத்துடன் காலைத் தொட்டு தொட்டுப் பார்த்து, ஒரு இனம் புரியாத அச்சத்துடன் முதன் முதலில் ஆற்று நீரில் இறங்கிய நதி… தஞ்சாவூர் வடவாறுதான்.

       பள்ளியில் படிக்கும்போது, ஒவ்வொரு ஆண்டும் காலாண்டு விடுமுறையின் போது என் அம்மா வழி தாத்தா ஊரான தஞ்சாவூருக்குச் செல்வோம். எங்கள் தாத்தா வீடிருக்கும் பிள்ளையார்  கோயில் வார்காரத்  தெருவிலிருந்து, வடவாறு அரை கிலோமீட்டர் தொலைவுதான். செப்டம்பர் மாதம்தான் காலாண்டு விடுமுறை என்பதால், காவிரி நதியின் கிளை நதியான வடவாற்றில் அந்த சமயத்தில் இரு கரையையும் தொட்டுக்கொண்டு வடவாறு ஓடும் காட்சி இன்னும் என் கண்களில் இருக்கிறது.

காலையில் வடவாற்றுக்குச் செல்லும் வழியில், எதிரில் ஆற்றில் குளித்துவிட்டு வரும் பெண்கள் ஈரப்புடைவையை உடம்பில் சுற்றிக்கொண்டு, வெற்றுத் தோளுடன் நடந்து வருவதைப் பார்த்தவுடன் நாம் வடவாற்றை நெருங்கிவிட்டதைத் தெரிந்துகொள்ளலாம். வடவாறு படித்துறையை நெருங்கும்போது ஆற்றில் நீர் ஓடும் சத்தமும், சின்னப்பசங்களும், வாலிபப் பசங்களும் சறுக்கு மரத்திலிருந்து சத்தத்துடன் நீரில் குதிக்கும் சத்தமும் கேட்கும்போதே உள்ளுக்குள் சின்ன குதூகலம் கிளம்பிவிடும். மேலும் ஆற்றை நெருங்க நெருங்க… படித்துறையிலிருந்து வரும் சீயக்காய்த்தூள், சந்திரிகா சோப், துணி சோப் எல்லாம் கலந்து வீசும் ஒரு அபூர்வமான வாசனையை  இப்போதும் என்னால் துல்லியமாக உணரமுடிகிறது.

       என் தாத்தாவோ, மாமாக்களோ எங்களை ஆற்றிற்கு அழைத்துச் செல்லமாட்டார்கள். என் அம்மாவும், பாட்டியும், விஜயா அத்தையும், சந்திரா அத்தையும்தான் ஆற்றிற்கு அழைத்துச் செல்வார்கள் என்பதால், பெண்கள் படித்துறைக்குதான் செல்வோம். பெண்கள் படித்துறை பெண்களுக்கே உரிய சலசலப்புடன் சிரிப்புச் சத்தமும், படிக்கட்டில் துணியை அடித்துத் துவைக்கும் சத்தமும், சத்தமான பேச்சுமாக கலகலப்பாக இருக்கும். ஈரப்படிக்கட்டுகளில் பெண்கள் தேய்த்த மஞ்சளில், துணி சோப்பு கலந்து சிவப்பாக காணப்படும் வேதியியல் விந்தையை வியந்து பார்த்துக்கொண்டிருக்கும்போதே, “எப்ப கௌசி வந்த?” என்று பலரும் என் அம்மாவை விசாரித்துவிட்டு, “எத்தனாவதுடா படிக்கிறீங்க?” என்று என்னையும் தம்பிகளையும் விசாரிப்பார்கள். நான், “மூணாவது…” என்று சொல்லிக்கொண்டே நீரில் பாவாடையுடன் நீச்சல் அடிக்கும் பெண்களை ஆச்சர்யத்துடன் பார்ப்பேன். ஏனெனில் அப்போது அவர்களின் பாவாடைக்குள் நீர் புகுந்து பாவாடை பலூன் போல் உப்பிக்கொண்டிருப்பதை பார்ப்பதற்கு அவ்வளவு  அழகாக இருக்கும்.

