'புலனாய்வுப் புலியும் புருடா ஸ்டோரியும்' -நான் நிருபன் | Epi 12

யாரோ ஒரு பெண்- ஒரு ஆண் சம்பந்தப்பட்ட அந்தரங்க விஷயத்தை ஊரே இப்படி என எழுதியிருந்தது பலரைக் கொதிக்க வைத்தது. அந்த ஊர் இளைஞர்கள் கம்பு, தடிகளோடு நிருபரை அடிக்க தங்கியிருந்த லாட்ஜுக்கு வந்து விட்டார்கள்.
புலனாய்வுப் புலி
புலனாய்வுப் புலிடைம்பாஸ்

ஊரில் ஏரியா நிருபராக நாளிதழ்களில் வேலை பார்ப்பது என்பது வரம்.  ஒருவர் மற்றவர்களுக்கு உதவி செய்து சேர்ந்தே செய்திகளை வெளியிடுவார்கள். பெரும்பாலும் புகைப்படக்காரர்கள் மட்டும் அதிகமாய் வேலை செய்வார்கள். குறிப்பாக சாலை விபத்து எங்கேனும் நடந்திருந்தால், போனில் யாராவது ஒரு இதழின் நிருபர் தன் புகைப்படக்காரரைப் ஸ்பாட்டுக்குப் போய் தகவல்களையும் படங்களையும் சேகரித்து வந்து மற்ற நாளிதழ் நிருபர்களுக்கு படங்களையும் தகவல்களையும் கொடுத்து உதவுவார். சம்பவம் நடந்த இடத்துக்கு ஒருவர் போனாலே போதும் என்ற விஷயத்தை சுழற்சி முறையில் கடைபிடித்து, மற்ற நபர்களின் நேரத்தை மிச்சப்படுத்துவார்கள். 

அதனால் பெரும்பாலான ஏரியா  நிருபர்கள், எல்.ஐ.சி ஏஜெண்ட், எம்.எல்.எம், ரியல் எஸ்டேட், பெட்டிக்கடை என இன்னொரு வேலையையும் செய்து பணம் சம்பாதிப்பார்கள். ஆனால், நான் வாரமிருமுறை வெளிவரும் புலனாய்வு இதழின் மாவட்ட நிருபராக சொந்த ஊரில் நியமிக்கப்பட்டிருந்தேன். நாளிதழ் நிருபர்களுக்குக் கிடைக்கும் சௌகரியங்கள் எதுவும் கிடைக்காது. பெரும்பாலான நாளிதழ் நிருபர்கள்...ஒரு சிலரைத் தவிர மீதிபேர் செய்தி வெளியிடுவதற்காக பணம் வாங்கிக் கொள்வார்கள். ஆனால், இங்கு நிலைமையே தலைகீழ், எவ்வளவுக்கு எவ்வளவு நேர்மையாக இருக்கிறோமோ அந்த அளவுக்கு சுதந்திரமாக செயல்படலாம். 

புலனாய்வுப் புலி
'முன்னாள் கனவுக்கன்னியின் கோபம்' - நான் நிருபன் தொடர் | Epi 4

அடையாளம் மறைத்து செய்தி சேகரிக்கப் போகும் என்னையெல்லாம் அப்போது யாரும் நிருபன் என்று கணிக்கவே முடியாது. கெச்சலான உடல், பார்க்கவே பாவம்போன்ற தோற்றம் என ரொம்பவே சுமாராக இருப்பேன். சொந்தமாக வாகனம் இல்லாததால், பெரும்பாலும் நடந்துதான் ஊருக்குள் எங்கும் செல்வேன். வெளியூர்களுக்கு அரசுப்பேருந்து, ரொம்ப அவசரம் என்றால் நண்பர்களிடம் இரவல் பைக் என்று வாழ்க்கை பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தது. 

