Kannadasan - Vaali : தனது பாடல் வரியால் வாலியை உருவாக்கிய கண்ணதாசன்!

அந்தப் பாடலே என் எதிர்காலத்தை நிர்ணயித்தது. போராடுவதற்கு தெம்பையும், தெளிவையும் தோற்றுவித்தது. சோர்ந்து போன சுவாசப் பையில் பிராணவாயுவை நிரப்பி, எனக்கு உயிர்பிச்சைக் கொடுத்து என்னைப் புதுமனிதனாக்கியது
Kannadasan
Kannadasan timepass

மயக்கமா? கலக்கமா?: தனது பாடல் மூலமே தனக்கு போட்டியாளரை உருவாக்கிய கண்ணதாசன்

        என்னை விட பத்து வயது இளையவன் மகேந்திரன். என் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவன்(பொதுவாக என் மிக நெருங்கிய நண்பர்கள் பலரும் 10 முதல் 15 வயது வரை என்னை விட இளையவர்கள்). வட மாவட்டத்தைச் சேர்ந்த குக்கிராமத்திலிருந்து வந்து, இன்று பணி நிமித்தமாக சென்னைவாசி.

       சமீபத்தில் அவனுடன் நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் வழியாக டூவீலரில் சென்றபோது, “ஒரு நிமிஷம் வண்டிய நிறுத்துங்க…” என்றான். நின்றவுடன் வண்டியிலிருந்து இறங்கியவன் சில வினாடிகள் சாஸ்திரிபவன் வாசலையே பார்த்துக்கொண்டிருந்தான். மத்திய அரசு அலுவலக வளாகம் என்பதால், ஏராளமான மக்கள் உள்ளே செல்வதும், வருவதுமாக இருந்தனர்.

“என்னடா பாக்குற?” என்றேன்.

“இல்ல… பல வருஷத்துக்கு முன்னாடி, ஒரு மல்ட்டிலெவல் மாக்கெட்டிங் கம்பெனிக்காக இங்க வாசல்ல நின்னு, மக்களுக்கு நோட்டீஸ் கொடுக்குற வேலை பாத்துருக்கேன். அது ஞாபகம் வந்துச்சு” என்றான்.

“நீ பாக்காத வேலையே இல்லையாடா?”

“ஏழு வருஷம் நான் பாக்காத வேலையே இல்ல” என்றான்.

Kannadasan
'அதிசய ராகம்: ஒரு அபூர்வ காதலின் கீதம்' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 10

கடந்த 12 வருடங்களாக என்னுடன் நெருக்கமாக பழகிக்கொண்டிருக்கும் மகேந்திரன், பல்வேறு தருணங்களில் அவனுடைய ஏழ்மையான வாழ்க்கையைப் பற்றிச் சொன்னது நினைவுக்கு வந்தது.

       ஒரு முறை, அரசு  இலவசங்கள் வழங்குவது குறித்து அறிவுஜீவிகள் மற்றும் வசதியானவர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் மற்றும் விவாதங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தபோது அவன் என்னிடம் சொன்னான்.

“சார்… பெரிய அறிவாளின்னு சொல்லிக்கிற நிறைய பேரு இலவசம் தப்புன்னு சொல்றாங்க. நான் எங்க கிராமத்துலருந்து செய்யாறுக்கு பஸ்ல காலேஜ்க்குப் போகணும். அப்ப மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் கிடையாது. ஒரு நாள் போய்ட்டு வர்றதுக்கு அஞ்சு ரூபா வேணும். அந்த அஞ்சு ரூபா எங்க வீட்டுல இருக்காது. நான் காலேஜ்க்கு கிளம்பி வாசலுக்கு வந்து நின்ன பிறகுதான் அம்மா கடன் வாங்க ஓடும். தெருவுல ஒவ்வொரு வீடாப் போயி, “பையன் காலேஜ் போகணும். காசு வேணும்”ன்னு கடன் கேட்பாங்க. சில சமயம் ஒரே வீட்டுல கிடைக்காது. ரெண்டு மூணு வீட்டுல ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய்ன்னு வாங்கிட்டு வந்து கொடுப்பாங்க. சில சமயம் அவங்க பணம் வாங்கிட்டு வர்றதுக்குள்ள பஸ்சு போயிடும். சில சமயம் அந்த அஞ்சு ரூபாயும் கிடைக்காம போயிடுச்சுன்னா, அன்னைக்கி நான் காலேஜ்க்கே போகமாட்டேன்…” என்று கூறியவுடன் நான் அதிர்ந்தேன்.