நீரில் இறங்கப் பயப்படும் எங்களை என் அம்மா பிடித்து கடைசி படிக்கட்டில் உட்கார வைப்பார். உட்கார்ந்தவுடன் நீருக்குள் இருக்கும் படிக்கட்டில் கால் வைத்தவுடன் மீன்கள் கால் விரல்களைக் கடிக்கும் கூச்ச உணர்வில் நானும் தம்பிகளும் மகிழ்ச்சியாக கூச்சலிடுவோம். நான் தம்பிகளைப் பிடித்து நீரில் தள்ளிவிட… என் அம்மாவும், அத்தையும் என் ஈர முதுகில் சுள்ளென்று அடிக்க… வலி உயிர்போகும். எதிர்கரை மூங்கில் குச்சியில் தொங்கிக்கொண்டே குளிக்கும் பெண்களை வேடிக்கைப் பார்க்கும் இளைஞர்களிடம், “நீங்கள்லாம் அக்கா தங்கச்சியோட பொறக்கலையாடா எடுவட்டப் பசங்களா?” என்று என் பாட்டி திட்டுவதை எதற்கு திட்டுகிறார்கள் என்று ஆச்சர்யத்துடன் பார்ப்பேன். என் பாட்டி என் தலையை நீருக்குள் அழுத்தி முங்கும்போது தண்ணீர் குடித்து பதட்டத்துடன் வெளியே வந்து, மூக்கில் சளியுடன் வழியும் தண்ணீரை மூச்சிறைக்க துடைத்துகொள்வேன்.

       இவ்வாறு என் காலாண்டு விடுமுறை நாட்கள், வடவாறில் நனைந்த நாட்களாக விரியும். வயது அதிகரிக்க… அதிகரிக்க…. நான் என் மாமாப் பசங்களான தீனா, கோபி, ரவி, ராஜு ஆகியோருடன் பெண்கள் படித்துறையிலிருந்து ஆண்கள் படித்துறைக்கு இடம் மாறினேன்.

பிறகு வளர்ந்து வேலையில் சேர்ந்து, ஊர் சுற்ற ஆரம்பித்த பிறகு எத்தனையோ நதிகளைப் பார்த்துவிட்டேன். அதிகாமம் கொண்ட பெண் போல் ஆவேசமாக சுழித்துக்கொண்டு ஓடும் களக்காடு முண்டந்துறை நதியிலிருந்து, புதிதாக காதலிக்க ஆரம்பித்த பெண் போல் சில்லென்று ஓடும் தென்மலா ஆறு, வயது ஏறினாலும் அழகு குலையாத பெண் போல் மே மாத  வெயிலும் தண்ணீர் ஓடும் கோழிக்கோடு ஆறு, கல்லூரி செல்லும் பெண்கள் போல கலகலப்பாக ஓடும் வீரபாண்டி முல்லைப் பெரியாறு…. என்று எத்தனையோ ஆறுகளைப் பார்த்துவிட்டேன். ஆனாலும் நினைக்கும்தோறும் நதி என்றால் முதலில் நினைவுக்கு வருவது  குறுகலான தஞ்சாவூர் கீழவாசல் வடவாறுதான். இப்போதும் தஞ்சாவூருக்குச் சென்றால், வடவாற்றில் நீர் ஓடினாலும், ஓடாவிட்டாலும் நானும், தீனாவும் வடவாற்று படித்துறை அரசமரத்தடியில் அமர்ந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்போம்.

பெண்கள்தான் எனக்கு முதன்முதலில் நதியை அறிமுகப்படுத்தியதாலோ என்னவோ, ‘ரிதம்’ படத்தில் ஏ.ஆர். ரஹ்மானின் மகா அற்புதமான இசையில் ஒலித்த, “நதியே… நதியே… காதல் நதியே… நீயும் பெண்தானே?” என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இப்பாடலில் வைரமுத்து நதியைப் பெண்ணுடன் ஒப்பிட்டு அருமையாக எழுதியிருந்த விதம், இப்பாடலை வைரமுத்துவின் மிகச் சிறந்த பாடல்களுள் ஒன்றாக ஆக்குகிறது. சின்ன ஜேசுதாஸ் என்று நான் அழைக்கும் உண்ணி மேனன் மிக சிறப்பாக பாடிய பாடல்களுள் ஒன்று இது.  உலகப் புகழ் பெற்ற டைம் மேகஸினில், ரஹ்மானின் 20 சிறந்த இசை ஆல்பங்களைப் பட்டியலிட்டபோது  அதில் ‘ரிதம்’ ஆல்பமும் இருந்ததற்கு, இப்பாடலே முதன்மையான காரணமாக இருக்கக்கூடும்.

