Tamil Cinema
Tamil Cinema timepassonline
சினிமா

Tamil Cinema : இதெல்லாம் ஒரு கதையாம்மா? - தினுசான கதைகளைக் கொண்ட படங்களின் லிஸ்ட் !

மின்மினிப் பூச்சி

கோலிவுட்டை அல்லேக்காத் தூக்கி மல்லாக்காப் போட்டுரும்னு நெனச்சி, ஹோட்டல்ல ரூம்போட்டு மூளை, கிட்னி, கல்லீஈரல், மண்ணீரல் வரைக்கும் கசக்கி கதை பண்ணின சில படங்கள் இருக்கு. இதுக்கெல்லாம் கூட கதை பண்ணலாம்னு நெறைய இயக்குனர்களுக்கு அந்த கதைகள்தான் புரியவெச்சிருக்கு..

படம் பார்த்துட்டு என்டு கார்டு போட்டதும் எந்திரிச்சு வந்த பொதுஜனங்களும் ஆச்சர்யத்துல ’அடடே..அடடே..’னுதான் வீடு போய் சேர்ந்திருக்காங்க. அந்த அளவுக்கு கதையில நிறைய ஊட்டச்சத்து மாவு கலந்திருக்கு. அப்படி சில படங்களைத்தான் இப்போ பார்க்கப்போறோம்.

1 . ஒரு மாம்பழத்தை மையாமா வெச்சி, அது அண்ணனுக்கா இல்ல தம்பிக்கான்னு கேம் ஷோ நடத்தி, அப்பன், புள்ளைனு அடிச்சிக்கிட்டு அலைஞ்ச படம்தான் ’திருவிளையாடல்’. பாட்டி ஒளவையாருக்கு கெடைச்ச ஞானபழத்தை நாம துண்ணு என்ன புண்ணியம்னு ஈசன் கைல கொடுக்க வருது. அவரு பழத்தை கைல வாங்கிட்டு, இதை நாம ஜூஸ் போட்டுக்குடிக்கிறதைவிட நம்ம புள்ளைங்க கணபதியோ, முருகனோ சாப்பிடட்டுமேன்னு ஆத்தாளும் – அப்பனும் முடிவெடுக்கிறாங்க.

மாம்பழ விதிப்படி, பழத்தை ஒருத்தருக்குதான் கொடுக்கணுங்கிறதால ரெண்டு பேருக்கும் ஒரு ரென்னிங் காம்படேஷன் வைங்கிறாங்க. அந்த கேம்ல மூளைய யூஸ் பண்ணின கணபதி வின்னரா வந்து பழத்தை உஷார் பண்ணிடுறார். போங்கு ஆட்டம் ஆடிட்டதா அப்பன் - ஆத்தா மேல காண்டான முருகன் ’உங்க சங்காத்தமே வேணாம்’னுட்டு ஃபேமலிய விட்டு பேச்சிலர் ஃலைப்புக்குப் போயிடுறார். ஆக, கதைக்குள்ள நிறைய கிளைக்கதைகள் இருந்தாலும் இந்தக் கதையோட பேக்போர்ன் மாம்பழம்தான்.

2 . ஒரு அப்பனுக்கு இருட்டுன்னாலும் பயம், சண்டைனாலும் பயம். இந்த பயம் அவர் பொறந்ததிலேர்ந்து, அவருக்கு ஒண்ணு பொறந்த வரைக்கும் இருக்கு. இப்டி காலங்காலமா பயந்து வாழுற ஒருத்தரைப் பத்தின படம்தான் ‘வேட்டிய மடிச்சுக் கட்டு’ ஹீரோ பாக்யராஜ். அவர் மகனாக சொந்த மகன் சாந்தனு நடிச்ச படம்.

தன்னை மாதிரி எல்லாத்துக்கும் பயந்து சாகிற கோழையா தன்னோட மகனும் வளரக்கூடாதுன்னு நெஞ்சு விடைக்கிற வீர சூர கதைகளை சொல்லிச்.. சொல்லி வளர்க்கிறாரு. அதோட, தான் ஒரு பெரிய வீரன்னும், அசகாய சூரன்னும் பீலாவை பீட்ஸா மாதிரி ஊட்டுறாரு. வம்பு சண்டைக்கு வந்தவனுங்ககிட்ட அடிய வாங்கிட்டு, தன் மகன்கிட்ட அவனுங்களை அடி பின்னிட்டேன்னும், கை, கால், கண்ணு, வாய், மூக்கு எல்லாத்தையும் பஞ்சர் பண்ணி அனுப்பினேன்னு வாய் உதார் விடுறாரு.

ஒரு நாளைக்கு தான் பயந்தாங்கொள்ளிங்கிற பருப்பு மகன் முன்னாடி வெந்துட்டா என்ன பண்றதுங்கிற பயம் பாய்போட்டுப் படுத்திருந்தாலும் மகனை சந்தோஷப்படுத்த உருட்டு.. உருட்டுன்னு உருட்டுறாரு. ஆகா, அப்பன் பயத்தை கதையா பண்ணி, படமா எடுக்கலாம்னு பதிவு செஞ்ச படம்தான் ’வேட்டிய மடிச்சு கட்டு’.