ஒரு எளிய கிராமத்துத் தாய் வீடு வீடாகச் சென்று, “என் பையன் காலேஜ்க்கு போகணும். அஞ்சு ரூபாய் தாங்க…” என்று இரைஞ்சலுடன் கேட்கும் காட்சியும், தெருவில் கூச்ச உணர்வுடன் என் நண்பன் மகேந்திரன் நிற்கும் காட்சியும் மனத்திற்குள் ஓட… என் கண்கள் கலங்கிவிட்டன.

தொடர்ந்து மகேந்திரன், “அப்புறம் நான் தேர்ட் இயர் படிக்கிறப்பதான் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வந்துச்சு. அதுக்கு பிறகுதான் நான் நிம்மதியா காலேஜ்க்கு போக ஆரம்பிச்சேன்” என்றான்.

“இவ்ளோ கஷ்டப்பட்டுருக்கியாடா நீ?”

“இதெல்லாம் சும்மா சார். நான் காலேஜ் டிகிரி பாஸ் பண்ண முடியல. மொத்தம் ஏழு அரியர்ஸ். அதை எழுதி பாஸ் பண்ணாம குடும்ப கஷ்டம்ன்னு வேலைக்கு போக ஆரம்பிச்சேன். ரெண்டாயிரத்து ஒண்ணாம் வருஷத்துலருந்து 2007 வரைக்கும் நான் பாக்காத வேலை இல்லை. கிராமத்துல அறுவடை டைம்ல, அம்பாரத்துல இருக்கிற நெல்ல மூட்டைல கொட்டி, எடைபோட்டு வண்டி ஏத்திவிட்டா, ஒரு மூட்டைக்கு ரெண்டு ரூபாய் கொடுப்பாங்க. ஒரு நாளைக்கி 100 மூட்டை ஏத்துவேன். அப்புறம் செங்கல் சூளைக்கு வேலைக்குப் போயிருக்கேன். ஆத்து மணல் ஒரு லோடு ஏத்தினா நாப்பது ரூபாய் தருவாங்க. இந்தப் பணம்ல்லாம் பத்தலன்னு சென்னை வந்தேன். ஒரு வருஷம் சென்னைல ஃபால்ஸ் சீலிங் போடற வேலை பாத்துருக்கேன். காயலான் கடைல வேலை செஞ்சுருக்கேன். கடைசியா வானகரத்துல இருக்கிற பெரிய ஹோட்டல்ல வேலைக்குச் சேந்தேன். அதுக்கு பிறகு எந்த வேலைக்கும் போகல”

Kannadasan
'கண் பேசும் வார்த்தைகள் புரியவில்லை' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 12

“ஏன்?”

“ஊருக்கே பசியாத்துற ஹோட்டல். ஆனா நாங்க கஸ்டமர் இல்லாத நேரத்துலதான் சாப்பிடணும். காலை டிபன் 12 மணிக்குதான் சாப்பிடணும். மதியான சாப்பாடு சாயங்காலம் 4 மணிக்கு. ராத்திரி சாப்பாடு 12 மணிக்குதான் சாப்பிடணும். ஹோட்டல்ல அவ்வளவு சாப்பாடு இருக்கும். ஆனா நடுவுல நாங்க எவ்வளவு பசிச்சாலும் சாப்பிட முடியாது. ஒரு நாள் மதியானம் பசி தாங்காம, திருட்டுத்தனமா ஒரு சிக்கன் துண்ட எடுத்து சாப்பிட்டுட்டேன். அதை முதலாளி பாத்துட்டு அசிங்க அசிங்கமா திட்டினாரு. கோபத்துல அந்தாள அடிச்சுட்டு ஓடி வந்துட்டேன். கைல அஞ்சு காசு இல்ல. அம்பத்தூர்ல எங்கூரு பசங்க கொஞ்ச பேரு ரூம் எடுத்துத் தங்கி, டிவிஎஸ்ல ஹவுஸ்கீப்பிங் வேலை செஞ்சுட்டிருந்தாங்க. அந்த ரூமுக்குப் போனேன். ஊர்ல திருவிழான்னு அவங்க ஊருக்குப் போயிருந்தாங்க. ஆனா சாவி ஹவுஸ் ஓனர்கிட்ட இருந்துச்சு. நான் அடிக்கடி போய் பழக்கம்ங்கிறதால சாவிய கொடுத்தாங்க” என்றான்.

