1 . எலிமெண்ட்ரி ஸ்கூல்ல மாறுவேடப் போட்டிக்கு அண்டை வீட்டு அக்காக்களோட பாவாடை தாவணிய சுத்திகிட்டு ’டமுக்கு டிப்பான் ஐயாலோ.. டமுக்கு டிப்பான் ஆயாலோ ஏ.. சிங்கி’ ன்னு பாட்டுப் பாடி, பஸ்ட்டு பிரைஸா சோப்பு டப்பா வாங்குற சின்னப்பையனோட அதே ஆர்வத்தோட கமல் இன்னைக்கும் இருக்கார்னா மாங்கு… மாங்குன்னு மாறுவேஷம் மேல அவர் வெச்சிருக்கிற மரியாதைதான்.
அவர் போட்ட மாறுவேஷ கெட்டப்பை கொட்டி எண்ணினா நாள் முழுக்க நாக்கு தள்ளுற வரைக்கும் எண்ணலாம். எத்தனையோ வேஷம் போட்டிருந்தாலும் ’ஒன்பது வேஷம் அப்பே… ஒன்பது வேஷம்’னு ’தசாவதாம்’ படத்துல ஒவ்வொரு வேஷத்துக்கும் ’கெக்கே பிக்கே’ ன்னு நமக்கு சிரிப்பு ஓயல. அவரோட ரசிகர்களே உலக நாயகனுக்கு இந்த ’ஒவுத்திரியம்’ தேவையான்னு அடிச்ச நெகடிவ் கமெண்டுகளை ’நோ டென்சன் ஜில் பண்ணு’ ன்னு அடுத்து மாறு வேஷப் போட்டிக்கு தயாராகிடுவார். நமக்கு என்னான்னா இந்தியன் பார்ட் – 2 படத்துல வர்ற வயசான கமல் கெட்டப்பை தாங்கிக்கிற சக்தியை எல்லாம் வல்ல இயற்கை கொடுக்கணும் அதான்.
2. கமல் அப்படினா… கொரியன், கொங்கனி, பேஜ்பூரி, பேல்பூரின்னு எந்த மொழியிலயும் விஜய்க்கு புடிக்காத வார்த்தை மாறுவேஷம். சைடு வகிடு எடுத்து தலை சீவிக்கிறதும், கன்னத்துல மையில மரு வெச்சிக்கிறதுதான் மாறுவேஷம்னு பால்ய வயசுல எந்த பாவியோ சொன்னதை இன்னைக்கு வரைக்கும் நம்பிகிட்டு இருக்கிறவர் விஜய்.
டிரஸ்ல எத்தனை மாஸ் வேணாலும் காட்டுங்க. பேஸ்ல மட்டும் கை வெச்சிடாதிங்கன்னு ஸ்ட்ரிக்டா கண்டிஷன் கட்டையப் போட்ருவாரு. மாறுவேஷத்துல அவரையே அவர் கண்ணாடியிலப் பார்த்து சிரிச்சிருவோம்கிற பயமா கூட இருக்கலாம். ஆனாலும், அவரோட ரசிகருங்க தளபதி என்னைக்காச்சும் மாறுவேஷம் போடுவாரு. அன்னைக்கு தளபதிய தலை தீபாவளிக்கு வந்த புது மாப்பிள்ளை மாதிரி கொண்டாடலாம்னு தவுஸன்வாலா பட்டாசு பண்டலோட காத்திருக்காங்க. அதை என்னைக்கு கொளுத்தப் போறாங்கன்னுதான் தெரியலை.
3. மாறுவேஷம்னா நம்ம நடிகர் திலகத்தை விட்டுட்டு ஒண்ணும் பண்ண முடியாது. மாறுவேஷம்னதும் ’தப.. தபா’ ன்னு ஓடிவந்து முன்னாடி நின்னுருவாரு. அப்பன், புள்ள, தாத்தா, சித்தப்பா, கொள்ளுத் தாத்தா, குழந்தை கெட்டப் வரைக்கும் அவரே போடணும்னு மேக்கப் பவுடர்லயே படுத்து தூங்குவாரு.
ஒவ்வொரு கேரக்டருக்கும் வேரேஷன் காட்டணும்கிறதுக்காக நடிப்பாரு பாருங்க.. ஹய்யகோ… அப்டி ஒரு நடிப்பு. ஒரே படத்துல 25 கெட்டப்புல வர்றிங்கன்னு சொல்லிருந்தாக் கூட ’அசால்ட்டா பண்ணிருவோம்’ னு துணிமணிகளோட ஸ்டுடியோவுல வந்து நின்னுருப்பாரு. நல்லவேளை அதுக்கு நமக்குக் குடுத்து வைக்கலை.
ராமராஜன் கூட பாட்டால மாட்டை மட்டும்தான் அடக்கினார். ஆனா, ’திருவருட்செல்வர்’ படத்துல வயசான திருநாவுக்கரசர் கெட்டப்புல ’மணிக்கதவே தாழ் திறவாய்’ னு அத்தாத்தண்டி பூட்டையே திறப்பார். அதைப் பார்க்கிறப்போ வடிவேல் மாதிரி கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டமோ’ ன்னு அவரே ஃபீல் பண்ணிருப்பாரு.
4. மாறுவேடப் போட்டிக்கு நடிகர் சூர்யா கொஞ்சம் டிரைப் பண்ணார். ஆனா, மாறுவேஷம் மண்டை இடியாப்போச்சி. இந்த கெட்டப் தேவலாம்பான்னு இருந்தது ’கஜினி’ படத்துல வர்ற ’மெமரிலாஸ்’ சூர்யாதான். மொட்டை தலையுமா, வெட்டு முகமா அந்த படத்துக்கு கொஞ்சம் பொருத்தமா இருந்ததால மனசு ஏத்துக்குச்சி..
