சில வருடங்களுக்கு முன் அந்த சினிமா பிரபலம் , அப்போது பிரபலமே ஆகாத நேரத்திலும் கவனம் ஈர்க்கும் ஒரு விஷயத்தை பண்ணியிருந்தார். நாலுமுக்கிலும் அவரது ஒரு வேலை பேசப்பட்ட சமயம். வழக்கம்போல எடிட்டரின் அனுமதியோடு அவரைப் பேட்டி காணத் தயாரானேன். சினிமா டைரக்டரியில் இருந்த அவர் வீட்டு லேண்ட் லைனுக்கு போன் போட்டால், அவரே எடுத்து ஹஸ்க்கி வாய்ஸில், ''ஹலோ...நான் தான் பேசுறேங்க!'' என்றார்.
பணிவென்றால் அத்தனைப் பணிவு! இப்படியோர் பணிவை நீங்கள் பார்க்க முடியாது. அப்போது அவர் வீடு சூளைமேட்டில் இருந்தது. தெருவில் எல்லோருக்கும் தெரிந்த ஃப்ரெண்ட்லியான நபராய் இருந்தார்.
தெக்கத்திப்பக்கம் அவர் லோயர் மிடில் க்ளாஸ் வீட்டில் பிறந்த கதையில் ஆரம்பித்து, லயோலாவுக்கு படிக்க வந்தது, சினிமாவின் தொழில்நுட்ப பிரிவுகளில் ஒன்றான ஒரு துறைக்குள் நுழைந்து அடுத்த வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டது, போராடி தனக்கென சினிமாவில் கோலோச்சும் ஒரு துறையில் ஒரு சிறு அங்கீகாரத்தை அடைந்தது வரை அத்தனையும் பேசினார். மகிழ்ச்சியாக இருந்தது. இந்த உடம்புக்குள் இத்தனை போராட்டங்களா என ஆச்சர்யமானேன்.
பேசிக் கொண்டிருக்கும்போதே தன் கையால் ஒரு பெரிய கோப்பையில் எனக்கு பால் கலந்த டீயும், அவருக்கு வெறும் ப்ளாக் டீயும் போட்டு எடுத்து வந்தார்.
''எப்படி சார் என் டீ?'' என்று என் ரியாக்ஷனைப் பார்த்தார். உண்மையில் நான் குடித்த நல்ல டீக்களில் அதுவும் ஒன்று. முன்னோர்கள் பற்றி ஆரம்பித்து, அப்படியே தற்போதைய அரசியல் வரை பேசினார். அவருக்குள் ஒரு கோபக்கார இளைஞன் அடிக்கடி எட்டிப்பார்த்தான்.
''முதல் பேட்டி நீங்கதான் எடுக்குறீங்க. நீங்க ரொம்ப ஸ்பெஷல்!'' என்று பாசத்தை ரொம்பப் பொழிந்தார். தன் காதல் மனைவி பற்றி மகிழ்ச்சியுடன் பேசினார். காலை 11 மணிக்கு ஆரம்பித்த அந்த பேட்டி 1 மணிக்கு முடிந்தது. வீட்டை சுற்றிக் காட்டினார்.
''வாடகை வீடுதான் சார்... சீக்கிரமே கோடம்பாக்கத்துல வீடு வாங்கணும்...அதான் என் லட்சியம்!'' என்று சொன்னார். ''உங்க திறமைக்கு சீக்கிரமே வாங்கிடுவீங்க சார்!'' என்றேன்.
போட்டோஷூட் எல்லாம் முடிந்து கிளம்பும்போது, ``அவசியம் இன்னொருவாட்டி வீட்டுக்கு வாங்க சார்!'' என்றார். பேட்டி அடுத்தவாரம் புத்தகத்தில் வந்ததும் ரொம்பவே மகிழ்ச்சியுடன் போனில் 'நன்றி' சொன்னார்.
இரண்டு வாரங்கள் கழித்து ஒருநாள் மதியம் 12 மணிக்கு அவரிடமிருந்து போன் வந்தது. ''சார்... கோச்சுக்காம ஒரு உதவி சார். உடனே எக்மோர் ரமதா ஓட்டலுக்கு வர முடியுமா?'' என்றார். அவசர அவசரமாக கிளம்பிப் போனால், ''ஸாரி சார்... அன்னிக்கு உங்களை லஞ்ச் சாப்பிட வைக்காம டீ மட்டும் கொடுத்து அனுப்பிட்டேன். அதான் இன்னிக்கு எங்கூட லஞ்ச் சாப்பிடுங்க. ப்ளீஸ்!'' என்றார். ஆள் டிப் டாப்பாய் கிளம்பி வந்திருந்தார். எவ்வளவோ மறுத்தும், ''நீங்க சாப்பிடலைனா...நான் சாப்பிட மாட்டேன்!'' என்றபடி காரை எடுக்கக் கிளம்பினார். அவர் அன்புத்தொல்லையால் சிம்பிளாய் ஆர்டர் பண்ணி சாப்பிட சம்மதித்தேன். அவரும், ''நான் டயட் சார்!'' என்று சொல்லி சிம்பிளாய் சாப்பிட்டார். இந்த ஒல்லி உடம்புக்கு டயட் வேறயா என நான் மனசுக்குள் நினைத்துக் கொண்டேன்.
