ரோவன் அட்கின்சன் (Rowan Atkinson) என்றால் உங்களில் எத்தனை பேருக்கு யார் என தெரியும்? ஆனால் Mr.Bean என்றால் அவரா என கண்டுபிடித்து விடலாம். பேச்சால் கட்டிப் போடும் பலரை நாம் பார்க்கலாம். ஆனால் பேசாமலே நம் மனதைக் கவரும் தன்மை கொண்டவர் அட்கின்சன். அவருடைய பிறந்த நாளான இன்று அவரைப் பற்றிய பத்து சுவாரஸ்யமான தகவல்களைப் பார்க்கலாம்.
1. கலைத் துறையில் ரோவன் அட்கின்சனுக்கு 'Rubber Face' என ஒரு பட்டப் பெயர் உள்ளது. அவர் நினைத்த நேரத்தில் நினைத்த பாவனையை முகத்தில் காட்டும் திறமை பெற்றதாலேயே இவ்வாறு அழைக்கப்படுகிறார்.
2. இங்கிலாந்தின் 'நியூகேசில்' பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் முடித்திருக்கிறார். பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
3. அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது நடைபெற்ற விழா ஒன்றில் சைகை மொழி மூலம் நிகழ்ச்சி ஒன்றை நிகழ்த்திக் காட்டினார். அதற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிகழ்வே Mr.Bean கதாபாத்திரத்தின் தொடக்கம் என கருதப்படுகிறது
4. கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு பல்வேறு தொலைக்காட்சிகளில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த அட்கின்சனுக்கு 'Black Adder' என்ற ஒரு காமெடி தொலைக் காட்சி தொடரில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த கதாபாத்திரம் இங்கிலாந்து முழுவதும் அவரது புகழைக் கொண்டு சென்றது.
5. நம்மையெல்லாம் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் Mr.Bean னுடைய முதல் எபிசோட் 1995 டிசம்பர் 15 ஆம் நாளில் I எனும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
6. Mr.Bean கதாபாத்திரத்திற்கு முதலில் Mr.White, Mr. Cauliflower என்றெல்லாம் பெயர் வைக்க பரிந்துரை செய்யப்பட்டதாம். கடைசியில் Mr. Bean என்ற பெயரே அனைத்து மொழி மக்களாளும் உச்சரிக்க எளிதாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டது.
7. Mr. Bean கதாபாத்திரம் பெரும்பாலும் பேசாது. அப்படியே அது பேசினாலும் 'B'-ஒலியை உச்சரிப்பதாகவே இருக்கும். அட்கின்சனுக்கு திக்குவாய்ப் பிரச்சினை இருந்தாலேயே Mr. Bean கதாபாத்திரம் இவ்வாறு வடிவமைக்கப் பட்டதாக் கூறுகிறார்கள்.
8. இவர் ஒரு முறை பேசும் போது, "நான் நடித்த கதாப்பாத்திரங்களில் நான் மிகவும் வெறுக்கக் கூடிய கதாபாத்திரம் Mr. Bean. ஏனெனில், அந்த கதாபாத்திரத்திற்கு எதிர் மாறாகவே நான் இருக்கிறேன். ஆனால் நான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும்போது மிகவும் சுதந்திரமாக உணர்வேன். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கண்டுகொள்ளாமல் விரும்புவதைச் செய்யும் சுதந்திரம் எனக்கு அப்போது தான் கிடைக்கும்" என்று கூறியுள்ளார்.
9. அட்கின்சனை ஒரு கார் காதலன் என்றே சொல்லலாம். தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'Top gear'-ல் கலந்து கொள்ளும் பிரபலங்களை கார் ஓட்ட வைத்து யார் முதலில் வருகிறார்கள் என பார்ப்பது வழக்கம். ஒருமுறை அட்கின்சன் டாம் குரூஸை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தைப் பிடித்தார்.
10. இவர் வருடம் வருடம் இறந்துவிட்டார் என ஒரு வதந்தி பரவிவிடுமாம். பின்னர் வெளியே தோன்றியதும் அந்த வதந்தி மறைந்து விடும். இப்படி அடிக்கடி இறந்து நம்மை சிரிக்க வைக்கிறார் இந்த ரோவன் அட்கின்சன்.
- மு.இசக்கிமுத்து.