நாம நல்லா சுவாரசியமா ஒரு படம் பார்த்திட்டு இருக்கும்போது ஹீரோவுக்கோ, ஹிரோயினிக்கோ இல்ல முக்கியமான ஒரு கேரக்டருக்கோ மேரேஜ் ஏற்பாடெல்லாம் நடக்கும். கல்யாண மண்டபத்தைக் காட்டுவாங்க, சமையல் நடக்கும், மேளம் வாசிப்பாங்க. பன்னீர் தெளிக்கிறதுன்னு எல்லாம் சுவாரஸ்யமா நடந்துட்டு இருக்கும்..
அப்றம், வெற்றுடம்பு மாமா ’கெட்டிமேளம்.. கெட்டிமேளம்..’ னு சொல்லி தாலி கட்டப்போற நேரத்துல ’கல்யாணத்தை நிறுத்துங்க’ ன்னு ஹீரோ, ஹீரோயின் இல்லன்னா ஒரு முக்கியமான கேரக்டர் திடீர்னு முளைச்சி மணவரைய நோக்கி ஆவேசமா ஓடி வந்து எல்லாருக்கும் ’ஷாக்’ கொடுக்கும். அப்படி பாதில காலாவதியான கல்யாண காட்சிகள் வந்த படங்களைத் தொரிஞ்சுக்கலாம்.
1 . ’குமரிக்கோட்டம்’ னு எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா நடிச்ச படம். அந்த படத்துல எம்.ஜி.ஆரை சின்சியரா லவ் பண்ணிட்டிருந்த ஜெயலலிதாவுக்கு, அவர் தன்னை திடீர்னு கழட்டிவிட்டுட்டு போயிட்டாரோன்னு தனக்குத்தானே கற்பனை பண்ணிக்கிட்டு புத்தி பேதலிச்சுப் போயிடறாங்க. இந்த தகவல் தெரிஞ்ச எம்.ஜி.ஆர் தன் காதலிக்கா இந்த நிலமைனு கலங்கிப்போறாரு.
இன்னொரு பக்கம் ஜெயலலிதா அழகிலும், சொத்திலும் ஆசைப்பட்ட வில்லன் மனோகர் புத்தி பேதலிச்ச ஜெயாகிட்ட வந்து ’நான்தான் உன் காதலன் வா மேரேஜ் பண்ணிக்கலாம்’ னு கார்ல கடத்திட்டுப்போயி, ஒரு மலைவாழ் மக்கள் கோவில்ல தாலிகட்டறதுக்காக தாலியும், கழுத்துமா ஹீரோயின் ஜெயா கழுத்தை நோக்கிப்போக… அங்க ஓடிவந்த எம்.ஜி.ஆர் ’நிறுத்து’ னு தாலி பங்கஷனை அப்ரஃப்டா கட் பண்ணி ஸ்டாப் பண்ணிடுறார்.
மலைவாழ் மக்கள் தலைவர்கிட்ட ’நான்தான் ஜெயாவோட காதலன்’னு எம்.ஜி.ஆர் சொல்ல, மனோகரும் ’நான்தான் ஒரிஜினல்’னு சொல்ல, ஹீரோயின் மாதிரியே தலைவனும் குழம்பிப்போக, ’உண்மையான காதலன் யாருன்னு கண்டுபுடிக்க ரெண்டு பேரும் சண்டை போடுங்க யார் ஜெயிக்கிறிங்களோ அவரே அக்மார் காதலன்’றார். என்ன லாஜிக்கோ..? அப்றம் எம்.ஜி.ஆர். ஜெயிச்சி ஜெ கழுத்துல தாலி கட்டுறார்.