அப்போது போட்டியாக ஒரு புலனாய்வு வார இதழ் வெளிவந்த சமயம். அதற்கு மாவட்ட நிருபர் ஒருவரை நியமித்திருந்தார்கள். நல்ல மனிதர் தான். ஆனால், கொஞ்சம் உஷார் பார்ட்டி.  நான் பிறந்தது உள்ளூர் என்பதால் எனக்கு அந்த ஏரியாவின் அரசியல், சூழல், முக்கிய நபர்களின் பூர்வீகம் எல்லாம் தெரியும். ஆனால், அந்த நிருபர் மத்திய தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அதற்கு முன்பு தெற்குப் பக்கம் வராதவர். அவருக்கு இந்த வேலை கிடைத்ததும், கிளம்பி வந்தவர்.

ஆரம்பத்தில் கொஞ்சம் ஏரியா அவருக்குப் புரிபட  உதவி செய்தேன். போகப்போக அவருக்கும் எனக்கும் எக்ஸ்க்ளூசிவ் செய்திகளைக் கொடுப்பதில் செம போட்டி. இந்தப் போட்டி ஆரம்பத்தில் ஆரோக்கியமாகப் போனது. போகப் போக ரணகொடூரமான போட்டியாக மாறியது. நான் மண் மணக்கும் கட்டுரைகளை எழுதினால் அவர் அரசியல் சிண்டுமுடிச்சுகளை கிளப்பி விடும் செய்திகளாக எழுதுவார்.

ஒருகட்டத்தில் போட்டி உச்சத்துப் போக, கற்பனையாக ஏதேதோ எழுத ஆரம்பித்துவிட்டார். வெறும் பரபரப்புக்காக... கற்பனைச் செய்திகளை நிஜம்போல எழுத ஆரம்பித்து விட்டார். அதில் ஒன்று ஒரு கடற்கரை கிராமத்தின் பெண்கள் வெளிநாட்டில் இருக்கும் தங்கள் கணவன்மார்களுக்கு துரோகம் செய்து இங்கிருக்கும் ஆண் நகை வியாபாரிகளிடம் பலனடைகிறார்கள் என்று எழுதியிருந்தார். 'கண்ணடிச்சா கம்மல், நெளிஞ்சா நெக்லஸ், வளைஞ்சா வளையல்' போன்று ஒரு டைட்டிலையும் வைத்து கிளிகிளுப்புக்காக ஏதேதோ எழுதி விட்டார். படிக்க கிளுகிளுப்பாக இருந்த அந்தக் கட்டுரையைப்ப் அடித்த அந்த ஊர் மக்கள் திரண்டு அவரை அடிக்க வந்தார்கள்.

யாரோ ஒரு பெண்- ஒரு ஆண் சம்பந்தப்பட்ட அந்தரங்க விஷயத்தை ஊரே இப்படித்தான் என எழுதியிருந்தது பலரைக் கொதிக்க வைத்தது. அந்த ஊரில் இருக்கும் இளைஞர்கள் கம்பு, தடிகளோடு அவரை அடிக்க நிருபர் தங்கியிருந்த லாட்ஜுக்கு வந்து விட்டார்கள். நான் அவருக்கு அடைக்கலம் கொடுத்து வைத்திருந்தேன். பின் நிலைமை சரியானதும் ஒருவாரம் கழித்து  லாட்ஜுக்குக் கிளம்பிப் போனார். 

புலனாய்வுப் புலி
கோடம்பாக்க வள்ளலிடமே ஆட்டையப் போட்ட அல்லக்கை! - நான் நிருபன் | Epi 7

அதன்பிறகும் வெறிகொண்டு கற்பனை செய்திகளாக எழுதிக்  கொண்டிருந்தார். ஒரு போட்டோ கிடைத்தால் போதும் இஷ்டத்துக்கு ஏதாவது எழுதி பரபரப்பாக்கிவிடுவார். இதனால் எனக்கும்கூட அலுவலகத்தில் சிக்கல் வந்தது. 'எக்ஸ்க்ளூசிவ்' செய்திகளை மிஸ் செய்யாதீர்கள் என்றார்கள். 

பூனைக்கு மணி கட்டும் விஷயத்தை ஒருநாள் என் புகைப்படக்காரர் பண்ணிவிட்டார். (ஃப்ரிலான்ஸ் போட்டோகிராபர்) அந்த விஷயம் எனக்கே தெரியாது. ஒரு கிராமத்தில் டிராகுலா மனிதன் இருக்கிறான் என்ற போன் அழைப்பைக் கேட்டு அங்கே கிளம்பிப் போனோம். அந்த ஊர் இளைஞன் ஒருவன் ஆடுகளின் ரத்தத்தைக் குடிக்கும் வினோத பழக்கத்தோடு இருப்பதாக அந்த ஊர் ஆள் நமக்குச் சொல்லியிருந்ததால் போயிருந்தோம். 