“ஏன் நீயும் ஊருக்கு போகவேண்டியதுதானே?”

“அதுக்கு பஸ்சுக்கு காசு வேணுமே…” என்றதும் என் நெஞ்சு தளும்பியது.

தொடர்ந்து அவன், “என் ஃப்ரண்ட்ஸ்ங்க ஊர்லருந்து வந்த பிறகுதான் பணம் கிடைக்கும். பசிக்கு சாப்பிட கைல காசும் கிடையாது. அவங்க மூணு நாள் கழிச்சுதான் வந்தாங்க. அவங்க வர்ற வரைக்கும் மூணு நாளும் வெறும் தண்ணி மட்டும்தான் குடிச்சு பொழுத ஓட்டினேன். சில நாள் பசி மயக்கத்துல மயங்கிருவேன். அப்புறம் தானா முழிச்சுக்குவேன்…” என்றதும் அவன் கையை இறுகப் பிடித்துக்கொண்டேன்.

“மூணு நாள் கழிச்சு ஃப்ரண்ட்ஸ்ங்க வந்ததும், பஸ்சுக்கு காசு வாங்கிகிட்டு, இனிமே ஜென்மத்துக்கும் சென்னைக்கே வரக்கூடாதுன்னு பஸ் ஏறினேன். அப்ப பக்கத்து சீட்ல ஒருத்தரு டிஎன்பிஎஸ்சி எக்ஸாம் புக்க படிச்சுகிட்டு வந்தாரு. பாக்க வித்தியாசமா இருந்துச்சு. என்ன புக்குங்க இதுன்னு கேட்டேன். கவர்மென்ட் வேலைக்கு போறதுக்கான பரீட்சைக்கு படிக்கிறேன்னாரு. நான் ஆச்சர்யத்தோட, “கவர்மென்ட் வேலைன்னா காசு கொடுத்தாதான் கிடைக்கும்ஙகிறாங்க…”ன்னன். அதுக்கு அவரு, “அது எங்கயாவது எப்பவாவது ஒண்ணு ரெண்டு சமயம் நடக்கும். சில லோயர் லெவல் போஸ்ட் ரெக்ரூட்மென்ட்லயும் லஞ்சம் விளையாடலாம். ஆனா தொண்ணூறு சதவீதம் பேர் டிஎன்பிஸ்சி பரீட்சை எழுதித்தான் வேலைக்குப் போறாங்க. எங்க ஊர்ல ரொம்ப ஏழ்மையான குடும்பத்துலருந்து ஒரு அண்ணன் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 எழுதி பாஸ் பண்ணி, இப்ப டெபுடி கலெக்டரா இருக்காரு”ன்னு சொன்னவுடனே நான் அசந்துபோய்ட்டேன். அப்படியே அந்த புக்கை  வாங்கி ரொம்ப நேரம் பாத்துட்டுருந்தேன். உடனே நானும் எழுதணும்ங்கிற முடிவுக்கு வந்தேன்” என்ற மகேந்திரனை உற்றுப் பார்த்தேன்.

       அன்று சிந்தனையுடன் ஓடும் பஸ்சில் அந்த புத்தகத்தைப் பார்த்த மகேந்திரன் பின்னர் டிகிரி அரியர்ஸை ஒரே அட்டம்ப்ட்டில் பாஸ் செய்துவிட்டு, பின்னர் டிஎன்பிஎஸ்சி எழுதி, குரூப் 2 பாஸ் செய்து, சென்னை தலைமைச்செயலகத்தில் அசிஸ்டென்ட் செக்‌ஷன் ஆபிசராக பணியில் சேர்ந்து, இன்று செக்‌ஷன் ஆபிசராகவும் மாறிவிட்டான்.

