ராஜ் கமல் படங்கள்: ராகேஷ்.
சினிமா

Tamil Serials : சீரியலில் நடித்து நிஜத்தில் இணைந்த ஜோடிகள் ! - சிறிய இடைவேளைக்கு பிறகு | Epi 3

கணவன் மனைவியா வருஷக் கணக்குல நடிச்சுட்டு வர்றப்ப, ஹீரோ ஹீரோயின் ரெண்டு பேருமே திருமணமாகாதவங்களா இருந்தா, அவங்களுக்குள் அவங்களை அறியாமலேயே நிஜமான கணவன் மனைவி மாதிரியே ஃபீல் பண்ண ஆரம்பிச்சிடுறாங்க.

டைம்பாஸ் அட்மின்

தேவதர்ஷினி - சேத்தன், ப்ரீத்தி-சஞ்சீவ், போஸ் வெங்கட்-சோனியா, ஶ்ரீ-ஷமிதா, செந்தில்-ஶ்ரீஜா.., மதன் -ரேஷ்மா, அன்வர்-ஷமீரா, ஆல்யா-சஞ்சீவ் சீரியல்களில் நடிக்கிற போது ஆண்டுக் கணக்கில் ஒரே இடத்தில் ஒரே குடும்பமாய் பழகும் சூழலில் காதல் மலர்ந்து நிஜ வாழ்க்கையில் இணைந்த ஜோடிகள் இவர்கள். பட்டியல் போட்டால் அது நீண்டு கொண்டே போகும்.

ரீல் ஜோடிகளை ரியல் ஜோடிகளாக்குகிற சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் கதைகளை காலத்துக்கும் மறப்பதில்லை இந்த ஜோடிகள். சீனியர் சீரியல் ஆர்ட்டிஸ்ட் ஒருவரிடம் பேசிய போது, ''சேட்டிலைட் சேனல்களின் ஒளிபரப்பு தொடங்கிய அதாவது சன் டிவி மட்டுமே இருந்த ஆரம்ப காலத்துல ஷூட்டிங் ஸ்பாட்னு தனியா ஒண்ணு கிடையாது. சினிமா ஸ்டூடியோக்களில் ஷூட் பண்ணுவாங்க. இல்லையா, சேனலுக்கு நெருக்கமானவங்க யாராவது பெரிய வீடுகள்ல இருந்தா, அந்த வீடுகள்லயே ஒரு ஓரமா ஷூட்டிங்கை வச்சிடுவாங்க. அவங்களுக்கும் 'தங்களுடைய வீடு டிவியில வருது'ங்கிற சந்தோஷம். அதனால வாடகைன்னு பணமெல்லாம் கூட எதிர்பார்க்க மாட்டாங்க.

இப்படித்தான் கொஞ்ச நாள் போச்சு. பிறகு கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள ரிசர்ட்டுகள்ல கொஞ்ச காலம் ஷூட் பண்ணினாங்க. கொஞ்ச நாள் ஆனதும், மேலும் பல சேனல்கள் வந்து, சீரியல்களின் எண்ணிக்கை அதிகமாக ஆக, தினமும் அங்க போய் ஷூட் பண்ணிட்டு வர்றது பத்தி யோசிக்கத் தொடங்கின சேனல்கள். ஆர்ட்டிஸ்டுகளின் போக்குவரத்துச் செலவுதான் காரணம். பார்த்தாங்க, சென்னையில் சினிமாக்காரர்கள் அதிகமா வசிக்கிற வடபழனிக்கும் போரூருக்கும் இடையில் இருக்கிற வளசரவாக்கம் பகுதியில் வாடகைக்கு வீடுகளைப் பிடிச்சு ஷூட் பண்ணத் தொடங்கினாங்க.

வளசரவாக்கத்தைச் சுத்தி 'ரெட்டியார் ஹவுஸ்', 'கோகுலம் ஹவுஸ்', 'ஒயிட் ஹவுஸ்'னு இன்னைக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட ஷூட்டிங் வீடுகள் இருக்கு. மாசத்துல 15 நாளோ அல்லது சில வீடுகள் மாசம் முழுக்கவோ கூட பிசியா இருக்கும்'' என சென்னை வளசரவாக்கம் பிசியான சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் ஆன கதையை அப்படியே விவரித்தார்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் காதல் வளர்த்து, வாழ்க்கையில் இணைந்த ராஜ்கமல் - லதாராவ் தம்பதியிடம் பேசினேன். ''ஷூட்டிங் ஆரம்பிக்கிறப்ப ஹீரோ ஹீரோவும் தனித்தனி ஆள்தான். ஆனா என்ன நடக்குது?, பதினோரு மணி ஆனா ஹீரோ லெமன் டீ கேக்கறார். 'இவனுக்கு லெமன் டீ'தான் பிடிக்கும்னு ஹீரோயினுக்குத் தெரியவருது. அந்தப்பக்கம், ஹீரோயினை பக்கத்துல இருந்தே கவனிக்கறப்ப, அவங்களுக்குப் பிடிச்ச பிடிக்காத விஷயங்களை ஹீரோவால தெரிஞ்சுக்க முடியுது. பரஸ்பரம் இப்படி தெரிஞ்சுக்கிடுற போது ஒருத்தருக்கொருத்தர் நிறைய விஷயங்கள்ல ஒரே மாதிரி இருந்தாக் காதல் வரத்தானே செய்யும்? தனித்தனி ஆட்கள் ஓருயிர் ஈருடல் ஆகறது இப்படித்தான்.

