பத்திரிகை வாழ்க்கையில் பல சம்பவங்களைப் பண்ணியிருக்கிறேன். அதில் மிக முக்கியமான சம்பவம் அந்த பார்ட்டி நடிகரின் கல்யாணத்தை நிறுத்தியது. உடனே என்னை வில்லன் என்றெல்லாம் நினைக்க வேண்டாம் பாஸ். கதையே வேறு கதை! வாங்க சுருக்கமா சொல்றேன்..!
அது ஃபேஸ்புக் வந்த புதிது. அனைத்துலகுக்கும் ஆர்க்குட் போரடித்துவிட பல வி.ஐ.பிக்கள் ஃபேஸ்புக்கில் கடை விரித்து, நட்பு வட்டத்தை பெரிதாக்கிக் கொண்டார்கள். தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் அப்போது எனக்கு பேட்டி ஒன்றின்மூலம் அறிமுகம். அதன் பலனால் ஃபேஸ்புக்கிலுமலென் நட்புப் பட்டியலில் இருந்தார்.
யூத்துகளின் பல்ஸ் பிடித்து சினிமா எடுப்பதில் அவர் கில்லி. தமிழ் சினிமாவில் மளமளவென வளர்ந்து வரும் வேளையில் அடுத்தடுத்து இரண்டு பேட்டிகள் அவரை எடுத்ததால் நான் அவருக்கு நல்ல நட்பானேன். போன் பண்ணினால் தவறாமல் எடுத்து விடும் அளவுக்கு அவரின் குட்புக்கில் இருந்தேன்.
இயக்குநர் வயதில் என்னைவிட மூத்தவர்தான் என்றாலும், ''சார்... சொல்லுங்க...!'' என எப்போது கால் பண்ணினாலும் மரியாதையோடு அழைப்பார். இப்போதெல்லாம் ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் அவர், அந்நாளில் ஏதேனும் பட அப்டேட் என்றால் எனக்கு முதலில் கால் பண்ணும் அளவுக்கு நெருக்கமாக இருந்தேன்.
எங்கள் நட்பில் விரிசல் வருவதற்குக் காரணமே அவருடைய குடும்ப உறுப்பினர் ஒருவர்தான். அவரும் சில பல படங்களில் நடித்தும் இருக்கிறார். சுமாருக்கும் கீழேதான் நடிப்பார் என்றாலும் நம் இயக்குநரைப்போல கலகலவென காமெடி பண்ணுவதில் கில்லாடி. இருவரும் ராஜாவீட்டு கன்னுக்குட்டிகள் போல செல்வச் செழிப்போடு வளர்ந்தவர்கள் என்பது அவர்களின் வாழ்க்கைமுறையில் தெரியும்.
அப்போது நான் செய்த ஒரு காரியம் எங்கள் நட்புக்குள்ளே நிரந்தர விரிசலை உண்டு பண்ணும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. பத்திரிகையில் புதுப்பொலிவுக்கான புதுப் பகுதி வந்தபோது, கலர்ஃபுல்லான போட்டோக்கள் தேவைப்பட்டது.
நான் அந்த நடிகரின் ஃபேஸ்புக்கில் இருந்த சில கொண்டாட்டமான புகைப்படங்களை எடுத்து போட்டோ கொலாஜ் பண்ணி வார இதழில் பிரசுரமாகிவிட்டது. அதில் நான் எழுதியிருந்த கேப்ஷன்தான் கொஞ்சம் பேக் ஃபயர் ஆகிவிட்டது. 'நம்ம ஆளு தமிழ் சினிமாவின் பார்ட்டி பாய்.... எங்கு பார்ட்டி நடந்தாலும் முதல் ஆளாய் தம்ஸ்-அப் காட்டி ஆஜராகிவிடுவார். அப்புறம் விடியவிடிய முடிய முடிய என்ஜாய் பண்ணுவார்' என அவர் சரக்கடிக்கும் போட்டோக்களோடு எழுதி விட்டேன். பிரசுரமாகி இதழ் வந்த அதே வாரம் ஒருநாள் இரவு எனக்கு ஃபேஸ்புக்கில் மிக நீண்ட மெஸேஜ் ஒன்றை அனுப்பியிருந்தார் அந்த இயக்குநர்.
