ரமணியம்மாள்
ரமணியம்மாள் ரமணியம்மாள்
சினிமா

ரமணியம்மாள் : விகடன் தலையீட்டால் நிலம் கிடைச்சது! - சிறிய இடைவேளைக்குப் பிறகு | Epi 7

டைம்பாஸ் அட்மின்

விகடன் தலையிட்ட பிறகே என் பேருல நிலத்தைப் பத்திரப் பதிவு செய்தார்கள்! ரமணியம்மாள் நினைவலைகள்

வாழ்க்கையின் பாதிக்காலம் வரை சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் ஐந்தாறு வீடுகளில் பத்துப் பாத்திரம் தேய்த்து வந்த ரமணியம்மாள் கடந்த வாரம் ராக் ஸ்டார் ரமணியம்மாளாக தனது 69 வது வயதில் சின்னத்திரை பெரியதிரை நடிகர் நடிகைகள் பலர் அஞ்சலி செலுத்த இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்.

‘வீட்டு வேலை செஞ்சிட்டிருந்த என்னை பேமஸாக்கி விட்ட அந்த டிவியை எப்படி எப்பவும் மறக்க மாட்டேனோ, அதே போலத்தான் விகடன் பத்திரிகையையும் என்னால மறக்க முடியாதுய்யா’ என முன்பு பேட்டியில் சொல்லியிருந்தார்.

விகடனை ஏன் மறக்க முடியாதென்கிறார் என்பதைப் பார்ப்பதற்கு முன் ரமணியம்மாள் எப்படி ‘ராக் ஸ்டார்’ ஆனார் எனத் தெரிந்து கொள்ளலாமா?

வீட்டு வேலை செய்து கொண்டிருக்கும் சமயங்களில் அலுப்பு தெரியாமல் இருக்க பழைய எம்.ஜி.ஆர். சிவாஜி படப் பாடல்களைப் பாடுவது ரமணியம்மாளின் வழக்கம். மீடியாவில் பெரிய பொறுப்பில் இருக்கும் ஒருவருடைய வீட்டில் அப்படி ரமணியம்மாள் பாடிய போது அந்த மீடியா மனிதர் கேட்டு விட, ‘இப்பெல்லாம் டிவிக்கு டிவி பாட்டு நிகழ்ச்சி நடத்துறாங்களே, அதுல கலந்துகிட்டுப் பாடலாம்ல’ எனக் கேட்டிருக்கிறார். ‘நானெல்லாம் அதுல போய் எப்படிங்க சார் பாட முடியும்’ என அப்பாவியாகக் கேட்டாராம் ரமணியம்மாள். ‘ஏன் முடியாது’ நானே சேர்த்து விடுறேன்’ என அந்த நல்ல மனிதரே ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான ‘சரிகமப’ நிகழ்ச்சிக்கு பாதை காட்டினார்.

’2018ம் ஆண்டு சரிகமப சீனியர்ஸ்’ நிகழ்ச்சியில் ரமணியம்மாள் எடுத்து விட்ட எம்.ஜி.ஆர் படப் பாடல்கள் அவரை  ரன்னர் அப் வரை கொண்டு வந்து நிறுத்தியது. கூடவே ’ராக் ஸ்டார்’ என்ற பட்டமும் கிடைக்க, நிகழ்ச்சியிலிருந்து வெளியில் வந்த போதே வெளிநாட்டில் பாடும் வாய்ப்புகளும் கிடைத்தன. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளுக்குப் பாடுவதற்காகவே போய் வந்தார்.

இன்னொருபுறம் சினிமா வாய்ப்புகளும் வரத் தொடங்கின. சில படங்கள் சில சீரியல்கள் என தலைகாட்டினார். அதேநேரம் மாம்பலம் பகுதியில் பார்த்து வந்த வீட்டு வேலைகளையும் விட மனதில்லை. சில வீடுகளில் பழைய அதே வேலையைத் தொடர்ந்தார்.