சாப்பிடும்போது அங்கிருந்த ஒரு பேரர் அவரிடம், 'நான் உங்க ஃபேன்...இந்த ட்ரெஸ்ல சூப்பரா இருக்கீங்க சார்!' என்று சொன்னார். என்ன இது ஹீரோ மாதிரிலாம் பேசுறாங்க என்று நினைத்துக் கொண்டேன்.
விடைபெறும்போது அவர் சொன்னது தூக்கி வாரிப்போட்டது.
''ஒண்ணு சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க சார்... பத்திரிகை வேலைல என்னத்தை பெருசா சம்பாதிச்சுடப் போறீங்க...உங்க திறமைக்கு நல்ல வேலை பார்க்கலாமே! இது என்னோட ஹம்பிள் ரெக்வெஸ்ட் சார்!'' என்றார்.
பேட்டி எடுக்கும்போது அநியாயத்துக்கு பம்மியவர், இன்று அப்படியே வேற வேலைக்குப் போகலாம்னு யோசனை சொல்ற அளவுக்கு அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டாரே என குழப்பமும் வருத்தமும் எனக்குள் எழுந்தது.
''இவ்வளவு சொல்றீங்க... நீங்க என்ன சார் ஆம்பிஷன் வாழ்க்கைல வச்சிருக்கீங்க..?'' என்றேன்.
''ஆங்... உங்ககிட்டதான் சார் ஃபர்ஸ்ட் சொல்றேன். இதுவரை மீடியாவுக்கு சொன்னதே இல்லை. சினிமால ஹீரோவா பண்ணப்போறேன். அதனாலதான்
டயட். ஃபிட்டா இருக்க ஜிம்லாம் போறேன்..!'' என்றார். எனக்கு பயங்கர ஷாக்காக இருந்தது. அதிர்ந்து பேசாத, பணிவு பன்னீர்செல்வமாக இருக்கும் இவர் எப்படி பஞ்ச்லாம் பேசி, ஆக்ஷன், ரொமான்ஸ்லாம் ஸ்க்ரீனில் பண்ணுவார் என கன்ஃபியூஸ் ஆனேன். என் மைண்ட் வாய்ஸை கேட்ச் பண்ணியவர். ''என்னோட சின்ன வயசுலயே அப்பா இறந்துட்டார். குடும்பப் பாரத்தை சுமக்குறதுக்காகத்தான் சென்னைக்கு வந்தேன். நீங்க நம்ப மாட்டீங்க. தொடர்ந்து மூணுநாள் சாப்பிடாம இதே சென்னைல இருந்திருக்கேன். இனிமே இழக்குறதுக்கு எதுவும் இல்லைங்கிற அளவுக்கு வாழ்க்கைல கஷ்டப்பட்டுட்டேன் சார்! அதனால சினிமால ஏதாச்சும் பெருசா பண்ணுவேன் சார்.!'' என்றார்.
''சூப்பர்...வாழ்த்துகள் சார்! U desrerved more sir!'' என்றபடி விடைபெற்றேன்.
பைக்கில் அலுவலகம் வரும்போது, 'ஆசை யாரைத்தான் விட்டது... இவர்லாம் ஹீரோவா நடிச்சா யார் பார்ப்பா?' என்று நினைத்துக் கொண்டேன்.
ஆனால், அவர் அடுத்த சில வருடங்களில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். 13 படங்களில் ஹீரோவாக நடித்தும் விட்டார். சில வெற்றிப்படங்களும் கொடுத்து விட்டார். மூன்று படங்கள் ட்ராப்பாகியும் இன்றைய தேதியில் கைவசம் 6 படங்களில் நடித்துக் கொண்டும் இருக்கிறார்.
Last But not least. ஹீரோவானதும் சூளைமேடு வீட்டை காலி பண்ணிவிட்டு சாலிகிராமத்தில் ஒரு வி.ஐ.பியின் வீடு விலைக்கு வந்தபோது, அதை வாங்கி அங்கு குடியேறியும் விட்டார்.
(சம்பவங்கள் Loading..!)