''வணக்கம் சார்...நல்லா இருக்கீங்களா..? நாங்க நல்லா(வே) இல்லை!' என்று வடசென்னையில் கிஷோரின் மனைவி சொல்வாரே... அதேபோல, ஆரம்பித்து, அந்த இளவல் நடிகரின் கல்யாணமே நின்று போன விஷயத்தை பொருமலோடு எழுதியிருந்தார்.
ஆம். அந்த வாரம் சிங்கப்பூரிலிருந்து ஒரு பெரிய பணக்கார குடும்பம் அந்த இளசு நடிகரை சம்பந்தம் பேசுவதற்காக சென்னை வர இருந்தார்களாம். சரியாக பத்திரிகையில் சரக்கு பாட்டிலோடு பையனின் போட்டோ வந்ததும், அந்தப் பெண், 'எனக்கு இந்த ஆள் வேண்டாம்ப்பா!' என சொல்லி பயணத்தையே கேன்சல் பண்ணி விட்டது. இதை இன்பாக்ஸில் நிறைய வார்த்தைகளோடு அந்த இயக்குநர் சொல்லியிருந்தார்.
'எங்கள் நட்புப் பட்டியலில் நீங்கதான் இருக்கீங்க? அதனால உங்களைத்தவிர வேறு யாரும் அந்த போட்டோவை எடுத்திருக்க மாட்டாங்க. நல்லா இருங்க!' என்று சாபம் விட்டிருந்தார். பதறிப்போய் மன்னிப்பு கேட்க நான் கால் பண்ணியபோது போனை கட் செய்தார். காலை எடுக்கவே இல்லை. விளக்கம் கொடுத்து அவருக்குப் புரிய வைக்க வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. நான் நீண்ட மெஸேஜை மன்னிப்பாய் கேட்டிருந்தேன். மெஸேஜைப் படித்தும் பதில் அவர் அனுப்பவில்லை. அப்படியே வருடங்கள் உருண்டோடி விட்டது.
சமீபத்தில் அந்த இயக்குநரை ஒரு பார்ட்டியில் பார்த்தேன். பழைய சம்பவங்கள் எனக்கு அசௌகரியத்தை உண்டு பண்ண அவரை அந்தப் பார்ட்டி முழுவதும் நேரில் பார்ப்பதைத் தவிர்த்தேன். அவர் நிச்சயம் என்னை மறந்திருக்க மாட்டார் என நினைத்தேன். ஆனால், யதேச்சையாக நேரில் பார்த்தபோது நான் புதிதான நபரைப்போல அவரின் லேட்டஸ்ட் ஹிட்டுக்கு வாழ்த்தி கைகொடுத்துவிட்டு கிளம்ப எத்தனித்தேன்.
''சார் நீங்கதானா அது..? நல்லா இருப்பீங்களா சார் நீங்க..? என்னது உங்களை மறக்குறதா..? நெவர்... எப்படி சார் மறக்க முடியும். இதோ இவன் இன்னும் பேச்சுலரா சுத்துறான் பாருங்க உங்களால...!'' என கேட்டே விட்டார். ஆனால், நேரில் அல்ல... கனவில். ஆமாம் பாஸ். மனசுக்குள் அவர் பேசுவதுபோலவே அன்று இரவு கனவு வந்து தொலைத்தது.
இருவரின் ஃபேஸ்புக் நட்பு வட்டத்தில் இருந்ததால் போட்டோக்களை அவர்கள் அனுமதி இல்லாமல் எடுத்தது என் தவறுதான். அதற்கு இந்த தண்டனை தேவைதான் என்று நினைத்துக் கொண்டேன். அதன் பிறகு சின்ன விஷயம் என்றாலும் அனுமதி பெற்றுதான் செய்ய ஆரம்பித்தேன். அந்த அளவுக்கு எனக்குப் படிப்பினையைத் தந்தது அந்த சம்பவம்!
(சம்பவங்கள் Loading..!)