அப்போது ஒருமுறை பேசியபோது, ‘இந்தப் புகழ்ல்லாம் இன்னைக்கு வந்தது தம்பி. என் புள்ளகளையெல்லாம் வளர்த்து ஆளாக்கி கட்டிக் கொடுக்க எனக்கு உதவியது அந்த வேலைதானய்யா. அந்த வேலையை நான் குறைவா நினைக்கலாமா? உடம்புல தெம்பு இருக்கிறவரைக்கும் செஞ்சிட்டே இருக்கணும்னு ஆசைப்படுறேன். ஆனா டிவியில போய் பாடிட்டு வந்த பிறகு சில வீடுகள்ல வேலைக்கு வரவேண்டாம்னு சொல்லிட்டாங்க. நானே எந்த சங்கடமும் படாம வேலை பார்க்கத் தயாரா இருக்கிற சூழல்ல அவங்க தயங்குறாங்க. அவங்களையும் குத்தம் சொல்ல முடியலை. அதனால இப்படியே போச்சுன்னா, கச்சேரிகள்ல நாலு எம்.ஜி.ஆர் பாட்டுகளைப் பாடிப் பொழைக்க வேண்டி வந்திடுமோனு நினைக்கிறேன்.’’ என்றார்.

’சரிகமப’ நிகழ்ச்சிக்குப் பிறகு பல இசைக் கச்சேரிக் குழுக்கள் ரமணியம்மாளை தங்கள் கச்சேரிகளுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சினிமா, பக்திப் பாடல்கள் சிலவற்றைப் பாடி வந்தா ரமணியம்மாள். கடந்த மாதம் யோகி பாபு ஹீரோவாக நடிக்க, பா.ரஞ்சித் தயாரித்திருக்கும் அறிமுக இயக்குனர் ஷான் இயக்கிய ‘பொம்மை நாயகி’ படத்திலும் இடம்பிடித்திருந்தார். அந்தப் பட விழாவில் பேசியதுதான் ரமணியம்மாள் கலந்து கொண்ட கடைசிப் பொது நிகழ்ச்சி.

ரமணியம்மாளுக்கு அஞ்சலி செலுத்திய பாடகர் ஸ்ரீநிவாஸ், தொகுப்பாளர் அர்ச்சனா உள்ளிட்டோர், ரியாலிட்டி ஷோ ஷூட்டிங் ஸ்பாட்டில் ரமணீயம்மாள்  பழகிய விதத்தை நினைவு கூர்ந்து நெகிழ்ந்தார்கள்.

சரி, தூக்கத்திலேயே உயிர் பிரிந்த ரமணியம்மாள் விகடனை ஏன் மறக்க முடியாது எனச் சொன்னார் தெரியுமா?

’நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாவது பரிசை வென்றதும், அந்த நிகழ்ச்சியை ஸ்பான்சர் செய்த நிறுவனம் ஒன்று ரமணியம்மாளு க்கு ஐந்து லட்சம் மதிப்பில் நிலம் வழங்குவதாக அறிவித்தது. ஆனால் சொன்னபடி நடந்து கொள்ளவில்லை அந்த நிறுவனம். நிகழ்ச்சி முடிந்து ஓராண்டு கடந்தும் நிலம் ரமணியம்மாள் கைக்கு வரவில்லை. விகடன் தளத்தில் இந்தத் தகவல் எக்ஸ்க்ளூசிவாக வெளியாக, பதறியடித்துக் கொண்டு அந்த ஸ்பான்சர் நிறுவனத்தைத் தொடர்பு கொண்ட ஜீ தமிழ் சேனல் மறு வாரமே ரமணியம்மாள் பெயரில் நிலத்தைப் பத்திரப் பதிவு செய்து தர வைத்தது.

நிலம் கைக்கு வந்த பிறகு விகடனுக்கு நன்றி சொன்ன ரமணியம்மாள், ‘அந்த டிவி இல்லைன்னா, என்னை வெளியுலகத்துக்குத் தெரியாமலே போயிருக்கும். அதனால அந்த டிவியை நான் வாழ்நாள் முழுக்க மறக்கவே மாட்டேன். அதே போலத்தான் முதன் முதலா என் பேருல ஒரு நிலம் கிடைக்கப் போகுதுனு சந்தோஷமா இருந்தேன். ஆனா, ‘பாட்டி உங்க கிட்ட அந்த ரெக்கார்டு இல்ல, இந்த ரெக்கார்டு இல்ல’ன்னு ஏதேதோ சொல்லிகிட்டுத் தராமலே இருந்தாங்க. விகடனில் செய்தி வரலைன்னா அந்த இடம் எனக்குக் கிடைக்காமலே போயிருந்திருக்கலாம்.. அதனால விகடனையும் நான் மறக்கவே மாட்டேன்’ எனச் சொன்னார்.

அடுத்த வாரம் பார்க்கலாம்.

- அய்யனார் ராஜன்.