Bhopal timepass
Satire

'ஒரே இரவில் 8 ஆயிரம் பேர் பலியான துயரம்' - பழைய பேப்பர் கடை | Epi 12

மனித குலத்தின் உச்சபட்ச அலட்சியத்தால் போபாலுக்கு நிரந்தரமான கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்த சம்பவம் அது! அதைப் பற்றி கொஞ்சம் ஃப்ளாஷ்பேக்கில் சென்று பார்ப்போமா?

Saran R

டிசம்பர் 3-ஐ உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? ஆம். நம் இந்தியாவில் விஷவாயு என்னும் கொடூர அரக்கனின் கரங்களில் சிக்கி ஆயிரக்கணக்கான மக்கள் மண்ணோடு மண்ணாக ஆன நாள்...1984 இதே நாளில் போபால் விஷவாயுக் கசிவு சம்பவம் வரலாற்றின் கறை படிந்த கருப்பு அத்தியாயம் 

மனித குலத்தின் உச்சபட்ச அலட்சியத்தால் போபாலுக்கு நிரந்தரமான கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்த சம்பவம் அது! அதைப் பற்றி கொஞ்சம் ஃப்ளாஷ்பேக்கில் சென்று பார்ப்போமா ?

போபால் நகரின் மத்தியில்  யூனியன் கார்பைடு என்ற பூச்சிக் கொல்லி தயாரிப்பு நிறுவனம் இருந்தது. போதுமான கட்டமைப்புகள், தொழில்நுட்பங்கள் இல்லாமல் வடிவமைக்கப்பட்ட மோசமான உற்பத்தி ஆலை அது. முதன்முதலில் 1978-ல் அலாரம் அடித்தது போல தொழிற்சாலையில் சின்னதாக தீப்பிடித்து இந்த விஷயத்தை எச்சரிக்கை செய்தது.

அப்போதே சுதாரித்திருக்கலாம். விஷ வாயு ஒரு லேயராய் போபால் எங்கும் பரவியதை ஒருவித துர்நாற்றம் காட்டிக் கொடுத்தது. நிலைமையின் விபரீதத்தை ராஜ்குமார் கேஸ்வானி என்ற பத்திரிகையாளர் மட்டும் உணர்ந்திருந்தார். அவர்தான் முதன்முதலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தைப் பற்றி 'ஜன்சட்டா' என்ற உள்ளூர் பத்திரிகையில் கவர் ஸ்டோரியாய் அதை எழுதியிருந்தார். உள்ளே போய் துப்பறிந்து படங்களுடன் ஆதாரபூர்வமாக எழுத நினைத்தவரை காவல்துறையை ஏவிவிட்டு அடக்கின பண முதலைகள்.

மீண்டும் 1981 டிசம்பர் மாதம் 23-ம் தேதி... அந்த ஆலையில் ஒரு இடத்தில் லேசாக விஷவாயு கசிந்தது. அது எந்த அளவுக்கு மோசமான வாயு என்பதற்கு சாட்சியாக ஒருவர் பலியாகி இருந்தார்.   யூனியன் கார்பைடு கம்பெனியின் நிர்வாகத் தலைவர் வாரன் ஊமர் இது பணியாளரின் அஜாக்கிரதையால் ஏற்பட்ட சிறுவிபத்து என்று கூறி பணத்தை பாதிக்கப்பட்ட தொழிலாளியின் குடும்பத்துக்கு கொடுத்து சரி கட்டினார்.

அதோடு சுதாரித்திருக்க வேண்டிய அரசு கரன்சிகளால் விஷயத்தை மூடி மறைத்து விட்டது. மீண்டும் 1982 பிப்ரவரி 10-ம் தேதி ஆலையில் விபத்து ஏற்பட்டு விஷவாயு கசிந்து 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். இம்முறை இது எந்திரக் கோளாறு என நிர்வாகம் சப்பைக்கட்டு கட்டியது. எல்லா தொழிற்சாலைகளும் வெளியிடும் அளவை விட குறைவாகவே நச்சுப்புகையை exhaust வழியாக விடுகிறது என்றும், கசிந்த வாயுவில் அனுமதிக்கப்பட்ட அளவில்தான் நச்சுத்தன்மை இருக்கிறது என்றும் போலியான ரிப்போர்ட்டை அரசிடம் சமர்ப்பித்தது. 