   இந்த ஈரமான பாடலுக்கான வித்து ஏ.ஆர். ரஹ்மானின் ஸ்டுடியோவிலோ அல்லது ஏதேனும் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் அறையிலோ உருவாகவில்லை. ‘ரிதம்’ படத்திற்கான பாடல் கம்போஸிங்கை மதுரை பசுமலை தாஜ் ரீடிரிட்டில் ஆரம்பிக்க அப்படத்தின் இயக்குனர் வசந்த் திட்டமிட்டார். இதற்காக தயாரிப்பாளர் பிரமிட் நடராஜனும், பாடலாசிரியர் வைரமுத்துவும் முன்பே மதுரைச் சென்றுவிட்டார்கள். பின்னர் தனியாக ரஹ்மானும், வசந்தும் மதுரை செல்வதாக திட்டம்.

அன்று ரஹ்மானின் ரிக்கார்டிங் தியேட்டரிலிருந்து ரஹ்மானும், வசந்தும் விமான நிலையம் செல்ல தாமதமாகிவிட்டதால், அவர்கள் புக் செய்திருந்த மதுரை விமானம் சென்றுவிட்டது. அடுத்த விமானம் இரண்டு மணி நேரம் கழித்துதான் என்பதால் ரஹ்மான்  வசந்தை அழைத்துக்கொண்டு அருகில் இருக்கும் ஒரு தர்க்காவிற்கு சென்றார். அதன் பிறகும் நேரம் இருந்ததால் அவர்கள் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு எதிரில் உள்ள ஹென்கலா என்ற ஹோட்டலுக்குச் சென்று காபி அருந்தினர்.

        அப்போது வசந்த் ரஹ்மானிடம், “பல்லாண்டுகள் கழித்தும் மக்கள் பிரியத்துடன் கேட்கும் பாடல்களாக இப்படத்தின் பாடல்கள் இருக்கவேண்டும். நீர், நிலம், காற்று ஆகாயம், நெருப்பு என்ற பஞ்சபூதங்களாலானது வாழ்க்கை. அந்த பஞ்சபூதங்களை மையக்கருவாகக் கொண்டு ‘ரிதம்’ படத்தில் ஐந்து பாடல்கள் அமையவேண்டும்” என்று சொன்ன யோசனை ரஹ்மானுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

மதுரை பசுமலையில் கம்போஸிங் ஆரம்பித்தது. ‘ரிதம்’ படத்திற்காக ரஹ்மான் முதலில் ட்யூன் போட்ட பாடல் ‘நதியே… நதியே…” பாடல்தான். இந்த ட்யூனுக்கு பாடல் எழுதுவதற்கு முன்பு வசந்த், கவிஞர் வைரமுத்துவிடம் இரண்டு கோரிக்கைகள் வைத்தார்.  “நதியையும் பெண்ணையும் ஒப்பிட்டு இப்பாடல் எழுதப்படவேண்டும். இரண்டாவதாக… கண்ணதாசன், “போனால் போகட்டும் போடா…” பாடலில் மரணத்தைப் பற்றி  “கோர்ட்டுக்கு போனால் ஜெயிக்காது. அந்தக் கோட்டைக்கு போனால் திரும்பாது…” என்று இரண்டே வரியில் சொன்னது போல், இந்தப் பாடலில் “வாழ்க்கை என்றால் என்ன?” என்று இரண்டு வரியில் சொல்லவேண்டும்” என்றார் வசந்த் வைரமுத்துவிடம்

வசந்த் கேட்டுக்கொண்டது போல், நதியைப் பெண்ணுடன் ஒப்பிட்டு அற்புதமாக எழுதிய வைரமுத்து மனிதகுலத்தின் வாழ்க்கையையும் நீரோடு இணைத்து, “தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம்… தண்ணீர் கரையில் முடிக்கிறோம்…” என்று சொல்லியிருப்பார்.

அப்படி உருவான இப்பாடலை அப்பாடலுக்கு நியாயம் செய்வது போல் வசந்த் மிக அருமையாக காட்சிப்படுத்தியிருந்தார். இந்தப் பாடல், கதாநாயகனான அர்ஜுன் அறிமுகமாகும் பாடல் ஆகும். பொதுவாக தமிழ் சினிமாவில் கதாநாயகனை அறிமுகப்படுத்தும் போது, ஒருவன் மார்க்கெட்டில் அந்தரத்தில் பறந்து வந்து பொத்தென்று பொரியின் மீதோ அல்லது கலர் பொடிகளின் மீதோ விழுவார். அப்போது கதாநாயகனின் இரண்டு ஆவேசமான கண்கள்  அல்லது அதிரடியாக நடக்கும் கால்களைக் காண்பிப்பார்கள். ஆனால் இப்பாடலில் அர்ஜுன்  அருவியின் சாரல் துளிகளுக்கிடையே ஃப்ளேம் ஆரஞ்சு நிற டீசர்ட் அணிந்தபடி அறிமுகமாகும் காட்சி அட்டகாசமாக இருக்கும்.

