உலகமே ஆர்வமாக எதிர்பார்த்த உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி இந்த ஆண்டு கத்தாரில் நடைபெற்று வருகிறது. உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியை நடத்தும் முதல் வளைகுடா நாடு என்ற அந்தஸ்த்தையும் பெற்றிருக்கிறது. கட்டுக்கோப்பான வளைகுடா நாடு எப்படி உலகின் 32 நாடுகளின் ரசிகர்களை தன்னகத்தே தாங்கிக் கொள்ளப் போகிறது. இதற்கு அந்நாட்டின் சட்டதிட்டங்கள் ஒத்துழைக்குமா? 'கத்தார் எங்கே இருக்கு?' என உலக வரைபடத்தில் முதல்முறை தேடுபவர் நீங்கள் என்றால் இந்தக் கட்டுரை உங்களுக்குத்தான்.
2010-ல் தான் முதன்முதலில் இந்த உலகக் கோப்பை போட்டியை நடத்த சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் அனுமதியை வாங்கியபோது, கத்தார் என்ற இந்த குட்டி நாடு செலவிடத் தயாராக இருந்த தொகை எவ்வளவு தெரியுமா? 10 லட்சம் கோடி. அப்போது இந்தச் செய்தியை சவூதியும் அமீரகமும் கிண்டலடித்தன.
நிச்சயம் முடிவில் பின்வாங்கும் என்று ஆரூடம் சொன்னார்கள். காரணம் அந்தத் தொகை பெரிது. 'கட்டமைப்புக்கான வசதிகள் இல்லை' என்றார்கள் சவுதீயும் அமீரகமும். ஆனால், இந்த 12 ஆண்டுகால தவத்துக்குப் பிறகு அந்தத் தொகை இரட்டிப்பாகி இருக்கிறது. ஆம். மொத்தம் 20 லட்சம் கோடியை தற்போதைய உலகக் கோப்பையை நடத்த செலவு செய்திருக்கிறது கத்தார்.
கத்தார்...உலகின் பணக்கார நாடுகளில் ஒன்று. சர்ச்சைகளுக்கும் சாதனைகளுக்கும் பஞ்சமில்லாத மேற்காசிய வளைகுடா நாடு..!
இந்தியாவின் 28 மாநிலங்களில் 27-வது இடத்தில் இருக்கும் திரிபுராவைவிட கொஞ்சமே கொஞ்சம் பெரியது தான் இந்நாடு! கிட்டத்தட்ட 11 ஆயிரத்து 586 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நாடு இது! மக்கள் தொகையில் நம் மணிப்பூர் மாநில அளவுக்கானதுதான்.
அரபியை பேசுமொழியாகக் கொண்ட இந்த நாட்டில் 40 சதவீதத்தினர் தான் அரேபியர்கள். கிட்டத்தட்ட 36 சதவீதம் பேர் தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள். அதிலும் 21 சதவீதம் பேர் இந்தியர்கள். இஸ்லாமியக் கோட்பாடுகளைக் கடைபிடிக்கும் நாடுதான் என்றாலும் அருகிலுள்ள சவுதி அரேபியா போல கடுமையான சட்டதிட்டங்கள் இல்லாத ஊர். செப்டம்பர் 3, 1971-ல் தான் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திலிருந்து முழுமையாக விடுதலை பெற்றது.
நம் இந்தியாவைப்போலவே அந்த நாட்டையும் ஒருகாலத்தில் பிரிட்டிஷார் தான் ஆண்டு வந்தார்கள். நிர்வாக வசதிக்காக 1868-ல் முகமது அல்தானி என்பவரை ஆட்சி செய்ய அனுமதித்தது. அதன் பிறகு கத்தார் அரசின் நிறுவனராக கொண்டாடப்படுபவர் ஷேக் ஜஸீம் முகமது அல்தானி திறம்பட நாட்டை வழிநடத்தினார். 1971-ல் பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் கிடைத்தாலும் நிறைய சட்டதிட்டங்களுடன் மன்னராட்சியைத் தொடர்ந்தே வருகிறது. இந்நாட்டுக்கும் நமக்குமான உறவும் அலாதியானது. அங்கு உயர் பதவிகளில் இருக்கும் நான்கு பேரில் ஒருவர் இந்தியர்!
சொல்லப்போனால் கத்தாரின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்த இந்தியர்களின் பங்கும் அதிகம். ஆம். 1950-60களில் வறுமையால் பட்டினிச்சாவுகள் நிகழ்ந்த நாடு என்றால் நம்ப முடிகிறதா..? இன்று உலகின் நம்பர்1 பணக்கார நாடாக கொண்டாட்டப்படும் கத்தார் அந்நாளில் வாழ லாயக்கற்ற பாலைவன பூமியாகவே இருந்தது. தங்கள் நாட்டில் எண்ணெய்வளம் இருப்பதை அவர்கள் உணர்ந்த பிறகே வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணப்பட ஆரம்பித்தனர்.