2 . கல்யாணத்தை நிறுத்துற அதிரடி சம்பவம் சிவாஜி நடிச்ச ’வசந்த மாளிகை’ படத்துலயும் சம்பவம் பண்ணியிருக்கு. பணக்கார ஜமீன் குடும்பத்துல பொறந்த சிவாஜிக்கு மார்னிங் டூ ஈவ்னிங் குடிக்கிறதுதான் டூட்டி. அப்படி குடிக்கிறவர் குடும்பத்துல வேலைக்காக வந்த ஏழை ஹீரோயின் வாணிஸ்ரீ, சிவாஜிய ’குடிக்காத..குடிக்காத’ன்னு அட்வைஸ் பண்றாங்க. அந்த பிரெண்ட்ஷிப் கொஞ்சம் கொஞ்சமா லவ்வா மாறுது.
இவங்க ரெண்டு பேரோட லவ்வு புடிக்காத சிவாஜி ஃபேமலி ஹீரோயின் மேல திருடின்னு ’அக்யூஸ்ட்’ பட்டம் கொடுத்து வெளிய அனுப்பிடறாங்க. அதை குடிகார ஹீரோ சிவாஜியும் நம்பிடுறார். அதனால, அவங்க காதல்ல விரல்கடை அளவுக்கு விரிசல் விழுது. அப்போதான் வாணிஸ்ரீக்கு வேற இடத்துல மேரேஜ் பிக்ஸ் ஆகுது. குடிக்கிறதை நிறுத்தின நடிகர் திலகம் காதல் பிரிவுல துடிச்சி, கண்ணீரை கையில அள்ளுற அளவுக்கு அழுறாரு.
கடைசியா கல்யாணமாகப்போகிற வாணிஸ்ரீயை மணக்கோலத்துல பார்த்துடணும்னு மண்டபத்துக்கே போறாரு. பின்னாடி கேட் பக்கம் ரெண்டு பேரும் காதல் பீஃலிங்குல உருக, இந்த காதல் பிரிவு உபச்சார விழா சம்பவத்தைப் மாப்பிள்ளையோட அம்மா பார்க்க, மேரேஜுக்கு வந்தவங்க சாப்புடாங்களா இல்லையா..?ன்னு கொஞ்சம் கூட கவலைப்படாம ’நிறுத்து கல்யாணத்த’ன்னு வாணிஸ்ரீ வாழ்க்கை சக்கரத்துல குறுக்க கட்டையப்போட்டுர்றாங்க.
3 . ’கங்கா கெளரி’னு ஒரு படம். கங்காங்கிற மந்தராவை ஹீரோ அருண் விஜய் கண்ணும் கருத்துமா காதலிக்கிறாரு. அந்தப் பொண்ணு ஏழைனா அப்பா ஏத்துக்கமாட்டாருன்னு கோடீஸ்வரின்னு பொய்ய புல்டோசர்ல அள்ளிக்கொட்டுறாரு. அப்போ அந்த வீட்டுக்கு அனாதைனு சொல்லிக்கிட்டு கெளரிங்கிற சங்கீதா வீட்டுக்கு வந்து சேர்றாங்க.. அவங்க அருண் மேல அன்பை அள்ளித் தெளிச்சு, பாசத்தை பந்தி வைக்கிறாங்க. . இறுதியில அருணுக்கும், கங்காவுக்கும் மேரேஜ் பிக்ஸாகி எல்லாம் ஏற்பாடாகுது.
மந்தரா மாலை போட்ட கழுத்தோட மணவரையில காத்திருக்கு, அப்பதான் சங்கீதாவோட தாய்மாமன் மலையிலேர்ந்து இறங்கி அந்த வீட்டுக்கு வந்து சேர, சங்கீதாவும், மாமாவும் சங்கீதாவோட ஜாதக தோஷம் கழிக்க, முகம் மூடியிருந்த சங்கீதா கழுத்துல மலையில வெச்சி அருண் தாலி கட்டுன பழைய மேட்டரைப் பேசுறாங்க. அதை டெப்டுல அருண் அப்பாவும், ரைட்டுல கங்காவும் ஒட்டு கேட்,. அப்றம்.. ஆவேசமான அப்பா ’ஸாரி மேரேஜை நிறுத்திடலாம்’னு சொல்ல, சொன்ன மாதிரி மேரேஜும் நின்னுடுது, இறுதியில தோஷம் நீங்க தாலி கட்டிகிட்ட சங்கீதாவே மனைவின்னு அப்பா ஜட்ஜ்மெண்ட் எழுதுறாரு.