3 . ’ஏய்’ னு ஒரு படம். சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் நாயகனாவும், நாயகியா நமிதாவும் நடிச்சிருப்பாங்க. சரத்துக்கு பகுதி நேரம் பல்பு விக்கிறதும், முழு நேரம் தங்கச்சி மேல பாசமழை பொழியறதும்தான். என்ன பண்ணியாவது தங்கச்சிய கலெக்டராக்கிப் பார்த்துடணும்கிறதுதான் லட்சிய தாகம். அந்தத் தாகம் சொம்பு சொம்பா தண்ணி குடிச்சும் அடங்காம அலையுறாரு. ஒரு தபா போலீஸ் அதிகாரி ஆசிஷ் வித்யார்த்திக்கும் சரத்துக்கும் ஒரு பிரச்சனை.

இன்ஸ்பெக்டர், சரத் சட்டையைப் பிடிக்க, ஆவேசமான சரத் ’ஏய்’ கத்திடறார். அதைப் பார்த்து சுத்தி இருந்த பப்ளிக் எல்லாரும் இதான் உன் ’பவுசா..?’ ங்கிற மாதிரி இன்ஸ்பெக்டரை நக்கலாப் பார்க்க, அவமானத்துல இன்ஸ் தலை தரைவரை தொங்கிடுது. அதுக்கப்புறம் சரத் கத்தின ’ஏய்’ இன்ஸ் காதுல ரவுண்ட்ஸ்.. ரவுண்ட்ஸா வருது. ’ஏய்’ அந்த ஒத்த வார்த்தைதான் கதையோட மையப்புள்ளியா வெச்சிகிட்டு, சரத் பல்பு தூக்கிட்டு விற்கப் போறதும், வில்லன் ஆளுங்க விறகு கட்டைய தூக்கிட்டு சரத்தை அடிக்க வர்றதுமா…போகும். ’ஏய்’னது ஒரு குத்தமாய்யா..?

4 . இதே மாதிரிதான் ஒரு சாதாரண சப்ப மேட்டருக்கு.. ஹீரோ விக்ரமை கண்ட இடத்துல எல்லாம் ’ஒத்தைக்கு ஒத்த சண்டைக்கு வர்றியா.. மோதிப் பாக்கலாமா..?’னு வில்லன் பசுபதி வம்படியா வந்து பந்தா பண்ற படம்தான் ’தூள்’. ஏதோ அந்தப் புள்ள விக்ரம் ஹீரோங்கிறதால, ஊருசனம் குடிக்கிற குளத்து நீர்ல பேக்டரி கழிவு கலக்குதுன்னு மந்திரிகிட்ட பெட்டிஷன் கொடுக்கிறதுக்காக கை துட்டப்போட்டு சென்னைக்கு ரயிலேத்தி விடுறாங்க.

அந்த வேலையா அலையறப்பதான் கூட கூட்டிப்போன ஹீரோயின் ஜோதிகாவ பசுபதி அத்துமீறித் தொடப்போக, பாத்துக்கிட்டிருந்த ஹீரோ, தட்டிக்கேட்காம மிக்சரா திண்ணுட்டு இருக்க முடியும்..? அடிக்கக் கூட செய்யலைங்க. பசுபதியை தடுக்கிற விதமா நெஞ்சுல கை வெச்சு தள்ளுனதுக்கே சொர்ணாக்கா தம்பிக்கு சுர்ருன்னு கோபம் வந்துடுது.

பயந்துக்கெடந்த அந்த ஏரியா மக்க வேற அதை பார்த்து தொலைஞ்சதால, விக்ரம் மேல அந்த ஸ்பாட்லயே வன்மத்த வைக்கிறாரு பசுபதி. அதுக்கப்புறம் ஒரே சண்டை. அவரை இவர் அடிக்க, இவரை அவர் அடிக்கன்னு செம ரகளைதான் போங்க.

5 . நம்ம பிரெண்ட் தனுஷ் ரொம்ப நல்ல புள்ளைங்க. ரோட்டுல போயிட்டிருந்த சாயாசிங் தோள்ல போட்டிருந்த பேக்கைப் பார்த்துட்டு ஓடிப்போயி வெள்ளந்தியா ’உங்க பேக்கு சூப்பரா இருக்குங்க’னு சொல்ல, சாயா கூட இருந்த தோழி ’அவன் சூப்பரா இருக்குன்னு சொன்னது உன் தோள்ல இருக்கிற பேக்கை இல்லடி… உன்….கை’னு வந்தவாசி போன ரூட்டை வளைச்சி வாலாஜாபேட்டைக்கு அனுப்பிவிடுர்றாங்க. அதுக்கப்புறம் சாயா, தனுஷ் ரெண்டு பேரும் பார்த்தா பல்லைக் கடிக்கிறதும், பேசிக்கிட்டா மூக்கை உடைப்பேன், நாக்கை அறுப்பேன், கண்ணைத் தோண்டுவேன்னு கத்துறதுமா இருப்பாங்க.

’திருடா திருடி’ ங்கிற அந்த கதைக்கான பேக்ரவுண்டையே பேக்குதான் ஆரம்பிச்சு வைக்குது. படம் பார்க்குற நாமளே எந்திரிச்சிபோய் ரெண்டு பேருக்கும் சமாதானம் பண்ணிட்டு வரலாம்னு நெனைக்கிற அளவுக்கு வார்த்தைக்கு வார்த்தை பங்கம் பண்ணிக்குவாங்க. அப்றம் லேசா ரெண்டு பேருக்குள்ளயும் லவ்வு வேர் விடும். அப்றம், பூ, பிஞ்சு, காய்னு போயிட்டே இருக்கும். நம்ம தமிழ் சினிமான்னு இல்ல எல்லா மொழி சினிமாலயும் காதல்ல மோதல் இருக்கிறதும், மோதல்ல காதல் இருக்கிறதும் ஜகஜம்தானே…

- எம்.ஜி.கன்னியப்பன்.