இன்று உலகின் எண்ணெய் உற்பத்தியில் முதல் பத்து இடங்களுக்குள் கத்தாரும் இருக்கிறது. ஒரு நாளைக்கு 15 லட்சத்து 20 ஆயிரம் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. சவூதி அரேபியாவின் உள்நாட்டு உற்பத்தி மற்றும் தனிநபர் பொருள் வாங்கும் திறன் 51924 டாலர் என்றால் கத்தாரின் திறன் 140649 டாலர்...அதாவது மூன்று மடங்கு அதிகம்.
உலகின் முன்னணி செய்தி நிறுவனமான 'அல்ஜஸீரா' கத்தாரில் தான் இயங்குகிறது. இந்நாட்டின் தலைநகரான தோஹா உலகின் முன்னணி நிறுவனங்களின் வளைகுடா பிரிவின் தலைநகரம் போலவே செயல்படுகிறது. இதன் பெரும்பலத்தால் தங்கள் மீதுள்ள இஸ்லாமிய தீவிரவாத ஆதரவு நாடு என்ற பிம்பத்தை துடைத்துக் கொண்டு இருக்கிறது.
ISIS போன்ற பழமைவாத இயக்கத்தை ஆதரித்ததன் மூலம் சவூதி அரேபியாவின் எரிச்சலை சம்பாதித்தது. ஒருபக்கம் எண்ணெய் வளம், இன்னொரு பக்கம் உலக மயமாக்கலின் சாட்சியமாக விளங்குவது என இதன் அபரிமிதமான பொருளாதார வளர்ச்சியே இப்போது பிரச்னைக்கு உள்ளாகியுள்ளது.
அதனால் தற்போது நடைபெறும் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்தே வளைகுடா நாடுகள் விஷத்தைக் கக்குகின்றன. 34 நாடுகள் கலந்து கொள்ளும் இவ்வளவு பெரிய போட்டிகளை நடத்த நாட்டின் உள்கட்டமைப்பையே மாற்ற வேண்டியிருந்தது. அதனால் கோடான கோடிகளை வாரி இறைத்து தன்வசமிருந்த பழைய மைதானங்களை எல்லாம் பத்தாண்டுகளாக விரிவுபடுத்தி பிரம்மாண்டமாக கட்டமைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அதிநவீன விமான நிலையங்கள், தங்கும் விடுதிகளை எல்லாம் அபரிமிதமான வசதிகளுடன் உருவாக்கி பத்தே ஆண்டுகளில் கால்பந்து நடத்த மற்ற நாடுகளைவிட முன்னணி நாடு கத்தார் தான் என உலகுக்கு பறைசாற்றி உள்ளது.
பத்து ஆண்டுகளில் மட்டும் 6500 கட்டுமானத் தொழிலாளர்கள் இறந்து போயிருப்பதாக இப்போது சர்ச்சை கிளம்பியிருக்கிறது. இதுபற்றி 'தி கார்டியன்' இதழில் புலனாய்வு கட்டுரை ஒன்று வெளியாகி சர்வதேச கவனத்தைப் பெற்றிருக்கிறது. இறந்தவர்கள் அனைவரும் புலம்பெயர் தொழிலாளர்கள் என்றும் அதில் புள்ளி விபரங்களோடு கூறப்பட்டிருக்கிறது. அதில் 2700 பேர் இந்தியர்கள்.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் எல்லாவற்றையும் அந்நாட்டின் தூதரகம் மறுத்திருக்கிறது. இவை அனைத்தும் பத்தாண்டுகளில் நிகழ்ந்த இயற்கை மரணங்கள் என்று அறிக்கை சமர்ப்பித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகமும், சவுதி அரேபியாவும் இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் இருப்பதாக கத்தார் உறுதியாக நம்புகிறது. இதனால் சமீபத்தில் எண்ணெய் வள நாடுகளின் கூட்டமைப்பான OPEC-ல் இருந்து வெளியேறுவதாகத் தன்னிச்சையாக அறிவித்திருக்கிறது.
அதோடு எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ஃபார்முலாவை ஃபாலோ செய்யும் கத்தார், மிகப்பெரிய அமெரிக்க ராணுவ தளத்தை தன் நாட்டில் அமைக்க அனுமதித்துள்ளது. இந்த மூவ், சவூதியும் அமீரகமும் எதிர்பாராதது.
''உலகின் டாப் 10 பணக்கார நாடுகளில் தற்போது நம்பர் 1 பணக்கார நாடு அந்தஸ்தைப் பெற்றிருக்கிறோம். இங்குதான் உலகின் தனிநபர் வருமானம் அதிகம். இதைப் பார்த்து அருகில் இருக்கும் பலர் பொறாமையில் வெந்து சாகிறார்கள். அதற்காக பயந்து பின்வாங்க மாட்டோம். இந்த உலகக் கோப்பையை டிசம்பர் 18 வரை மிகச் சீரும் சிறப்புமாக நடத்திக் காட்டுவோம்!'' என்று சொல்லியிருக்கிறார் கத்தாரின் மன்னரான தமீம் பின் ஹமத்!
கத்தார் செம கெத்தார் தான்!