4 . மேரேஜ் ஹால். மணவறையில மீனா கழுத்துல தாலிகட்ட மாப்பிள்ளை கைல தாலியோட காத்திருக்கார். ஒரு பக்கம் மேளக்காரங்க வாசிக்கிறாங்க. ’கெட்டிமேளம்..கெட்டிமேளம்’னு சொன்னதும் எல்லாரும் அர்ச்சனை போட கையில பூவோட காத்திருக்க, மீனா கழுத்துல தாலி கட்டப்போன மாப்பிள்ளை திடீர்னு தாலி கட்டாம பேக்கடிச்சு எழுந்துடறாரு. ஆசி பண்ண வந்தவங்க ஷாக்காகி, மீனிங்க் புரியாம மண்டைய சொரிய…
அப்பதான் மாப்பிள்ளை பையன் ஏழு வருஷமா மீனாவை ஒன் சைடா காதலிச்சதாவும், ஒரு நாள் காதலை சொல்லப்போக, மீனா அவர் காதலை கால் செருப்பாகூட மதிக்கலைங்கிற கடுப்பு இருந்ததாவும், அதுக்கு பழி வாங்கத்தான் மறுபடியும் லவ் இருக்கிற மாதிரி டிராமா பண்ணி, மணமேடை வரைக்கும் மாப்பிள்ளையா வந்ததே மீனாவ மானபங்கம் படுத்தத்தான்’ னு சொல்லி, தாலிய மீனா மூஞ்சில விட்டெறிய, மீனா மாலைய கழட்டி மாப்பிள்ளை மூஞ்சில விட்டெறிய, கல்யாணம் கலாட்டாவுல முடிஞ்சிரும்.
5. ’தான் ஆசைப்பட்ட வாழ்க்கை அமையலன்னா, அமையற வாழ்க்கைய ஆசைப்பட்டு ஏத்துக்கணும்’ னு நம்ம தலைவர் வடிவேல் சொன்ன மாதிரி அவர் வழியில விஜய் நடிச்ச படம்தான் ’யூத்’. தான் காதலிச்ச ஹீரோயின் சாஹின்கான் தன் காதலை ஏத்துக்கிட்டு, எவரஸ்ட்டுல ஏத்திவிடப் போறாங்கன்னு நெனைச்சுகிட்டு இருக்கிறப்போ.. ’ஸாரி.. விஜய் என் சாய்ஸ் நீங்க இல்ல இவர்தான்னு யுகேந்திரனைக் கை காட்டுறாங்க. வெத்தலை போட்டுத் துப்புறதுக்குள்ள வாழ்க்கை மாறிப்போனாலும் மனச தேத்திக்கிறாரு இளைய தளபதி. படம் முடிகிற பத்து நிமிஷத்துக்கு முன்னாடி யுகேந்திரனுக்கும், ஹீரோயினுக்கு டும்..டும்.. டும்னு மேளம் கொட்டுற நேரம் பார்த்து, ஹீரோயின் மண்டபத்தை விட்டு ’எஸ்கேப்’பாகி விஜயைத் தேடி வந்து காதலை சொல்றாங்க.
ஏற்கனவே யுகேந்திரன் பிராடு, பொருக்கி, கேர்ள்ஸை ஏமாத்துற அக்யூஸ்ட்டுன்னு விஜய்க்கு தெரிஞ்சிருந்தும் காதலிக்காக அமைதியாகிடுறார்.. இப்போ.. ஹீரோயினியைக் கூட்டிகிட்டு நேர மண்டபத்துக்கு வந்து மேரேஜை நிறுத்தி, மணவறையில இருந்த மாப்பிள்ளைய கூட்டுப்போயி, தனியறையில வெச்சி அடி வெளுத்து வாங்குறார். யுகேந்திரன் விட்டாப்போதும்னு ஓட, விஜய் தன் காதலிக்கு தாலி கட்டுறார்.