இதுகூடக் கொஞ்சம் சாதாரணமாதுதான். இன்னொரு விஷயம் இருக்கு. அந்த வீட்டுக்குள் சமையலறை, படுக்கையறைனு எல்லா இடங்கள்லயும் கதைக்காக கணவன் மனைவியா வருஷக் கணக்குல வாழ்ந்துட்டு வர்றப்ப, ஹீரோ ஹீரோயின் ரெண்டு பேருமே திருமணமாகாதவங்களா இருந்தா, அவங்களுக்குள் அவங்களை அறியாமலேயே ஒரு ரியல் தன்மை உருவாகிடும். நிஜமான கணவன் மனைவி மாதிரியே ஃபீல் பண்ண ஆரம்பிச்சிடுறாங்க. நான் லதாராவைக் கரம் பிடிச்சது இப்படித்தான்'' என்கிற இவர்கள், தற்போது சொந்தமாக 'ராஜ்கமல் ஷூட்டிங் ஹவுஸ்' என ஒரு ஷூட்டிங் வீட்டை நிறுவியுள்ளனர்.

அதுகுறித்துக் கேட்டதும், 'கமல் சார் சொல்வாரே, அதேதான். சீரியல் மூலம் சம்பாதிக்கறதை சீரியலுக்கே போடலாம்னுதான்' என்கிறார், ராஜ்கமல்.

ராஜ்கமல் மட்டுமல்ல, நடிகை நீலிமாராணி உள்ளிட்ட வேறு சிலரும் கூட இன்று ஷூட்டிங் ஹவுஸ் பிசினஸில் இருக்கிறார்களாம்.

''சொந்தமாக வீட்டை வாங்கி ஷூட்டிங் ஹவுஸ் நடத்தறது ஒரு வகை. பெரிய வீடுகளை மாத வாடகைக்கு எடுத்து உள்வாடகைக்கு விடற மாதிரி ஷூட்டிங்கிற்கு வாடகைக்கு விடறது இன்னொரு ரகம். இந்த ரெண்டாவது வகை கொஞ்சம் ரிஸ்க். ஏன்னா ஷூட்டிங் நடந்தா வாடகை அன்னைக்கு சாயங்காலம் கையில் வந்திடும். ஒரு நாள் வாடகை 10000 ரூபாய்னு வச்சுக்கலாம். வீட்டை வாடகைக்கு விட்டவர், முப்பது நாள் ஷுட் நடந்தா மூணு லட்சம் வருமே'னு நினைச்சிக்கிடுறார். ஆனா எந்த ஷூட்டிங் ஹவுஸுமே மாதம் முப்பது நாளும் ஷூட்டிங் நடக்கறது இல்லை.

ஒரே வீட்டுல முப்பது நாளும் ஷூட் நடந்தா காட்சிகள்ல அந்த ஒரு வீடுதான் தொடர்ந்து வரும். அதை சேனல்கள் ஏன், சீரியல் பார்ப்பவங்களே ரசிக்க மாட்டாங்களே? மாசத்துக்கு ஒரு வாரம் முதல் பத்து நாள்கள் ஒரு ஷூட்டிங் ஹவுஸில் ஷூட்டிங் இருக்கும்'' என்கிறார் 'கயல்' சீரியலில் நடித்துக் கொண்டே, ஷூட்டிங் வீடுகளை வாடகைக்கு எடுத்து பிசினஸ் செய்து வரும் நடிகர் காமராஜ்.

சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் காமெடியான விஷயங்கள் கூட நடக்குமாம். 'ஒரே இடத்துல வெவ்வேறு சீரியல்களின் ஷுட்டிங் நடப்பதால், 'இந்த வீடுதானே அந்த சீரியல்லயும் வந்தது'ன்னு ரசிகர்கள் கண்டுபிடிச்சுடுவாங்க. பிறகென்ன, சோஷியல் மீடியா புண்ணியத்துல ஷேர் பண்ணிக் கலாய்ப்பாங்க' எனச் சிரிக்கிறார் நடிகர் சாய்சக்தி.

அடுத்த வாரம் பார்க்கலாம்.

- அய்யனார் ராஜன்.

படங்கள்: ராகேஷ்.