அந்தக் காலத்து சினிமாவுல இப்போ இருக்கிற மாதிரி ஆயிரத்தொரு வில்லன்கள் கிடையாது. நம்பியார், அசோகன், வீரப்பா, மனோகர் இப்படி குறிப்பிட்ட சில முகங்கள்தான் மிரட்டி மெர்சல் பண்ணும். அதுவும், கர்ஜிக்கிற சிங்கம் முன்னாடி, சிவப்பு விளக்கு ஒளியில ‘க்ளோஸப்புல’ கொள்ளையடிக்க இல்லன்ன ஹீரோவை பழிவாங்கத் திட்டம்போடும் பாருங்க நமக்குப் பீதி பிச்சுக்கும். அந்த காலக்கட்டத்துல வந்த இங்கிலீஸ் படத்துல இன்ஸ்பயராகி சில ’கெளபாய்’ ஹீரோக்கள் தமிழ்ல வந்தாங்க.
அதை பிரபலப்படுத்தி கலவரப்படுத்தின முன்னோடி ஜெய்சங்கர்தான். ரெண்டுபக்க இடுப்புலயும் கைக்கு அடக்கமான தொங்கப்போட்ட துப்பாக்கி, குண்டுகள் செருகப்பட்ட பெல்டு, வெளிய தெரியிற டபுள் தையல்போட்ட பேண்ட் சர்ட், லேடீஸ் குடை அளவுக்கு தலையில தொப்பி. போறது, வர்றது, தூங்கறது, துணி துவைக்கிறது கூட குதிரையோடதான். ஹீரோவுக்கு முன்னாடி குதிரைக்கு அட்வான்ஸ் கொடுத்த சில படங்களைப் பார்ப்போம்.
1 . ’அன்று சிந்திய ரத்தம்’ னு ஒரு படம் அசோகன் மிகப்பெரிய கொள்ளைக்காரர். ஒரு கிராமத்துக் கோவில்ல இருக்கிற தங்கப் புதையலை கொள்ளையடிக்க அள்ளக்கைங்களோட திட்டம் போடுறாரு. அதுக்காக முதல் தவணையா அந்த கிராமத்து ஆட்கள் சில பேரை ’டிஷ்யூம்.. டிஷ்யூம்’னு சுட்டுக்கொன்னுட்டு ’என்னை எதிர்த்தா இதான் தண்டனை’ னு கெக்கே பிக்கேனு வில்லத்தனமான சிரிச்சிட்டு போறார். அப்போ, அந்த கிராமத்தைக் காப்பாத்த தன்னை ஒரு அனாதைனு சொல்லிக்கிட்டு வர்றவர்தான் ஹீரோ ஜெய்சங்கர்.
அடுத்து என்ன வில்லன் ஹீரோவுக்கு சபதம் போடறதும், ஹீரோ பதிலடி கொடுக்கறதும்னு ஒரே தமாஷா போகும். கடைசியில அந்த கொள்ளைக்காரன்களை ஒழிச்சி, கோயிலை மீட்டு அந்த மக்கள்கிட்ட சேர்ப்பாரு. ஒரு கேரக்டர் பட டைட்டிலை சம்பந்தப்படுத்தி டயலாக் பேசறதோட படம் முடியும். கிராம மக்கள், வில்லன் கோஷ்டின்னு மொத்தமே அறுபது பேர் இருக்குற படத்துல ஆயிரம் தடவை ’டிஷ்யூம்.. டிஷ்யூம் சவுண்டு வரும். அந்த அளவுக்கு ’சைடு எபெக்ட்’ ல வேலை பார்த்திருப்பாங்க..