சிரிப்பு ஏதும் வரல. அதே மாதிரி ’ஏழாம் அறிவு’ ல சடை முடியோட வந்தாலும் ’சரி..சரி’ ன்னு இருந்துச்சி. ஆனா, அதுக்கு முன்னால ’ஆதவன்’ னு ஒரு படத்துல சூர்யா வந்தாரு பாருங்க. கே.எஸ்.ரவிகுமாருக்கு சூர்யா மேல என்ன காண்டோ..தெரியலை. சின்னப்பையன் உடம்புல சூர்யாவோட பெரிய தலைய ’ரெட்யூஸ்’ பண்றேங்கிற பேர்ல ஜீரணிக்க முடியாத அளவுக்கு தாமாசு பண்ணிருப்பாரு. அந்த கொடுமைய இப்ப நெனைச்சாலும் குந்தி.. குந்தி சிரிக்கலாம்.
சமீபத்திய சந்தோஷம் என்னென்னா… பாலா படமான ’வனங்கான்’ ல சூர்யா நடிக்கலேங்கிறதுதான். வித்தியாசம்ங்கிற பேர்ல பஞ்சப்பரதேசியாவோ, பைத்தியமாவோ, அம்மனமா நடு ரோட்டுல ஓட விடுறதுக்கு முன்னாடி சூர்யா எஸ்கேப் ஆகிருக்கார்ங்கிறதுதான்.
5 . விக்கை விதவிதமா மாட்டுனா வித்தியாசம் வந்துடுங்கிறதுதான் சத்யராஜ் பாணி. இவருக்கும் லேசா மாறுவேஷ வியாதி இருந்திருக்கு. அதை பல படங்கள்ல பாத்திருப்போம். ஒட்டுன மீசையும், பசை தடவின தாடியுமா ’நடிகன்’ படத்துல பிரிஞ்சுக்கிட்டு தனியா தெரிஞ்சாலும் அது கதையிலயே மாறுவேஷன்ங்கிறதால சரி போனா போவுதுன்னு இருந்தோம்.
ஆனா, அவரே இயக்குனராவும் களமிறங்கி கடுப்பேத்துன ’வில்லாதி வில்லன்’ ங்கிற படத்துல மூணு வேஷத்துல வந்து அவருக்கே அவர் டஃப் கொடுப்பாரு பாருங்க. ’யப்பா சாமி காப்பாத்து’ ன்னு கதற வெச்சிட்டார். அதுக்கப்புறம் ’கட்டப்பா’ வரைக்கும் கேவலமான கெட்டப்பே போடலைன்னுதான் சொல்லணும். சினிமா ரசிகர்கள் மேல அவருக்கும் அக்கரை இருந்திருக்கும்தானே.
6. எம்.ஜி.ஆர் போட்ட எல்லா மாறுவேஷமும் காமெடிதான். அண்ணன் வீரனா இருக்கும்போது தம்பி கோழையா இருப்பான். தம்பி வீரனா இருக்கும்போது அண்ணன் கோழையா இருப்பான். இதான் அவரோட கெலிக்கிற ஃபார்முலான்னு அதையே வெச்சி பல படங்களை ஓட்டிட்டார். அதிலையும் ’நாளை நமதே’ வுல ஒரு கெட்டப்புக்கு முகத்துல மைய பூசிக்கிட்டு வந்து மச மசன்னு நிப்பாரு.
அதிலையும் ’படகோட்டி’ படத்துல கூம்பு தொப்பிய தலையிலயும்,, வீசாத வலைய தோள்லயும் போட்டுகிட்டு கடற்கரை ஓரமா நடையா நடப்பாரு. இந்த கொடுமையெல்லாம் தாண்டி வந்தவங்களுக்கு இப்ப யாரு மாறுவேஷம் போட்டாலும் சகிச்சிக்கிற தன்மை வந்துருக்கும் அப்படி தன்னோட மாறுவேஷத்தால நம்மை பக்குவப் படுத்திட்டுப் போயிருக்காரு தலைவரு.
7. மாறுவேஷம்னாலே ’மாப்ளே நமக்கு ரெண்டு கிலோ சொல்லு’ ன்னு ரெண்டு விரலைக் காட்டுறார்னா அது நம்ம ஆளு வடிவேலுதான். எந்த கெட்டப்பா இருந்தாலும் அதுல பொருந்திப் போயிடுவாரு. ’முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ படத்துல காவி கட்டிகிட்டு, சாமியாரா வந்து சிரிப்பு கிலுகிலுப்பை ஆட்டுறதா இருக்கட்டும் ‘.பாட்டாளி’ படத்துல லேடீஸ் கெட்டப்புல கீச்சு…கீச்சு’ ன்னு பெண் குரல்ல நக்கலடிச்சி நையாண்டி பண்றதா இருக்கட்டும்.
’போக்கிரி’ ல போட்ட எல்லா கெட்டப்புலயும் கொண்டைய மறைக்க முடியாத மாதிரி நாம சிரிப்பை அடக்க முடியாத அளவுக்கு இன்னைக்கு வரைக்கும் தமாசு காட்டிட்டு இருக்குன்னா… அது கெட்டப்புக்கு கெட்டப்பே கொடுத்த கொடைன்னுதான் சொல்லணும். என்னதான் இருந்தாலும் 23 ஆம் புலிகேசியை அடிச்சிக்க இன்னொரு மாறுவேஷம் இருக்கா என்ன…? தல.. தலதான்.
- உத்தமபுத்திரன்