       இந்தக் கட்டுரையில் அவனைப் பற்றி எழுதுவது என்ற முடிவுக்கு வந்தவுடன், மகேந்திரனிடம் அனுமதி கேட்பதற்காக அவனுக்கு ஃபோன் செய்து, “என்னடா… பொங்கலுக்கு ஊருக்கு போய்ட்டு வந்துட்டியா?” என்றேன்.

“ம்… நீங்க வந்துட்டீங்களா?”

Kannadasan
'காதல் பிசாசே.. காதல் பிசாசே..' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 14

“நான் இன்னைக்கி காலைலதான் வந்தேன். அப்புறம் உன்னப் பத்தி எழுதப்போறேன். எழுதலாமா?” என்ற கேட்டேன்.

“இப்படியே நீங்க அடுத்தவங்க கதைய எழுதி பெரிய ஆளாயிடுவீங்க. பதிலுக்கு எனக்கு என்ன தருவீங்க?” என்றான் விளையாட்டாக சிரிப்புடன்.

“அன்புடா… விலைமதிப்பில்லாத அன்பத் தருவேன்” என்று நான் சொல்ல… சத்தமாக சிரித்த மகேந்திரன், “சார்… நீங்கதான் இதையெல்லாம் கஷ்டம்ன்னு சொல்றீங்க. நாங்கள்லாம் எங்க ஊர்ல மிடிஸ் க்ளாஸ். அப்டின்னா மத்தவங்கள்லாம் எவ்ளோ கஷ்டப்படுவாங்கன்னு பாத்துக்குங்க. அப்புறம் ஒரு விஷயம்... இந்த தடவை பொங்கலுக்கு ஊருக்குப் போனப்ப வானகரத்துல அந்த ஹோட்டல்லதான் ஃபேமிலியோட சாப்பிட்டேன்” என்றான்.

“கார்லதான் போனியா?” என்றேன்.

“ஆமாம் சார்.” என்றவுடன் எனக்கு சந்தோஷமாக இருந்தது.

“இதையும் எழுதிடுவீங்களே?” என்றான்.

எழுதிவிட்டேன்.

இந்த வாழ்க்கையும், சமூகமும் தகுதியான எத்தனையோ நபர்களுக்கு மிகப்பெரிய அநீதியை இழைத்திருக்கிறது. எப்போதாவது சிலமுறை சிலருக்கு நியாயம் செய்கிறது. அந்த நியாயம் மகேந்திரனுக்கு கிடைத்திருக்கிறது.

மகேந்திரனை எது, இது வரைக்கும் கொண்டு வந்து சேர்த்தது? அவன் சிறு சிறு வேலைகள் செய்து ஏற்பட்ட அவமானங்கள்… தன் மீதிருந்த நம்பிக்கை… இவை இரண்டும் சேர்ந்தே அவனை இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது. ஆனால் பலரும் வாழ்க்கையில் துயரங்கள் ஏற்படும்போதெல்லாம், உடைந்து போய் புலம்புவதைப் பார்த்திருக்கிறேன்.

       இவ்வாறு மனச்சோர்வில் உள்ளவர்களை ஊக்கப்படுத்துவதற்கு என்றே தமிழில் ஒரு அற்புதமான பாடல் இருக்கிறது. விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில் 1962-ல் வெளிவந்த, ‘சுமைதாங்கி’ படத்தில் இடம் பெற்ற, ‘மயக்கமா? கலக்கமா?” பாடல் அது. இந்தப் பாடலை எழுதியபோது கண்ணதாசனுக்குத் தெரியாது. இந்தப் பாடல் மூலமாகவே தமிழ் திரையில் தனக்கு எதிரான மிகப்பெரிய போட்டியாளரை உருவாக்கப் போகிறோம் என்று. அந்த போட்டியாளர்… கவிஞர் வாலி.