ஊரில் சம்பந்தப்பட்ட அந்த இளைஞன் மூளைவளர்ச்சி இல்லாத ஒரு மாற்றுத் திறனாளி என்பதை போனதும் கண்டுபிடித்தோம். அவரது தாயாரை சந்தித்துப் பேசினோம். தன் மகனைப் பற்றி கண்ணீரோடு பேச ஆரம்பித்தார். எனக்கு பாவமாக இருந்தது. கட்டுரையை எழுத மனமில்லை. எனக்குத் தெரிந்த ஒரு மனநல மருத்துவரிடம் அவனை அழைத்துச் செல்ல உதவி செய்திவிட்டுக் கிளம்பினேன்.

பெரும்பாலும் செய்தி சேகரிக்கும்போது, எனக்கே தெரியாமல் என் புகைப்படக்காரர் போட்டோக்கள் எடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார். புலனாய்வு செய்தி சேகரிப்பில் அடிப்படை விதி அது. சுதாரித்து கேமராவைப் பறிப்பதற்குள்ளோ அல்லத்து 'பேட்டியெல்லாம் தர முடியாது' என அடாவடியாக பேசி பேட்டி பாதியில் முடிவடையும்போது அவர்களது முகம் கட்டுரைக்குத் தேவை என்பதால் போனதும் எடுக்க ஆரம்பித்து விடுவார். அன்றும் அப்படித்தான் எனக்கே தெரியாமல் தாயையும் மகனையும் படங்கள் எடுத்திருக்கிறார். 

நான் ஊர் திரும்பியதும் நம் புலனாய்வு நிருபர், எனக்கே தெரியாமல் என் புகைப்படக்காரரை தொடர்பு கொண்டு, 'எங்கே போனீங்க?' என்று அவரிடம் விசாரித்திருக்கிறார். அவரும் இந்த பையனைப் பற்றி சொன்னதும், நம் நிருபருக்கு கொம்பு முளைத்தது. அவ்வளவுதான். 'எனக்கு அந்த போட்டோ வேண்டும். கிடைக்குமா?' என்று கேட்டிருக்கிறார். நாளிதழில் முன்பு வேலை 

பார்த்த என் புகைப்படக்காரரும் எனக்கே தெரியாமல் அந்த நிருபருக்கு போட்டோக்களைக் கொடுத்து உதவியிருக்கிறார். அந்தப் பையன், பெயர், ஊர், அம்மா பெயர் எல்லாவற்றையும் சொல்லிவிட அந்த ஊருக்கு நிருபரே நேரில் சென்று செய்தி சேகரித்ததைப்போல புலனாய்வுக் கட்டுரையை எழுதியிருந்தார். அது அந்த வாரம் அவர் வேலை பார்க்கும் அந்த இதழில் பெரிய அளவில் வந்து விட்டது. லோக்கல் போஸ்டர்களில் அந்த செய்தி ஹைலைட் செய்யப்பட புத்தகத்தின் சேல்ஸும் அவருக்கு கன்னாபின்னாவென எகிறியது. 

புலனாய்வுப் புலி
'ஜெயலலிதா பெயரைக் கேட்டு நடுங்கிய காமெடி நடிகர்' | நான் நிருபன் | Epi 8

எல்லாம் ஒருநாள் தான். மறுநாள் அந்த ஊரைச் சேர்ந்த எம்.எல்.ஏ, மாவட்ட எஸ்.பி, இன்னொரு அரசியல்வாதியும் பிரஸ்மீட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். நிருபன் என்ற முறையில் நானும் போயிருந்தேன். அங்கு போனால், அந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனும் அவனது அம்மாவும் பிரஸ் மீட்டில் எஸ்.பியின் அருகில் உட்கார்ந்திருந்தார்கள். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. 