2 . விஜயலலிதா… விஜயலலிதான்னு ஒரு நடிகை. விஜயசாந்திக்கு முன்னாடியே பறந்து.. பறந்து ஃபைட் பண்ணி, சக ஹீரோக்களுக்கு சரக்கு மாதிரி டஃப்பை டம்ளர்ல ஊத்திக் கொடுத்தவங்க. அவங்க நடிச்ச படம்தான் ’ரிவால்வர் ரீட்டா’. சைடுல ரிவால்வார், முரட்டு காஸ்ட்யூம், தாவ, தவ்வ ஒரு குதிரை. லலிதா தன்னோட பத்து வயசுல கண்ணு முன்னாடி அப்பா, அம்மா, அக்கான்னு குடும்பத்தை சுட்டுக்கொன்ன நாலு பேரை தேடிதேடித் சுட்டுப் பழி வாங்குறதுதான் கதை. லலிதா பெரிய பொண்ணு ஆனதும், ’உங்களை கொன்னவனுங்ளைக் கொன்னு அவனுங்க குருதிய தெளிச்சி கோலம் போடுறேன்’னு சபதத்த சமாதில ரிஜிஸ்டர் பண்ணுவாங்க.
அப்றம் பத்து வகை பிஸ்டல்கள்ல படுத்து, உருண்டு, குனிஞ்சு. குப்புறப்படுத்துக்கிட்டு… பாட்டில், பலூன், பானைனு கொலைகாரனுங்க போட்டோ ஒட்டி, சுட்டு ட்ரெய்னிங் எடுத்துக்குவாங்க.. கடைசியா வானத்துல எதையாச்சும் தூக்கிப்போட்டு சுடறது பிஸ்டல் எக்ஸாம்ல பாஸாகிற மாதிரி. உடனே விசில் அடிச்சதும் எங்கேர்ந்தோ ஒரு குதிரை ஹி..ஹி..னு கனைச்சிக்கிட்டு ஓடிவரும். அதுல ஏறிப்போனாங்கன்னா படம் முடியறவரைக்கும் ஒரே ’டிஸ்யும்.. டிஸ்யும்’தான்.
3. ஜெய்சங்கர், விஜயலலிதாவே இடுப்புல துப்பாக்கிய தொங்கவிட்டு அலையும்போது எம்.ஜி.ஆர் மட்டும் என்ன ஏப்பை சாப்பையா..? அவரும் ’வேட்டைக்காரன்’ படத்துல ரெண்டு பக்கமும் கன்னை செருகிகிட்டு குதிரைய கனைக்கவிட்டவர்தான். ஆனா, இவருக்கான பிரச்சனை கோவில் புதையலோ, பேங்க் கொள்ளையோ இல்லை. ஒரு நாள் இவர் வேட்டையாட துப்பாக்கியோட காட்டுக்குப்போக, அந்த நேரம் பார்த்து எஸ்டேட் பத்திரங்களையும், பணத்தையும் நம்பியார் திருட, அவர்ட்டேர்ந்து அசோகன் லவட்டிக்கிட்டுப்போய் மறைச்சி வைக்க, எஸ்டேட் பத்திரம் அசோகன்கிட்ட இருக்கிற விஷயம் தெரிஞ்ச எம்.ஜி.ஆரோட அம்மா பதர்றாங்க.
அம்மா அழுதா எந்த புள்ளைக்காச்சும் தாங்குமா..? அதுவும், தலைவர் தாய்ப்பாசம் காட்டுறதுல ஆஸ்கார் விருது அஞ்சாறு வாங்கக்கூடியவராச்சே. ’கவலைப்படாதம்மா எஸ்டேட் பத்திரம், பணம் ரெண்டையும் பத்திரமா மீட்டு பீரோவுல வைக்கிறேன். பெரிய பூட்டு வாங்கி வை’ ங்கிற மாதிரி டயலாக் பேசுவாரு. அப்றம்.. ஹீரோ இல்லையா..! படம் முடியுறப்போ சொன்ன மாதிரி செஞ்சு நல்ல பேரு எடுக்கிறதோட, எம்.ஜி.ஆர் மாதிரி எனக்கு ஒரு பிள்ளை இல்லையேன்னு தாய்குலங்களை ஏங்கவும் வெச்சிருவாரு.