இப்பாடலை படமாக்கும்போது வசந்த் நதி நீரின் அத்தனை வகைகளையும் திரையில் காண்பிக்கவேண்டும் என்று நினைத்தார். அமைதியாக ஓடும் நீர், ஆர்ப்பாட்டத்துடன் ஓடும் நீர் பெரும் சத்தத்துடன் விழும் அருவி… என்று அனைத்தையும் காண்பிக்க நினைத்தார். எனவே நல்ல மழைக்காலத்தில் ஒகேனக்கல், குற்றாலம், சாலக்குடி மற்றும் கர்நாடகாவில் உள்ள சிம்சா  அருவி ஆகிய இடங்களில் மிகுந்த சிரமங்களுக்கிடையே இப்பாடலை படமாக்கினார்கள். தமிழில் மிகவும் அரிதாகவே நல்ல பாடல்கள், சிறப்பாக காட்சியாக்கப்பட்டிருக்கும். அந்த அரிய பாடல்களுள் ஒன்று இது.

தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா திரனா

நதியே நதியே
காதல் நதியே

நீயும் பெண்தானே…

 அடி நீயும் பெண்தானே

ஒன்றா இரண்டா
காரணம் நூறு

கேட்டால் சொல்வேனே

நீ கேட்டால் சொல்வேனே

தீம்தனனா…


நடந்தால் ஆறு
எழுந்தால் அருவி

நின்றால் கடல் அல்லோ

சமைந்தால் குமரி

மணந்தால் மனைவி
பெற்றால் தாய் அல்லோ

சிறு நதிகளே
நதியிடும் கரைகளே
கரைதொடும் நுரைகளே
நுரைகளில் இவள் முகமே

தினம் மோதும்
கரை தோறும்

அட ஆறும் இசை பாடும்

ஜில் ஜில் ஜில்
என்ற சுதியிலே

கங்கை வரும்

யமுனை வரும்
வைகை வரும்

பொருநை வரும்

ஜல் ஜல் ஜல்
என்ற நடையிலே


காதலி அருமை பிரிவில்

மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை அறிவாய்
கோடையிலே

வெட்கம் வந்தால் உறையும்

விரல்கள் தொட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று
வாடையிலே

தண்ணீர் குடத்தில்
பிறக்கிறோம்… ஓஹோ
தண்ணீர் கரையில்
முடிக்கிறோம்… ஓஹோ

தீம்தனனா…


வண்ண வண்ண பெண்ணே

வட்டமிடும் நதியே

 வளைவுகள் அழகு
உங்கள் வளைவுகள் அழகு

ஹோ.. மெல்லிசைகள் படித்தல்

மேடு பள்ளம் மறைத்தல்
நதிகளின் குணமே

அது நங்கையின் குணமே

சிறு நதிகளே
நதியிடும் கரைகளே
கரைதொடும் நுரைகளே
நுரைகளில் இவள் முகமே

தீம்தனனா…

தேன்கனியில் சாராகி

பூக்களிலே தேனாகி

பசுவினிலே பாலாகும் நீரே

தாயருகே சேயாகி
தலைவனிடம் பாயாகி
சேயருகே தாயாகும் பெண்ணே

பூங்குயிலே பூங்குயிலே

பெண்ணும் ஆறும்

வடிவம் மாறக்கூடும்
நீர் நினைத்தால்

பெண் நினைத்தால்

கரைகள் யாவும்
கரைந்து போக கூடும்

நதியே நதியே
காதல் நதியே நீயும்
பெண்தானே…

 அடி நீயும்
பெண்தானே

ஒன்றா இரண்டா
காரணம் நூறு

கேட்டால் சொல்வேனே

நீ கேட்டால் சொல்வேனே

தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா திரனா

(தகவல் உதவி: விஜய் மகேந்திரன் எழுதிய “ஏ.ஆர். ரஹ்மான்: நவீன இந்தியத் திரையிசையின் அடையாளம்” என்ற புத்தகம்)