''ஒரு புலனாய்வு பத்திரிகையில் இந்த அப்பாவி குடும்பத்தைப் பற்றி தப்பு தப்பா போட்டோ போட்டு வந்திருக்கு. இவனுக்கும் கேரளத்தின் தீவிரவாதியா இருக்குற ஒரு மந்திரவாதியின் தொடர்பு இருக்கு. தீவிரவாத இயக்கத்தோடு தொடர்பு இருக்கு... அது இது' என அந்தப்பத்திரிக்கையில் உங்களில் யாரோ எழுதியிருக்கீங்க. உண்மையில் ஒரே ஒரு ஆட்டுக் குட்டியை மட்டும் இந்த இளைஞன் மனப்பிறழ்வில் கடித்திருக்கிறார். ஆனால், அந்தப் பத்திரிகையில் இதுவரை முப்பது ஆட்டு ரத்தத்தைக் குடித்திருப்பதாகவும், குழந்தைகளை நரபலி கொடுக்க திட்டம் வைத்திருப்பதாகவும் இஷ்டத்துக்கு கதையெழுதி, இவரது சிறுபான்மை அடையாளத்தை சேர்த்து தீவிரவாதி ரேஞ்சுக்கு அந்த ஆள் எழுதியிருக்கிறார். சம்பந்தப்பட்ட இளைஞனும் அம்மாவும் இந்து மத்ததைச் சேர்ந்தவர்கள். ஆனால், கட்டுரையில் அவர்கள் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக காட்டியிருக்கிறார். இதுதானா பத்திரிகை தர்மம்?'' என கொந்தளித்தார் எஸ்.பி.

சம்பந்தப்பட்ட நம் நிருபரை அந்த பிரஸ் மீட்டில் காண முடியவில்லை. போனும் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்தது. நீண்ட தேடுதலுக்குப் பிறகு நம் புலனாய்வுப் புலி இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, நேரில் போய் பேசினேன். 

''தம்பி... உன் போட்டோகிராபர் ஏமாத்திப்புட்டான்பா... போட்டோவைக் கொடுத்து என்னென்னமோ தப்புதப்பா டீட்டெய்ல்ஸ் சொன்னான். அதைத்தான் எழுதியிருந்தேன்.அப்புறமாத்தான் தெரிஞ்சது அது ஃபேக் ஸ்டோரினு. அந்தப் பையனோட அம்மா இப்போ மனித உரிமை ஆணையம் வரைக்கும் போயிடுச்சு. அவங்க சொந்தக்காரர் ஒருத்தர் டி.ஐ.ஜியா இருக்காராம். அவர் என்னை அரெஸ்ட் பண்ணணும்னு அலையிறாரு. ஆபிஸ்ல எனக்கும் கெட்டப்பேரு...நீதான் காப்பாத்தணும்பா!'' என்று அழுதே விட்டார். 

போட்டோகிராபரைக் கூப்பிட்டு கேட்டால், ''சும்மா புருடா விட்டேன் சார்... அதையே எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் வெச்சு தீவிரவாதி ரேஞ்சுக்கு எழுதிப்புட்டான்!'' என்று சொல்ல அவரை நன்கு திட்டிவிட்டேன். 

புலனாய்வுப் புலி
'என்னால் நின்றுபோன நடிகரின் கல்யாணம்!' - நான் நிருபன் | Epi 11

'உங்க விளையாட்டுக்கு அப்பாவி குடும்பம் தான் கிடைச்சதா?' என்று கேட்டு போட்டோகிராபருடனான தொடர்பையும் துண்டித்தேன். 

நிருபரைப் பார்க்க பாவமாக இருந்தது. அதோடு பத்திரிகை ஃபீல்டிலிருந்து விலகி சொந்த ஊர்ப்பக்கம் சென்றே விட்டார். சிலகாலம் முகநூலில் பிஸியாக இயங்கிக் கொண்டிருந்தார். அப்புறம் அங்கும் காணாமல் போனார். சமீபத்தில் அவரிடமிருந்து ஒரு பார்சல் வந்தது. செம வெயிட்டாக இருந்தது. அதைப் பிரித்துப் பார்த்தால், உள்ளேயிருந்தது கற்பனை ரசம் சொட்டச் சொட்ட அவர் எழுதிய நாவல்!

(சம்பவங்கள் Loading..) 

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com