இம்முறையும் அரசு கள்ள மௌனம் காத்தது. ஆனால், பத்திரிகையாளர் ராஜ்குமார் கேஸ்வானி கொதித்தெழுந்தார். 

"போபால் மக்களின் உடலில் கட்டப்பட்ட டைம் பாம் போன்றது இந்த யூனியன் கார்பைடு நிறுவனம். எந்நேரம் வேண்டுமானாலும் வெடிக்கலாம்!"என்று எச்சரித்து எழுதியிருந்தார். 

தொழிற்சங்கங்களும் இவருடைய குரலை பிரதிபலித்தன. மக்களிடையே வீதி நாடகம், துண்டுப் பிரசுரம் என்று மக்களிடம் கொண்டு சேர்த்தனர். ஆலையை மூடச் சொல்லி தன்னியல்பாக போராட்டங்கள் வெடித்தன. அப்போது ஆளுங்கட்சியாக இருந்த அர்ஜுன்சிங் அரசாங்கம், 'இதெல்லாம் தேவையற்ற பயம்' என்று சொன்னது. மத்திய அரசு இந்நிறுவனத்தை கண்காணிக்க அதிகாரிகளை நியமித்தது. உண்ணாவிரதங்கள் கோஷங்கள் என்று தொழிற்சங்கங்கள் முனைப்புக் காட்டியதை பொறுத்துக் கொள்ளாத நிறுவனம், அனைத்துத் தொழிற்சங்கங்களையும் தடை செய்தது.

எதிர்த்து பேசிய வாய்கள் எல்லாம் பணத்தால் அடித்து மூடப்பட்டன. இந்த பணமுதலைகளுக்கு முன்னால் தாக்குப் பிடிக்க முடியாமல் தொழிலாளர்கள் அடங்கிப் போனார்கள். ராஜ்குமார் கேஸ்வானி இந்தத் தொழிற்சாலையால் வரக்கூடிய ஆபத்துகளைப் பற்றி டாக்டரேட் பண்ணும் அளவுக்கு பத்திரிகைகளில் விரிவாக எழுதினார். ஆனால் அனைத்தும் விழலுக்கு இரைத்த நீராகிப் போனது.

"நிர்வாகம் சீர்திருத்தப்படும். புதிதாக எந்திரங்கள் வாங்கப் போகிறோம்" என்றெல்லாம் சொன்னார்களே தவிர பெரிதாய் ஒரு சிறு துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை. 

"கார்பைடு தொழிற்சாலை வெளியிடும் மெத்தைல் ஐஸோ சயனேட்(MIC) அத்தனை கெடுதியானதல்ல. அது பற்றி போபால் மக்கள் கவலைப்படத் தேவையே இல்லை. அது தயாரிக்கும் வாயு.. விஷவாயுவே அல்ல." என்று மனசாட்சி துளியும் இல்லாமல் பேசினார்கள்.

பத்திரிகையாளர் கேஸ்வானி இந்தூருக்கு தன்குடும்பத்தை அழைத்துக் கொண்டு கண்ணீரோடு கிளம்பிப் போனார். அவர் போன சில நாட்களில் அந்த சம்பவம் நடந்தது. அன்று மட்டுமே 3800 பேர் பலியாகினர். பின்னர் எண்ணிக்கை 8 ஆயிரமாக உயர்ந்தது. 

6 லட்சம் பேர் வரை உடல்நலம் பாதிக்கப்பட்டனர். கம்பெனி சேர்மன் வாரன் ஆன்டர்சனை  இந்தியாவுக்கு வரவழைத்துக் கைது செய்தார்கள். "கூப்பிடும் போதெல்லாம் இந்தியா வருகிறேன்" என்றவரை அதற்குமேல் இந்தியாவில் பார்க்க முடியவில்லை. 2014 அமெரிக்காவில் இறந்தார். இன்றுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித்தொகை முழுமையாகக் கிடைக்கவில்லை என்பதுதான் மிகப்பெரிய வரலாற்றுத் துயரம்! 

(தூசு தட்டுவோம்..!)