4 . ’தாய் மீது சத்தியம்’ ரஜினி ஹீரோவாவும் ஸ்ரீபிரியா ஹீரோயினாகவும் நடிச்ச படம். ரஜினியோட அப்பா ஒரு வீட்டுல வேலை செய்யறார். அப்போ அந்த வீட்டுல கொள்ளையடிக்க ரெண்டு பேரு வர்றானுங்க. மறைஞ்சி நின்னுட்டு இருந்த ரஜினி அப்பாவைப் பிடிச்சிக் கேட்க, ’பையன் கல்யாணத்துக்கு என் ஓனர்கிட்ட பணம் கேட்டேன் தரலை. அதனால திருட வந்தேன்’னு சொல்லிட்டு, ’நானே திருடிட்டு வந்து தர்றேன் மூணு பேரும் பங்கு பிரிச்சுக்கலாம்’னு சொல்லி வீட்டுக்குள்ள போன ரஜினி அப்பா. நகை, பணத்தை எடுத்து அந்த வீட்டுலயே மறைஞ்சிருந்து கொள்ளைக்காரனுங்க போனதும், முதலாளியம்மாகிட்ட ஒப்படைக்கிற விசுவாச வேலைக்காரனா இருக்காரு.
கடுப்பான கொள்ளைக்காரனுங்க ரஜினியோட அப்பா, அம்மா. தம்பியாட்டம் வளர்க்கிற நாயை சுட, சாட்சிக்கு ஆள் வேணும்ல அதனால நாய் மட்டும் பிளைச்சுக்குது. அப்பாவியா இருந்த ரஜினி அப்புறம் சிலம்பம், கராத்தே, மான்கொம்பு, அரை பல்டி, அந்தர் பல்டியோட துப்பாக்கி சுடவும் கத்துக்கிறார். அடுத்து, இன்னொரு கேரக்டரா குதிரையும் பட பட்ஜெட்ல சேர, சைடுல செருகின ரிவால்வரோட, அடையாளம் காட்டச்சொல்லி, ரெண்டு வாயில்லா ஜீவன்களையும் தெருத்தெருவா கூட்டிப்போயி வில்லன்களை பழி வாங்குவாரு சூப்பர் ஸ்டார்.
5 . ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் 2கே கிட்ஸ்ங்களை குஷி படுத்திக் குதூகலிக்க வந்த படம்தான் ’இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்’ லாரன்ஸ் மாஸ்டர் பழைய ஜெய்சங்கர் காஸ்ட்டியூமை போட்டோல காட்டிப் புதுசா தைச்சி போட்டிருப்பாரு. லாரன்ஸ் வேலை பார்த்துட்டு இருந்த இடத்துல காஸ்ட்லி வைரம் காணாமப்போக, அதை கொண்டுவந்துகொடுன்னு ஓனர் டார்ச்சர் பண்றார்.
இன்னொரு பக்கம் ஒரு கிராமத்துல லாரன்ஸ் முக ஜாடைல வாழ்ந்த சிங்கம்ங்கிற மாவீரன் திடீர்னு மிஸ்சிஸாக, அவனை மாதிரி இருந்த பயந்தாகொள்ளி புதுடிரஸ் லாரன்ஸை கிராமத்து மக்கள்கிட்ட ஓல்டு சிங்கம் மாதிரி நடின்னு கூட்டிட்டுப்போகுது ஒரு கிழட்டு குரூப்.
அடுத்து, இடுப்புல ரிவால்வரை செருகிகிட்டு லாரன்ஸ் பண்றதெல்லாம் ரவுசு ராக்கெட். சீன்கள் சிலதுல தானா சிரிப்பு வரும். சிலதுல கிச்சுகிச்சு மூட்டினாத்தான் வரும். இறுதியில கிராமத்து எதிரியான இரும்புக்கோட்டை வில்லனை துவம்சம் பண்ணி ஜெயிக்கிறார் நியூ சிங்கம். இந்தப் படத்துல செட்டுக்கும், டிரஸுக்கும்தான் அதிக கரன்சி கரைஞ்சிப்போயிருக்கும்.
- எம்.ஜி.கன்னியப்பன்.