ஶ்ரீரங்கத்திலிருந்து சென்னை வந்து பாடல் எழுத வாய்ப்புத் தேடி அலைந்த வாலிக்கு, பல முயற்சிகளுக்கு பிறகு ஒன்றிரண்டு பாடல்கள் மட்டுமே எழுத வாய்ப்பு கிடைத்தது. அதுவும் அவர் வாழ்க்கை நிலையை உயர்த்தவில்லை. புதிதாக பாடல் எழுத வாய்ப்பின்றி பசியும், பட்டினியுமாக வாழ்க்கைச் சென்றுகொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் அளவில்லாத துன்பங்கள். வாலியின் தந்தை இறந்தார். தாய் நோய்ப் படுக்கையில் பம்பாயில் இருந்தார்.  இந்த நிலையில் இன்னும் சினிமாவை நம்புவது புத்திசாலித்தனமல்ல என்ற முடிவுக்கு வந்தார். எனவே மதுரையில் டிவிஎஸ் அலுவலகத்தில் மிகப்பெரிய பதவியில் இருந்த ஒரு நண்பருக்கு வேலை கேட்டு கடிதம் எழுதினார். அடுத்த வாரமே வந்து வேலையில் சேரச்சொல்லி அவர் பதில் எழுதினார். கடிதம் வந்த மறுநாளே வாலி மதுரைக்குப் புறப்படத் தயாராக இருந்தார்.

       அப்போது அவருடைய நண்பரான பாடகர் பி.பி.ஶ்ரீனிவாஸ் வாலியின் அறைக்கு வந்தார். அவரிடம் வாலி மறுநாள் தான் மதுரைக்கு புறப்படும் தகவலைச் சொல்லாமல், “சமீபத்தில நீங்க பாடின பாட்டு எதாச்சும் இருந்தா பாடிக்காட்டுங்க” என்றார். அவர் சிறிது யோசித்துவிட்டு, ‘மயக்கமா? கலக்கமா?” பாடலை அற்புதமாக பாடினார்.

அந்தப் பாடலின் வரிகள் வாலியின் செவிகளில் பாயப் பாய… வாலி புத்துணர்ச்சி பெற்றார். எப்படியாவது போராடி தமிழ் சினிமாவில் வென்றே தீரவேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். உடனே மதுரைப் பயணத்தை ரத்து செய்துவிட்டு, சென்னையிலேயே தங்குவது என்ற முடிவுக்கு வந்தார். தொடர்ந்து முயன்றார். ‘கற்பகம்’ திரைப்படத்தில் வாலி எழுதிய அத்தனைப் பாடல்களும் சூப்பர்ஹிட்டாக… கண்ணதாசனுக்கு போட்டியாக வாலி என்ற கவிஞர் தமிழ் திரைக்கு கிடைத்தார். மூன்று தலைமுறைகள் வரை தொடர்ந்து பாடல்கள் எழுதிக்கொண்டேயிருந்தார். அந்த ஒரு பாடல் வாலியின் வாழ்க்கையை மாற்றியது.

இது குறித்து கவிஞர் வாலி, “அந்தப் பாடலே என் எதிர்காலத்தை நிர்ணயித்தது. நான் தொடர்ந்து போராடுவதற்கான தெம்பையும், தெளிவையும் என்னுள் தோற்றுவித்தது. சோர்ந்து போன என் சுவாசப் பையில் பிராணவாயுவை நிரப்பி, எனக்கு உயிர்பிச்சைக் கொடுத்து என்னைப் புதுமனிதனாக்கியது” என்று கூறியிருக்கிறார். வாலியை மட்டுமல்ல. சோர்ந்திருந்த எத்தனையோ மனிதர்களை அந்தப் பாடல் புதுமனிதனாக்கியிருக்கிறது.

(குறிப்பு: இந்த அத்தியாயத்துடன் இத்தொடர் நிறைவடைகிறது.)

மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்


மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா

ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடி
நாளை பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு
நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து நிம்மதி நாடு


மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா

(நிறைவுற்றது)

(தகவல் உதவி: கவிஞர் வாலி எழுதிய, ‘நானும் இந்த நூற்றாண்டும்’ என்ற புத்தகம். வாலி பதிப்பகம் வெளியீடு)

Kannadasan
காதல் பட பாடலும் நா.முத்துக்குமாரும் - நினைவே ஒரு சங்கீதம் | Epi 18

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com